புதன், 19 மே, 2010
சூர்யாவின் அகரம் பவுண்டேசன் மூலம் நிதி உதவி!
சென்னை: ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்துள்ள இந்த நேரத்தில், மேல்படிப்புக்கு கல்வி உதவி வேண்டும் மாணவர்கள் தன்னை அணுகலாம் என நடிகர் சூர்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக ப்ளஸ் டூவில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளுக்கு நடிகர் சிவக்குமார் நிதி உதவி செய்து வருகிறார்.
சூர்யா, நடிக்கத் துவங்கிய பிறகு அகரம் பவுண்டேசன் என்ற அமைப்பை உருவாக்கி, சிவக்குமார் செய்து வந்த கல்வி உதவியை விரிவாக்கினார். இதில் சூர்யாவின் சகோதரர் நடிகர் கார்த்தியும் இணைந்துள்ளார்.
அகரம் பவுண்டேசன் மூலம் நிதி உதவி பெற்று ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், மேற்படிப்புக்கு பண உதவி வேண்டும் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள சூர்யா, தேவைப்படும் மாணவர்கள் தன்னை அணுகுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நிதியுதவிக்காக அகரம் பவுண்டேஷனை அணுக வேண்டிய தொலைபேசி எண்: 98410-91000
ஐசிஐசிஐ வங்கியுடன் பேங்க் ஆஃப் ராஜஸ்தான் இணைப்பு!
மும்பை: பேங்க் ஆஃப் ராஜஸ்தான் வங்கி, ஐசிஐசிஐ வங்கியுடன் இணைக்கப்படவுள்ளது.
ராஜஸ்தான் வங்கியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தயாள் குடும்பத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த இணைப்புக்கு இரு வங்கிகளின் இயக்குனர்கள் குழுக்களும் அனுமதி அளித்துவிட்டன.
ஏற்கனவே தமிழ்நாட்டின் பேங்க் ஆஃப் மதுரை , மகாராஷ்டிராவி்ன் சங்லி வங்கி ஆகியவற்றை ஐசிஐசிஐ வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பேங்க் ஆஃப் ராஜஸ்தான் வங்கிக்கு நாடு முழுவதும் 500 கிளைகள் உள்ளன. ஒரு கிளைக்கு ரூ. 6.5 கோடி என்ற விகிதத்தில் இந்த வங்கியை ஐசிஐசிஐ வாங்கவுள்ளது.
பேங்க் ஆஃப் ராஜஸ்தானின் தற்போதைய பங்கு மதிப்பை விட அதிகமாகத் தர ஐசிஐசிஐ வங்கி முன்வந்ததைத் தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலை மும்பை பங்குச் சந்தையில் 1.45 சதவீதம் சரிந்தது.
அதே நேரத்தில் பேங்க் ஆஃப் ராஜஸ்தானின் பங்கு விலை 19.95 சதவீதம் அதிகரித்துள்ளது.
பேங்க் ஆஃப் ராஜஸ்தானின் பங்குகளை 10 ஆண்டுகளுக்கு முன் தயாள் குடும்பத்தினர் வாங்கினர். மிகவும் பழமை வாய்ந்த இந்த வங்கியை பெரிய வங்கியுடன் இணைக்குமாறு ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு பரிவர்த்தனை மையம் (செபி) ஆகியவை தயாளுக்கு நெருக்கடி அளித்து வந்தன.
மேலும் கடந்த மார்ச் மாதத்தில் பேங்க் ஆஃப் ராஜஸ்தானின் பங்கு பரிவர்த்தனைக்கு செபி தடை விதித்தது. மேலும் ரிசர்வ் வங்கி ரூ. 25 லட்சம் அபராதமும் விதித்தது.
அத்துடன் ரிசர்வ் வங்கியே இந்த வங்கிக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியையும் (சிஇஓ) நியமித்தது. மேலும் வங்கியின் இயக்குநர் குழுவில் 5 ரிசர்வ் வங்கி இயக்குனர்களும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டனர்.
Read: In English
இதுபோன்ற நெருக்குதல்களை சமாளிக்க முடியாமல் வங்கியை விற்கும் முடிவுக்கு வந்துள்ளது தயாள் குடும்பம்.
இந்த வங்கியை வாங்க ஸ்டேட் வங்கியும் போட்டியிட்டது. னால், ஐசிஐசிஐ வங்கி அளித்த தொகை அதிகமாக இருந்ததால் அதை தயாள் ஏற்றுக் கொண்டு அவர்களிடம் விற்க முன்வந்துவிட்டார்.
செவ்வாய், 18 மே, 2010
ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'!
பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் பொய் சொல்கிறார்களாம். லண்டனைச் சேர்ந்த அறிவியல் அருங்காட்சியகம் நடத்திய ஆய்வு இப்படிச் சொல்கிறது.
இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட அறிவியல் அருங்காட்சியக ஆய்வாளர்கள் குழு, ஆண்கள் ஆண்டுக்கு சராசரியாக 1092 பொய்கள் சொல்கிறார்களாம். பெண்களோ 728 பொய்கள்தான் சொல்கிறார்களாம்.
பொய் சொல்வதால் தங்களது மனது சங்கடப்படுவதாக 82 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், பொய்சொல்வதால் மனசாட்சி உறுத்துவதாக சொன்ன ஆண்களின் எண்ணிக்கை 70 சதவீதம்தான்.
மொத்தம் 3000 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் சொல்லும் டாப் 10 பொய்கள் - எனக்கு சிக்னல் (செல்போன்) கிடைக்கலே, வந்துக்கிட்டே இரு்ககேன், டிராபிக்ல மாட்டிக்கிட்டேன், ஸாரி, உன்னை பிரிந்து இருக்கவே முடியலை, நீ ரொம்ப ஸ்லிம்மா இருக்கே, இதுதான் எனக்குப் பிடித்தது...
நம்மூ்ர் ஆம்பளைஸ்களே, நீங்க என்னென்ன பொய் சொல்வீங்க..!
திங்கள், 17 மே, 2010
குஷ்புவை டிஸ்மிஸ் செய்தது ஜெயா டிவி!
குஷ்புவை டிஸ்மிஸ் செய்தது ஜெயா டிவி…
sசென்னை: நிர்வாகத்துக்கு சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று திமுகவில் சேர்ந்து விட்டதால், குஷ்பு நடத்தி வந்த ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்து அவரை தூக்கி விட்டதாக, ஜெயா டிவி அறிவித்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு முதல் ஜாக்பாட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஹட்ஸன் நிறுவனத்தின் ஆதரவுடன் நடக்கும் இந்த நிகழ்ச்சியை குஷ்புதான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் திடீரென முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நேற்றுமுன்தினம் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் குஷ்பு.
இதனால் ஜெயா டிவி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது குஷ்புவை அந்த நிகழ்ச்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜாக்பாட் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கூறுகையில், தொழில் வேறு, அரசியல் வேறு என்ற கண்ணோட்டத்தில் திமுகவில் இணைந்ததாக குஷ்பு தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி பார்க்க முடியாது. ஜெயா டிவியும் அப்படி பார்க்காது.
திமுகவில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட ஜாக்பாக்ட் நிகழ்ச்சி சம்பந்தமாக மீட்டிங் நடந்தது. அப்போது கூட அவர் அரசியல் ஆசை பற்றி தெரிவிக்கவில்லை. கட்சியில் சேரும் போது தெரிவிக்கவில்லை. தொழில் வேறு அரசியல் வேறு என்று நினைப்பதால் அப்படி செய்திருக்கலாம்.
ஆனால் நாங்கள், இனி ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு பங்கேற்கக் கூடாது என்பதில் உறுதியான, தெளிவான முடிவை எடுத்துள்ளோம். அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளோம்.
அவர் பங்கேற்ற 15 எபிசோடுகள் ஒளிபரப்பாகும் நிலையில் தயாராக உள்ளன. அதையும் ஒளிபரப்பப்போவதில்லை, என்று தெரிவித்துள்ளது.
குஷ்புவுக்கு அதிர்ச்சியாம்…
ஜெயா டிவியின் இந்த அறிவிப்பு தனக்கு அதிர்ச்சியை அளிப்பதாகக் கூறியுள்ளார் குஷ்பு.
ஜெயா டிவியிருந்து உங்களை டிஸ்மிஸ் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, யார் சொன்னது என்று ஆவேசமாக திருப்பிக் கேட்டார் குஷ்பு.
பின்னர் அவர் கூறுகையில், அரசியலையும் தொழிலையும் ஒன்றாகப் பார்க்கிறார்கள். நான் அப்படிப் பார்பதில்லை. தொழில்முறையில்தான் அணுகுகிறேன். அதனால்தான் இவர்களிடம் சொல்லிவிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை; திமுகவில் தன்னிச்சையாக இணைந்தேன்.
என்னை ஜாக்பாட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். நீக்கம் செய்யும் போது என்னிடம்தான் முதலில் தெரிவிக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை.
முதலில் என்னிடம் தகவல் தெரிவிக்கட்டும். அப்புறம் ஆலோசித்து என்ன செய்வதென்று கூறுகிறேன், என்றார்.
எழுத்தாளர் அனுராதா ரமணன் மரணம்!
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. அவரது இறுதி அஞ்சலி இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
அனுராதா ரமணனுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருதயத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்காக இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அதுபோல கடந்த 5-ந் தேதி வழக்கமான பரிசோதனைக்காக அனுராதா ரமணன் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரத்த சுத்திகரிப்பு (பிளட் டயலிசிஸ்) செய்யப்பட்டது.
இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 4.30 மணிக்கு அனுராதா ரமணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீடான திருவான்மியூர் வால்மீகி நகர், ராஜ கோபாலன் முதல் தெருவில் வைக்கப்பட்டுள்ளது.
அனுராதா ரமணனுக்கு சுதா, சுபா என 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். பேரன், பேத்திகளும் உள்ளனர். அனுராதா ரமணனின் மறைவு குறித்த தகவல் அறிந்ததும் மகள், தங்களது குடும்பத்துடன் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து சேர்ந்தனர்.
இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு அனுராதா ரமணனின் இல்லத்தில் இருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு பெசன்ட்நகர் சென்று அங்கு உள்ள மின்சார சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.
எழுத்தாளர் வரிசையில், பெண் எழுத்தாளராக மிகவும் பிரபலமானவரும், நாவல்கள் எழுதுவதில் புகழ்பெற்றவருமான எழுத்தாளர் அனுராதா ரமணன் நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், குறுநாவல்களையும், சிறுகதைகளையும் எழுதி உள்ளார். இவர் எழுதிய சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டன. அதுபோல பாசம், புன்னகை, அர்ச்சனை பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் உள்பட படைப்புகள் டி.வி. நாடகங்களாக்கப்பட்டன.
1978-ம் ஆண்டு சிறுகதைகளுக்கான போட்டியில் எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கழகம் சார்பில் சிறந்த தேசிய சமூக நல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது பெற்றவர் அனுராதா ரமணன்.
வெள்ளி, 14 மே, 2010
சர்கோஸியால் எனது செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பு- கார்லா ப்ரூனி புலம்பல்!
பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் சர்கோஸியை மணந்து கொண்டது முதல் எனது செக்ஸ் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது உடல் தேவையை போக்காமல் தனது பணியிலேயே பிசியாக இருக்கிறார் சர்கோஸி என புலம்பியுள்ளார் கார்லா.
இத்தாலியைச் சேர்ந்த மாடல் தான் கார்லா. பிரான்ஸ் அதிபர் சர்கோஸியை தீவிரமாக் காதலித்து கரம் பிடித்தவர். இவர்களது காதல் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இன்றும் கூட இந்த பரபரப்பு சற்றும் குறையாமல் விறுவிறுப்பாகவே போய்க் கொண்டிருக்கிறது.
இடையில் புதுக் காதலரை பிடித்து விட்டார் கார்லா என செய்திகள் வெளியாகின. இருப்பினும் இது புஸ்வாணமாகி விட்டது.
சமீபத்தில் வெளியான ஒரு நூலில், கார்லா கூறியதாக ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியிருந்தது.
அமெரிக்காவுக்கு சர்கோஸியுடன், கார்லா விசிட் அடித்தபோது, கார்லாவும், ஒபாமாவின் மனைவி மிஷலும் சந்தித்துப் பேசினர்.
அப்போது மிஷலிடம் கார்லா கூறுகையில், ஒருமுறை காலையில் நானும், சர்கோஸியும் படுக்கையில் பிசியாக இருந்தோம். அப்போது ஒரு வெளிநாட்டு அதிபர் சர்கோஸியைப் பார்க்க வந்திருந்தார்.
இருப்பினும் எங்களால் படுக்கை அறையிலிருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் அந்த அதிபரை காக்க வைக்க நேரிட்டது. உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் நேர்ந்துள்ளதா என்று கேட்டு மிஷலை நடுங்க வைத்தார் கார்லா.
கார்லாவின் கேள்வியைக் கேட்டு சற்று ஆடிப் போன மிஷல், பின்னர் சுதாரித்து சிரித்தபடி அப்படியெல்லாம் எனக்கு நேர்ந்ததில்லை என்று கூறி நழுவினார்.
இந் நிலையில் சர்கோஸியை மணந்தது முதல் செக்ஸ் தேவை பூர்த்தியாகாமல் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார் கார்லா. இதுவும் ஒரு நூலில்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 வயதாகும் கார்லா, இதுகுறித்து ஜோனாதன் ஆல்டர் என்பவர் எழுதியுள்ள நூலில் கூறுகையில், எனது கணவர் சர்கோஸி தனது பணியில்தான் தீவிரமாக உள்ளார். இதனால் எனது உடல் தேவைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.
எனக்கு விருப்பமான வரை செக்ஸில் ஈடுபடுவதை அவரது வேலைப்பளு தடுக்கிறது. இதனால் எனது செக்ஸ் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலேயே உள்ளன என்று கூறியுள்ளார் கார்லா.
கார்லா செக்ஸ் மீது அதிக மோகம் கொண்டவர். ஒரு ஆணுடன் மட்டும் உறவு கொள்வது மிகவும் போரடிக்கும் விஷயம் என்று முன்பு ஒரு முறை கூறியிருந்தார்.
கடந்த காலங்களில் இங்கிலாந்து ராக் நட்சத்திரங்களான மைக் ஜேகர், எரிக் கிளாப்டன், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் லாரன்ட் பேபியஸ் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர்தான் கார்லா என்பது குறிப்பிடத்தக்கது.
கணினியில் பணிபுரிபவர்களுக்கு!
கணினியில் அமர்ந்து பணியாற்றுபவர்கள் தற்போது உடல் நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.
உடலில் எந்த பாகம் ஒரே விதமான நிலையில் இருந்து பணியாற்றுகிறதோ, அதற்கு எதிர்புற அசைவை சில நிமிடங்களாவது கொடுங்கள். கண்களை சுழல விடுதல், கை விரல்களை பின்புறமாக மடக்குதல், கழுத்தை சுற்றுதல் போன்றவற்றை செய்யலாம்.
கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோடின் ஆகியவை எடுத்துக் கொள்ளவும்.
கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் அவ்வப்போது மணிக்கட்டிற்கு ஓய்வு கொடுங்கள்.
கால்களை நீங்களாகவே நன்றாக மசாஜ் செய்யுங்கள் இளமையுடன் உங்கள் கால்கள் இருக்க இதுவே சிறந்த வழி.
முதல்வர் ‘ஆசியுடன்’ திமுகவில் சேரும் குஷ்பு!
சென்னை: காங்கிரஸ் கட்சி எனக்குப் பிடிக்கும், ராஜீவ் காந்தி படங்களை என் படுக்கையறையில் மாட்டியிருந்தேன் என்று கூறி, காங்கிரஸ் தலைவர்களை உசுப்பேத்திய நடிகை குஷ்பு, திடீரென்று திமுகவில் இன்று இணைவதாக அறிவித்துள்ளார்.
தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமான குஷ்பு, அதன்பிறகு பல சர்ச்சைகள், கிசுகிசுக்களில் சிக்கினார். ஆனால் தனது அரசியல், திரையுலக செல்வாக்கால் அவற்றிலிருந்து மீண்டு வந்தார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கற்பு பற்றி புதிய இலக்கணம் கூறினார். தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்த சந்தேகத்தையும் எழுப்பினார்.
தமிழ் அமைப்புகள் என்னதான் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவற்றையெல்லாம் ஓரங்கட்டும் விதமாக குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்தது உச்ச நீதிமன்றம். குஷ்பு மீதான 22 வழக்குகளைத் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், குஷ்பு காங்கிரஸில் சேரப் போவதாக கூறப்பட்டது. இதனால் மகிழ்ந்து போன காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, சுதர்ஸனம் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் குஷ்புவை வரவேற்று மாறி மாறி அறிக்கைகள் கொடுத்தனர்.
ஆனால், திமுக அரசு குஷ்புவை எம்எல்சியாக்கத் திட்டமிட்டது.
இப்போது திமுகவில் சேரப் போவதாக அறிவித்துள்ளார் குஷ்பு. சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் இறுதிநாளான இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுக உறுப்பினராக சேருகிறார் குஷ்பு.
மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் செல்லும் அவர், முதல்வரிடம் ஆசி பெற்று திமுகவில் இணைகிறார்.
அடுத்த சில தினங்களில் அமையவிருக்கும் சட்ட மேலவையில், திமுக எம்எல்சியாக அவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது குஷ்புவுக்கு பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
திமுகவில் சேர்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது! – குஷ்பு
திமுகவில் சேர்வது குறித்து குஷ்பு கூறியதாவது:
“அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறுவதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
தமிழக் முதல்வர் டாக்டர் கலைஞர் மீது எனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு. அதனால் நான் இன்று மாலை அவர் முன்னிலையில் திமுகவில் இணைகிறேன்.
இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன். திமுகவில் இணைந்த பிறகு அதிகாரப்பூர்வமாக மேலும் இது குறித்து விரிவாகப் பேசுகிறேன். தமிழக மக்களின் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. அரசியலிலும் என்னை வரவேற்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்”, என்றார் குஷ்பு.
வெள்ளி, 7 மே, 2010
கிரீஸ்... ஒரு தேசம் திவாலான கதை!
ஏதென்ஸ்: ஐரோப்பாவின் மிகப் பெருமைக்குரிய சேதம் கிரீஸ் எனும் கிரேக்கம். உலக நாகரிகத்தின் பிறப்பிடமாகப் பார்க்கப்பட்ட நாடு.
பொருளாதார வளர்ச்சியிலும், அரசியல் ஆளுமையிலும் உலகின் பெரிய வல்லரசுகளுக்குச் சமமான அந்தஸ்து பெற்ற கிரீஸ் இன்று மொத்தமாக திவால்!.
முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது அந்த நாடு. வர்ணிக்க முடியாத அளவு மோசமான பணவீக்கம், மைனஸ் 3 ஆக பயமுறுத்தும் ஜிடிபி வீழ்ச்சி, மலைக்க வைக்கும் வெளிநாட்டுக் கடன், எங்கும் வேலையின்மை ஓலம்... இனி மீள முடியுமா என்ற பயத்திலும் சோகத்திலும் மக்கள். நிலைமை கைமீறிப் போனதில் உள்நாட்டுக் கலகம் மூள ஆரம்பித்திருக்கிறது. நாடு தழுவிய புரட்சி வெடிக்குமோ என்ற கேள்வி எங்கும் தொக்கி நிற்கிறது.
என்ன ஆனது இந்த நாட்டுக்கு... எப்படி இந்த நிலைமை வந்தது?
எல்லாவற்றுக்கும் மூல காரணம் அரசின் தவறான நிதிக் கொள்கைதான். ஐரோப்பிய யூனியனில் முக்கிய அங்கமான கிரீஸ், 2001ம் ஆண்டிலிருந்து யூரோ நாணயத்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியது.
வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவழிக்கிறோம் என்று கூறி, பல ஆயிரம் கோடி யூரோக்களை கடன் வாங்கிக் குவித்துள்ளது கிரீஸ். இன்றைய தேதிக்கு கிரீஸின் கடன் அளவு 300 பில்லியன் யூரோக்கள் (ஒரு யூரோவி்ன் மதிப்பு ரூ. 58). நாட்டின் மொத்த உற்பத்தியை விடச 125 சதவீதம் அதிகம் இந்தக் கடன்!.
கடன்களுக்கான தவணை மற்றும் வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு பல லட்சம் கோடி யூரோக்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம். ஆனால் கஜானாவில் பணமில்லை. காரணம் உள்நாட்டில் நடக்கும் பெருமளவு வரி ஏய்ப்பு. கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்கு வருமானத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள், வரி செலுத்தவே மறுக்கின்றனர்.
உற்பத்தியிலும் பெரும் வீழ்ச்சி. கடன்களை மட்டுமே நம்பியிருந்த நாட்டுக்கு, அந்தக் கடன்வரத்து முற்றிலும் நின்றுபோக, விழி பிதுங்கியது. நாட்டின் மொத்த உற்பத்தியோ பூஜ்யமாகி, மைனஸுக்கும் போய்விட்டது.
இதையெல்லாம் குறிப்பிட்ட காலம் வரை சாமர்த்தியமாக மறைத்து வந்த கிரீஸ், சமாளிக்க முடியாத நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் உண்மையைச் சொன்னது. அதுவரை கிரீஸ் மீதிருந்த நம்பிக்கையில் கடன் கொடுத்து வந்த பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இப்போது கடனை திருப்பிக் கேட்கத் துவங்கின.
கிரீஸுக்கு கடன் வழங்கிய ஐரோப்பிய வங்கிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக, அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பயத்தில் தங்கள் டெபாஸிட்டுகளைத் திரும்பப் பெற ஆரம்பித்துள்ளனர்.
இப்படி கிரீஸில் ஆரம்பித்த பொருளாதார நச்சுச் சுழல் ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனையே பாதிக்க, இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிக்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
கிரீஸுக்கு இந்த ஆண்டு 25 பில்லியன் யூரோ அளவுக்கு குறைந்த வட்டிக்கு கடன் அளித்து நிலைமையைச் சமாளிக்க வைக்கலாம் என்று ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிதி நிறுவனமும் உதவ முன் வந்துள்ளது.
ஆனால், கிரீஸ் வாங்கிய பழைய கடன்களுக்கான ஆண்டு தவணையே 55 பில்லியன் யூரோ எனும்போது, இந்த 25 பில்லியன் யூரோவை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையே, உள்நாட்டில் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்துப் பொருள்கள், பணிகளின் வரிகளை தாறுமாறாக உயர்த்திவிட்டது கிரீஸ் அரசு. உபயம்- சில தனியார் நிறுவன முதலாளிகள். இதனால் கடுப்பான மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர் போராட.
கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் மூண்டு விட்டதோ என்ற அச்சம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆக்ரோஷமான போராட்டமாக அமைந்துவிட்டது. ஏதென்ஸில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். நாட்டின் பிற பகுதிகளிலும் இதே போன்ற கலவரங்கள் மூண்டன. இந்தக் கலவரங்களில் 3 பேர் பலியாகியதும் நேற்று நடந்தது.
'பிரான்ஸ் புரட்சிக்கு முன்பு வெர்சைல்ஸ் நகரில் குவிந்த மக்களின் ஆக்ரோஷத்தைப் படித்திருக்கிறோம். அதை நேற்று கிரீஸில் நேரில் பார்த்தோம்', என்கிறார் ஒரு செய்தியாளர்.
கிரீஸின் இந்த நிலை ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது. அமெரிக்காவின் வீழ்ச்சி எப்படி உலகம் முழுக்க கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியதோ, அதுபோல, கிரீஸின் வீழ்ச்சி ஐரோப்பா மட்டுமின்றி, ஆசிய நாடுகளையும் பாதிக்கும் என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.
கிரீஸின் இந்த வீழ்ச்சியால், யூரோ நாணயத்தின் மதிப்பே, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் 1.45 டாலராக இருந்த யூரோ மதிப்பு, இன்று 1.27 டாலராக குறைந்துவிட்டது.
நிலைமை இப்படியே போனால் டாலரை விட யூரோ மதிப்பு குறைந்துவிடும். இதனை ஐரோப்பிய யூனியன் நிச்சயம் விரும்பாது... அத்தகைய சூழலில் கிரீஸை ஐரோப்பிய யூனியனை விட்டேகூட விலக்க வேண்டிய நிலை வரலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
சர்வதேச பங்கு வர்த்தகத்திலும் கிரீஸ் வீழ்ச்சியின் தாக்கம் தெரியத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் இன்று கூடிப் பேசவிருக்கின்றனர். அதில்தான் கிரீஸின் தலை எழுத்து நிர்ணயிக்கப்பட உள்ளது!.
வியாழன், 6 மே, 2010
ஐ.ஏ.எஸ். தேர்வு நேர்காணல் முடிவுகள்-தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் வெற்றி!
சென்னை: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். நேர்காணல் தேர்வில் அகில இந்திய அளவில் 875 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய அளவில் டாக்டர் ஷாபேசல் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். ஸ்ரீநகரைச் சேர்ந்த இவர் மருத்துவப் பட்டம் பெற்றவர்.
தமிழகத்தைச் சேர்ந்த லலிதா 12வது ரேங்க்கும், கனகவல்லி 15வது ரேங்க்கும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மத்திய அரசுத் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்திய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான நேர்காணல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் அகில இந்திய அளவில் 875 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 195 பேர் பெண்கள். மேலும், இதில் 30 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர். இவர்களில் 5 பேர் பார்வையற்றவர்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேசிய அளவில் 15வது ரேங்க் பெற்ற கனகவல்லி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக மேம்பாட்டுத் துறையில் பயிற்சி உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர்.
சென்னையில் உள்ள சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ் கல்வியகத்தின் மூலம் 83 மாணவர்கள் நேர்காணலுக்குச் சென்றனர். இதில் 43 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அகில இந்திய அளவில் 12வது ரேங்க் பெற்றுள்ள லலிதாவும் இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர் ஆவார்.
இவரது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள குறிச்சியாகும். இவரது தந்தை ராஜேந்திரன் ராணுவ அதிகாரி. தாயார் தமிழரசி ஆசிரியையாக பணிபுரிந்தவர்.
மேலும், சென்னையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமியில் படித்த 50 பேரும், பி.எல்.ராஜ் மெமோரியலில் படித்த 22 பேரும், ஃபோகஸ் அகாடெமியில் படித்த செந்தில், சங்கர் கணேஷ் உள்ளிட்ட 15 பேரும், ஸ்ட்ரேட்டஜி அகாடெமியில் படித்த 41 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதன், 5 மே, 2010
வாழ்வின் மறக்கமுடியாத பிறந்தநாள்-! த்ரிஷா.
தனது பிறந்த நாளை சென்னையில் உதவும் கரங்கள் இல்ல குழந்தைகளுடன் கொண்டாடினார் நடிகை த்ரி்ஷா.
நடிகை த்ரிஷாவுக்கு மே 4-ம் தேதி பிறந்த நாள். இந்த பிறந்த நாளை மிகவும் வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளார்.
நள்ளிரவே, வீட்டை அலங்கரித்து, பெரிய கேக் ஆர்டர் செய்து நண்பர்கள் மற்றும் தாயார் உமாவுடன் வெட்டி மகிழ்ந்தாராம். விடிந்ததும், முதல் வேலையாக உதவும் கரங்கள் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கும் போய், அங்கிருக்கும் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்டுள்ளார்.
மாலை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் ஆடம்பரமான பார்ட்டிக்கு உமா கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் த்ரிஷாவுக்கு நெருக்கமான நண்பர்கள், திரையுலகப் புள்ளிகள் பங்கேற்றனர்.
பிறந்த நாள் குறித்து த்ரிஷா கூறுகையில், "வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்தநாள் இது. 400 குழந்தைகளுடன் பயனுள்ள முறையில் இந்த நாளைக் கொண்டாடினேன். அதற்கு முன்பு என் அம்மா செய்த பிறந்த நாள் விழா ஏற்பாடுகளில் ஒரு இளவரசியைப் போல உணர்ந்தேன்.
இந்தப் பிறந்த நாள் பல வகையிலும் விசேஷமானது. தொடர்ச்சியான வெற்றிகள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் எனது முதல் இந்திப் படம் வெளியாகிறது.
இதெல்லாவற்றுக்கும் மேல் கமல்ஹாஸனுடன் எனது முதல் படம் விரைவில் துவங்க உள்ளது...", என்றார்.
ஹெச்பி நிறுவனம் ரூ 1450 கோடி வரி ஏய்ப்பு!
பெங்களூர்: பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான ஹெவ்லெட் பாகார்ட் இந்தியா சேல்ஸ் (ஹெச்பி) நிறுவனம் ரூ 1450 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை பெங்களூரிலுள்ள வருவாய் புலனாய்வு இயக்ககம் (டிஆர்ஐ) அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஹெச்பி நிறுவனத்துக்கு விளக்கம் கேட்பு கடிதம் ஒன்றை வருமானவரித் துறை அனுப்பியுள்ளது.
இந்த நிறுவனம் இறக்குமதி செய்த கம்ப்யூட்டர்கள்,லேப்டாப், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவற்றின் மதிப்பைக் குறைத்துக் காட்டி இந்த வரி ஏய்ப்பை நடத்தியுள்ளது என டிஆர்ஐயின் இயக்குநர் ஆர் வெங்கட்ராமன் கூறினார். தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்த ஏய்ப்பு நடந்துள்ளது.
ஆனால் வருமான வரித் துறையின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது ஹெச்பி நிறுவனம். தங்களது கணக்குகளில் எந்த முறைகேடும் இல்லை என்றும் அனைத்து சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கும் ஹெச் பி தயாராக உள்ளதாகவும் அந் நிறுவனம் கூறியுள்ளது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் கிரீன் சேனல் மூலம் விரைவில் அனைத்து அனுமதிகளும் பெற்றுக் கொள்ளும் சலுகையை மத்திய அரசு ஹெச்பி நிறுவனத்துக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 4 மே, 2010
7800 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்… சான்றிதழ் சரிபார்ப்பு ஆரம்பம்!
7800 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்… சான்றிதழ் சரிபார்ப்பு ஆரம்பம்!
சென்னை: அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு புதியதாக 6000 ஆசிரியர்கள், 900 முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் 900 சிறப்பாசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதற்கென வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையிலான 32 ஆயிரம் பேர் கொண்ட பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மே 2-வது வாரத்தில் தொடங்க உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய சுமார் 6,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு, கடந்த 2009-ல் அறிவித்தது. 1:5 விகிதாசாரத்தில் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பதிவு மூப்பு அடிப்படையில் 32 ஆயிரம் பேர் கொண்ட பெயர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றுள்ளது.
இந்த 32 ஆயிரம் பேருக்கு மே முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கான தகவல் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து மே 2-வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களில் தொடங்கி நடைபெற உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிந்த பிறகு தேர்வு செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்கள், வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகளில் பணிக்குச் சேருவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
6,000 பணியிடங்களுக்காகப் பெறப்பட்டுள்ள 32 ஆயிரம் பேரின் மூப்பு அடிப்படையிலான பெயர் பட்டியல் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
அதேபோல முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 900 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதுதவிர உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் போன்றவற்றுக்கான சிறப்பு ஆசிரியர்கள் சுமார் 900 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவர்களுக்கும் மே முதல் வாரத்தில் தகவல் அனுப்பி வைக்கப்பட்டு, மே 2-வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும்.
2010-2011 ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தில் சுமார் 8,900 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
திங்கள், 3 மே, 2010
கோடையில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்!
கோடைக் காலத்தில் அதுவும் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில், நமது உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தோல் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, கோடையில் வியர்வைக் குரு, வியர்வைக் கட்டியைத் தவிர்க்க முகத்துக்கு பவுடர் போடாமல் இருப்பது நல்லது என்று தோல் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையின் குழந்தை அறுவைச் சிகிச்சை நிபுணர் எம்.எஸ்.ராமகிருஷ்ணனின் 19-வது நினைவு தினத்தை முன்னிட்டு குழந்தை தோல் நோய்கள் தடுப்பு மற்றும் ஆண் குழந்தைகளின் பிறவிக் குறைபாடான சிறுநீர்ப் பாதை பாதிப்பைச் சரி செய்யும் அறுவைச் சிகிச்சை (ஹைபோஸ்பாடியாஸ் சர்ஜரி) குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
கருத்தரங்கில் பேசிய மருத்துவ நிபுணர்கள், வெயிலை தாக்குப் பிடிக்க முடியாமல் நாம் செய்யும் சிற்சில தவறுகள், பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை எடுத்துக் கூறினர்.
மேலும், அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் செவ்வாய்க்கிழமை (மே 4) தொடங்குகிறது. இந்த நிலையில் குழந்தைகள் உள்பட பெரியவர்களும் கோடை வெப்பம் காரணமாக தோல் நோய்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்றும் கருத்தரங்கில் பேசிய மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
WDதோல் மருத்துவ நிபுணர் ஒருவர் பேசுகையில், கோடையில் இளநீர், மோர் உள்பட திரவ உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு உடலில் நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோடையில் தோலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத மிக மிகச் சிறிய துளைகள் மூலம் வியர்வை வெளியேறி உடலின் வெப்ப நிலை இயற்கையாக பராமரிக்கப்படுகிறது. எனவே வியர்வை வெளியேறுவதை எந்தக் காரணத்திற்காகவும் தடுக்கும் நடவடிக்கையில் நாம் ஈடுபடக் கூடாது. வியர்வை துவாரங்கள் அடைபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் போதுதான் வியர்க்குரு போன்றவை ஏற்படும்.
தோலின் நுண்ணிய துளைகள் அடைபடும் வகையில் நம்மை அறியாமல் சில விஷயங்களை நாம் செய்து விடுகிறோம். அதாவது முகத்துக்குப் பவுடர் பயன்படுத்தும் நிலையில் தோலின் நுண்ணிய துளைகள் அடைபட்டு வியர்வை வெளியேறுவது தடைபடும். எனவே பவுடர் போடுவதைத் தவிர்ப்பது நல்லது.
WDஅதிகமாக வியர்க்கும் போது முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவுவது நல்லது அல்ல. ஏனெனில் குளிர்ந்த நீர் காரணமாகவும் தோலின் நுண்ணிய துளைகள் அடைபட்டு வியர்வை வெளியேறுவது பாதிக்கப்படும். மாறாக, வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தைக் கழுவும் நிலையில், தோலின் நுண்ணிய துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி வியர்வை எளிதாக வெளியேறும் என்று தெரிவித்தனர்.
குழந்தைகளை வெயிலில் அழைத்துச் செல்வதையும், நைலான் போன்ற ஆடைகளை அணிவிப்பதையும் தவிர்ப்பதும், வெயிலை சமாளிக்க மிகவும் குளிர்ந்த நீரை குடிக்கக் கொடுப்பதும் தவறு.
குழந்தைகளும், பெரியவர்களும், இந்த கோடையில் குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்த்துவிட்டு, நீராகாரம், மோர், பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை அருந்தி வந்தால் ஆரோக்கியமும் பாதிக்கப்படாது.
நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் – வெயில் சுட்டெரிக்கும்!
சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. மே 28ம் தேதி வரை வெயில் நீடிக்கும்.
தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலமாகும். அதிலும் ஏப்ரல் 15 முதல் மே இறுதிவரை வரை வெயிலின் தன்மை கடுமையாக இருக்கும். குறிப்பாக மரங்கள் அதிகமில்லாத மலை வேலூரில் இருப்பதால் அங்கு அதிகபட்ச வெயிலை உணரமுடியும்.
ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களிலும், அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெயிலின் தன்மை குறைவாக காணப்படும்.
ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த வருடம் கோடை காலம் முடிந்த பிறகும் 2-வது கோடை வந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த ஆண்டு கோடை தொடங்கி 1 மாதம் தாண்டிவிட்டது. சென்னை , வேலூர் , திருச்சி , மதுரை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக வெயிலின் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி 101 ஆக பதிவானது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோடை மழை பெய்த போதிலும் சென்னையில் வெப்பம் குறையவில்ல். அனல் காற்று வீசுவதால் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்த நிலையில் நாளை அக்கினி நட்சத்திரம் தொடங்குகிறது. 28-ந் தேதி வரை மொத்தம் 25 நாட்கள் இது நீடிக்கிறது.
அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் கடுமையாக இருக்கும். அனல் காற்று வீசும். உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொண்டால் அக்னிக்கு அல்வா கொடுத்து அணலிலிருந்து தப்ப முடியும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)