திங்கள், 9 ஏப்ரல், 2012

தமிழகத்தில் சுற்றுலா பஸ், ஆம்னி பஸ், மேக்சி கேப், ஜே.சி.பி. எந்திரங்களுக்கு வரி அதிகரிப்பு!

சென்னை: சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பஸ்கள், மேக்சி கேப், மண் அள்ளும் எந்திரங்களுக்கான வரியை தமிழக அரசு அதிகரித்துள்ளது. இது தொடர்பான மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: சுற்றுலா பஸ்களுக்கும் ஆயுட்கால வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இருக்கை எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு சுற்றுலா பஸ்களுக்கு காலாண்டு வரி விதிப்பதில் இடர்பாடு உள்ளது. எனவே 6 சதுர மீட்டருக்கு மேற்பட்ட தரை பரப்பு கொண்ட புதிய வாகனங்களுக்கு ஆயுட்கால வரி விதிப்பு செய்வது என்றும், ஏற்கனவே பதிவு செய்த வாகனங்களுக்கு தரை பரப்பின் அடிப்படையில் காலாண்டு வரி விதிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மண் அள்ளும் எந்திரங்கள், சாலையை செப்பனிடும் எந்திரங்கள், பளு தூக்கிகள், தளவாட வண்டிகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபடும் வாகனங்களும் தற்போது அதிகரித்துள்ளன. இதற்கான ஆண்டு வரி மிகவும் குறைவாக உள்ளது. எனவே இந்த வாகனங்களுக்கு ரூ.10,000 அளவில் ஆண்டு வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. உரிமையாளரின் வணிகம், தொழில் தொடர்புடைய நபர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பயன்பாடு (மேக்சி கேப்) அதிகரித்திருந்தாலும் மற்ற வாகனங்களை விட இந்த வாகனங்களுக்கு வரி குறைவாகவே உள்ளது. எனவே இந்த வாகனங்களை குளிர்சாதன வசதி, குளிர்சாதன வசதி இல்லாதவை என வகைப்படுத்தி இருக்கை அடிப்படையில் காலாண்டு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உபரி பேருந்துகள் (spare bus) ஒப்பந்த ஊர்திகளாக பயன்படுத்தப்படுவதால் அவை சிறப்பு நிகழச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் போது தனிப்பட்ட வரி ஒன்றை விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. நமது மாநில வாகனங்களை கணக்கிடும்போது மற்ற மாநில ஒப்பந்த ஊர்திகள் அதிக அளவில் சாலையை பயன்படுத்துவதால் அந்த வாகனங்களுக்கு அதிக சதவீதத்திலான வரி விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பஸ், மேக்சிகேப், ஜே.சி.பி. வாகனங்களுக்கு வரி உயருகிறது. மண் அள்ளும் ஜே.சி.பி. எந்திரத்திற்கு ஆண்டு வரி ரூ. 10 ஆயிரமாக உயரும். ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ள பழைய சுற்றுலா வாகனத்திற்கு 14.5 சதவீதம் ஆயுள் வரி விதிக்கப்படும். ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாகனத்திற்கு 10 சதவீத வரியும், ரூ. 10 லட்சத்திற்கு கீழ் உள்ள வாகனங்களுக்கு 15 சதவீத ஆயுட்கால வரியும் விதிக்கப்படுகிறது. கட்டுமான பணிகளில் ஈடுபடும் வாகனங்களின் வரியும் உயருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக