புதன், 28 மார்ச், 2012

தமிழில் இ-காமர்ஸ் தளம்.. மக்கள் ஆதரிப்பார்களா?

பர்ஸ் நிறைய பணம் எடுத்துக் கொண்டு, கடை கடையாக ஏறி இறங்கி, பார்த்துப் பார்த்து பொருள்களை வாங்கிக் கொண்டு வந்த காலம் இனி இல்லை எனும் நிலை உருவாகி வருகிறது. இப்படி ஷாப்பிங் போவதில் ரிஸ்க் அதிகம் என்பது ஒரு பக்கம், அலைச்சல், நேர விரயம் என பல அசௌகரியங்கள். நாமே நேரில் பார்த்து வாங்கினோம் என்ற திருப்தி மட்டும்தான். ஆனால், இப்போது இணையத்திலேயே பொருள்கள், சேவைகளைப் பெற முடியும் என்ற நிலை வந்துவிட்டது. பிராண்டட் பொருள்கள் என வரும்போது, அவற்றை நேரில் போய் பார்த்துதான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தரம் உறுதிப்படுத்த ஒன்று என்பதால் பிடித்த மாடல் அல்லது நிறத்தை மட்டும் பார்த்து ஆர்டர் கொடுத்துவிட்டால், வீடு தேடி வந்துவிடும். செல்போன், லேப்டாப், மியூசிக் சிஸ்டம்ஸ், நகைகள், துணிகள், டிவி, பிரிட்ஜ், ஏஸி உள்ளிட்ட மின்னணு பொருட்கள், இனிப்புகள் உள்ளிட்ட தின்பண்டங்கள்.... இப்படி எல்லாமே இ-காமர்ஸ் வர்த்தகத்துக்குள் அடங்கிவிட்டன. சர்வீஸ் இன்டஸ்ட்ரி எனப்படும் சேவைத்துறையும் இப்போது இ-காமர்ஸில் வந்துவிட்டது. முன்பெல்லாம் ரயில், விமான டிக்கெட் பதிவது, சுற்றுலா திட்டமிடுவது போன்றவற்றுக்காகத்தான் ஆன்லைனை பயன்படுத்தினர். இப்போது, வீட்டில் குழாய் ரிப்பேரா... பக்கத்தில் யாரும் ப்ளம்பர் இல்லையா.. உடனே ஒரு இ-காமர்ஸ் தளத்தில் விஷயத்தைச் சொன்னால், அடுத்த சில மணி நேரங்களில் வீட்டு வாசலில் ப்ளம்பர்! கம்ப்யூட்டர் சர்வீஸ், டிவி ரிப்பேர் அல்லது ஏஸி பராமரிப்பு... அட தோட்ட வேலைக்குக் கூட ஆள் தயார்! இ-காமர்ஸை பிரமாதமாகப் பயன்படுத்துவது ரியல் எஸ்டேட் துறைதான். கையில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு இருநதால் போதும், ஆன்லைனில் ஆர்டர் கொடுத்துவிடலாம். இ செக் அல்லது பொருளை டெலிவரி செய்யும்போது பணம் தருவது என இன்னும் கூட சுலபமான பரிமாற்றங்கள் இ-காமர்ஸில் வந்துவிட்டன. இந்தியாவில் ஆரம்பத்தில் பெரிதாக கவனிக்கப்படாத இந்த இ-காமர்ஸின் இன்றைய வளர்ச்சி என்ன தெரியுமா... கிட்டத்தட்ட 200 சதவீதம்! இந்திய சந்தையின் அளவைப் பார்த்த பல வெளிநாட்டு நிறுவனங்கள், இ-காமர்ஸ் மூலம் பொருட்களை விற்க தயாராக இந்தியாவில் கிளைகள் திறந்து, நல்ல சம்பளத்தில் பணியாளர்களையும் நியமித்துள்ளன. இந்த இ-காமர்ஸ் தளங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் இருக்கும். நம்பகமான, சரியான சேவை தரும் ஒரு இ-காமர்ஸ் தளத்தை தமிழில் கொண்டு வரவும் முயற்சிகள் நடக்கின்றன. அப்படி ஒரு இணையத்தளம் தமிழில் வந்தால் அதை நீங்கள் பயன்படுத்துவீர்களா..?. இல்லை ஆங்கிலத்தில் இருந்தால் தான் வசதி என்கிறீர்களா.. உங்க கருத்தை சொல்லுங்களேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக