வெள்ளி, 6 மே, 2011

தனி வருவாய் வரி செலுத்துவோர் பெரும் பண பரிமாற்றத்தைக் காட்ட வேண்டாம்: வருமான வரித் துறை!


தனி நபர் வருமான வரிச் செலுத்துவோர், வங்கிகளிலும், பரஸ்பர நிதிகளிலும், கடன் அட்டை வாயிலாகவும் மேற்கொள்ளும் பெரிய அளவிற்கான பண பரிமாற்றங்களை வருமான வரி விவர படிவத்தில் தெரிவிக்கத் தேவையில்லை என்று மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுவரை வருமான வரித் தாக்கல் செய்ய பயன்படுத்தப்பட்ட படிவங்களில் இருந்த ஆண்டு வருவாய்த் தகவல் (Annual Information Return) என்ற விவரக்கேட்பு பகுதி 2011-12ஆம் ஆண்டிற்கான சஹாஜ், சுகம், ஐடிஆர் 2, ஐடிஆர் 3 ஆகிய படிவங்களில் இருக்காது என்றும் வருமான வரித் துறை கூறியுள்ளது.

இதுவரை பரஸ்பர நிதிகளில் 2 இலட்சத்திற்கு மேல் முதலீடு செய்திருந்தாலோ அல்லது நிறுவன பத்திரங்களில் 5 இலட்சத்திற்கும் அதிகமாக முதலீடு செய்திருந்தாலோ அல்லது நிறுவனங்களின் பங்குகளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக முதலீடு செய்திருந்தாலோ அதனை ஆண்டு வரு்வாய் விவரத்தில் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை இப்போது தனி நபர் வருமான வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வங்கிகளில் 10 இலட்சத்திற்கும் மேல் செலுத்தியிருந்தாலோ அல்லது கடன் அட்டைகளுக்கு 2 இலட்சத்திற்கு மேல் செலுத்தியிருந்தாலோ அல்லது அசையா சொத்துகளை வாங்க ரூ.30 இலட்சம் வரை செலவழித்திருந்தாலோ அதனை தனி நபர் வருமான வரி செலுத்துவோர் காட்ட வேண்டும் என்றிருந்தது. அதுவும் இப்போது நீக்கப்பட்டுவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக