
சென்னை: அரசு உயர் அதிகாரிகள் சூட்கேஸ் வாங்கிக் கொள்வதற்கான தொகை ரூ.440 லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் சார்புச் செயலாளர் முதல் கூடுதல் செயலாளர் நிலைக்கு மேல் உள்ளவர்களுக்கு வரை இந்தச் சலுகை பொருந்தும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பல்வேறு படிகள், சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அவற்றில், எழுதுபொருள், சூட்கேஸ் போன்ற பொருள்கள் வாங்குவதற்கான படிகளும் அடங்கும்.
அரசு அதிகாரி ஒருவருக்கு சூட்கேஸ் பெற்றுக் கொள்வற்கான தொகை ரூ.440 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தொகை இப்போது அதிகாரிகளின் தகுதி நிலைக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது.
சூட்கோஸ் அலவன்ஸ் பெறும் அதிகாரிகள் யார் யார்?
சார்பு, துணைச் செயலாளர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், இணை, கூடுதல் செயலாளர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.3,500-ம் வழங்கப்படும் என்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
கூடுதல் செயலாளர் நிலையில் மேல் உள்ளவர்களுக்கு இத் தொகை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தப்படுவதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சூட்கேஸ் வாங்கிக் கொள்ள ஒரு அதிகாரிக்கு ரூ.440 என்கிற உச்ச வரம்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஒரு அதிகாரி சூட்கேஸ் வாங்கியதற்கான தகவல் அவரது பணி பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். சூட்கேஸை ரிட்டயர் ஆன பிறகும் வைத்துக் கொள்ளலாம். அதில், ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதற்கான செலவை சம்பந்தப்பட்ட அதிகாரியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு அதிகாரி ஒருவர் மாற்றப்படும்போது, சூட்கேஸ் பெற்றுக் கொண்டதற்கான தகவலை அவர் மாற்றப்படும் துறையிடம் சம்பந்தப்பட்ட துறை தெரிவிக்க வேண்டுமாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக