
நடிப்பு: சரத்குமார், ஸ்ரேயா, கவுண்டமணி
இசை: ரஃபி
இயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார்
தயாரிப்பு: ராடான் - ஜீ
என்னதான் 'ஹைப்' ஏத்தினாலும் சரக்கு இருந்தா மட்டும்தான் எந்தப் படமும் தாக்குப் பிடிக்கும் என்பதற்கு இதோ இன்னொரு உதாரணம்.. ஜக்குபாய்.
'அடடா... திரைக்கு வரும் முன்பே படம் லீக்காகி தயாரிப்பாளர் நஷ்டம் கண்டு விட்டாரே' என்ற பார்வையாளனின் பரிதாபம் எந்த அளவு கைகொடுக்கும் என்று தெரியவில்லை...
படத்தின் கதை இது:
சென்னையை கிரிமினல்கள் இல்லாத நகரமாக்க எந்த அளவு கொடூரமான ட்ரீட்மெண்டையும் கையாளும் போலீஸ் அதிகாரி ஜெகன்னாதன் (சரத்குமார்). ஒரு நாள் தனது முன்னாள் மனைவி ஆஸ்திரேலிய கார் விபத்தில் செத்துப் போனது தெரிய வருகிறது. கூடவே அவருக்கு மோனிஷா என்ற பெயரில் ஒரு அழகான- கோடீஸ்வர மகள் (ஸ்ரேயா) இருப்பதையும் தெரிந்து கொள்கிறார்.
ஜெகன்னாதனின் பழைய எதிரி அமீத் அன்சாரியால் மோனிஷாவின் உயிருக்கே ஆபத்து என்பதை அறிந்து, அந்த போராபத்திலிருந்து மகளைக் காப்பாற்ற கவுண்டமணி துணையுடன் புறப்படுகிறார். எப்படி காப்பாற்றினார் என்பது மீதிக் கதை...
இந்தப் படத்தின் முக்கிய ப்ளஸ் பாயிண்ட் கவுண்டமணி. இளைத்தாலும், படுத்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்று சொல்லும் அளவுக்கு கலகலப்பூட்டுகிறார். குரலில் இன்னும் அதே 'டெஸிபலை' மெயின்டெய்ன் பண்ணுகிறார் மனிதர்.
சரத்குமார் கூட இந்தப் படத்தில் அடக்கி வாசித்திருக்கிறார். அதுவே அவரது கேரக்டருக்கு கொஞ்சம் நம்பகத்தன்மையைத் தருகிறது. போலீஸ் வேடமும் அவருக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தி வருகிறது.
ஸ்ரேயா இதில் நடிக்கவும் செய்துள்ளார்!. மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவு யாரும் இல்லை.
நிறைய காட்சிகளில் ஓவராக உணர்ச்சி வசப்படுகிறார்கள்... பிழியப் பிழிய செண்டிமெண்ட் காட்சிகள். அவை பொருத்தமான இடத்தில் வராததால் பார்வையாளனுக்கு எந்த உணர்வும், பாதிப்பும் ஏற்படாமல் போகிறது. அதுதான் இந்தப் படத்தின் முக்கிய மைனஸ்.
மற்றபடி 'ஆஃப் ஸ்கிரீனில்' ராதிகா வடித்த கண்ணீருக்காக இல்லாவிட்டாலும், ஆர்.டி. ராஜசேகரின் அசத்தல் கேமரா, கவுண்டமணி காமெடி, சரத்குமாரின் ஆக்ஷனுக்காக ஒருமுறை பார்க்கலாம்!
அதுசரி... அதென்ன ஜக்குபாய் என்கிறீர்களா...?
படத்தில் சரத்துக்குப் பெயர் ஜெகன்னாதன்... செல்லமாய் 'ஜக்கு'... மரியாதைக்கு 'பாய்'... அதான் 'ஜக்குபாய்'. அடடா, கே.எஸ்.ரவிக்குமாருக்கு என்ன ஒரு 'கிரியேட்டிவிட்டி'!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக