
சென்னை : பஸ்சில் இருந்து தவறி விழுந்து மூளை சாவு அடைந்த கன்டக்டரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவை 4 பேருக்கு பொருத்தப்பட்டன.
கொளத்தூரை சேர்ந்தவர் ராஜன்பாபு (49). இவருக்கு கோமதி (40) என்ற மனைவி, ஒரு மகள் உள்ளனர். ராஜன்பாபு செங்குன்றம் & ஊத்துக்கோட்டை 592 தடத்தில் அரசு பேருந்தில் கன்டக்டராக பணியாற்றினார். கடந்த 1ம் தேதி பேருந்தில் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்ததார்.
ஊத்துக்கோட்டை அருகே வந்தபோது, சாலை பள்ளம் இருந்ததால் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் படிக்கட்டு அருகே நின்றிருந்த ராஜன்பாபு தவறி விழுந்தார். தலையில் பலத்த காயத்துடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜன்பாபு 90 சதவீதம் மூளை சாவு அடைந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, ராஜன்பாபு மூளை சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.
அவரது உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து அண்ணாசாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ராஜன்பாபுவின் கண்களை தவிர உடல் உறுப்புக்களை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் எடுத்தனர். கிட்னி காளியப்பா மருத்துவமனைக்கும், மற்றொரு கிட்னி, லிவர் அப்போலோ மருத்துவமனைக்கும், இதயத்தில் உள்ள வால்வுகள் முகப்பேரில் உள்ள செரியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் என 4 பேருக்கு பொருத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக