செவ்வாய், 26 ஏப்ரல், 2011

கோ - விமர்சனம்!


ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல்


இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்

இயக்கம்: கேவி ஆனந்த்

தயாரிப்பு: குமார், ஜெயராமன்

வெளியீடு: உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்

மக்கள் தொடர்பு: நிகில்

சினிமாவில் பத்திரிகைக்காரர்கள் என்றால் ஒரு ஜோல்னா பையை மாட்டிக் கொண்டு வருவார்கள். தத்துப் பித்தென்று கேள்வி கேட்பார்கள் அல்லது சமூக மாற்றம் பற்றி பக்கம் பக்கமாக லெக்சரடிப்பார்கள். இன்னும் சிலர் பத்திரிகைகள் மீதான விமர்சனம் என்ற பெயரில் கண்மூடித்தனமாக காட்சிகள் வைப்பார்கள்.

நிஜமான பத்திரிகையுலகம் பற்றி இதுவரை யாரும் சொன்னதில்லை (ஒருபோதும் அதைச் சொல்லும் தைரியம் யாருக்கும் வராது என்பது வேறு விஷயம்!!). ஆனால் முதல் முறையாக பத்திரிகைத் துறை பற்றி ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு வந்திருக்கிற படம் என்றால் அது 'கோ'தான். ஆனால் இதிலும் நிறைய இயல்பு மீறல்கள், தவறுகள் இருந்தாலும், அவை மன்னிக்கக் கூடிய அல்லது மறந்துவிடக்கூடிய அளவுக்குத்தான் உள்ளன என்பது ஒரு ஆறுதல்.

இயக்குநர் கே வி ஆனந்த்தும் வசனம் எழுதிய சுபாவும் முன்னாள் பத்திரிகையாளர்கள் என்பதால் இது ஒருவேளை சாத்தியமாகியிருக்கலாம்.

ஜீவா முன்னணி தமிழ் பத்திரிகையான தின அஞ்சலில் பணியாற்றும் ஒரு துடிப்பான பத்திரிகைப் புகைப்படக்காரர். அவருடன் பணியாற்றும் நிருபர்கள் கார்த்திகா, பியா இருவருக்குமே ஜீவா மீது எந்நேரத்திலும் காதலாக மாறிவிடக் கூடிய அளவுக்கு சாஃப்ட் நட்பு.

ஒருமுறை, ஜோசியத்தை நம்பி 13 வயது பெண்ணை எதிர்க்கட்சி தலைவர் (கோட்டா சீனிவசாராவ்) பால்ய விவாகம் செய்வது குறித்து செய்தி வெளியிடுகிறார் கார்த்திகா. ஆனால் அலுவலகத்துக்கே வந்து அதிரடியாக மறுத்து, கோட்டா சீனிவாசராவ் கலாட்ட செய்ய, செய்திக்கு ஆதாரமில்லாமல் போய்விட்டதால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது பத்திரிகை. இதில் கார்த்திகாவும் வேலையை இழக்கிறார். ஆனால் கோட்டா சீனிவாசராவ், ரகசியமாய் பால்ய விவாகரம் செய்வதை புகைப்படத்தோடு நிரூபித்து முதல்பக்க செய்தியாக்குகிறார் ஜீவா. இதில் பத்திரிகை மானமும் காக்கப்பட, கார்த்திகா தப்புகிறார். இந்த சம்பவம் இருவர் உறவையும் மேலும் இறுக்கமாக்குகிறது.

மாநிலத்தில் தேர்தல் வருகிறது. இருக்கும் ஊழலாட்சியை அகற்றி, மாற்றத்தைக் கொண்டுவர சிறகுகள் என்ற இளைஞர் பட்டாளம் அஜ்மல் தலைமையில் முயல்கிறது. ஆனால் ஆளும் கட்சி அடக்குமுறையைக் கையாள்கிறது அவர்களுக்கெதிராக. இதனால் இளைஞர்களுக்கு ஆதரவு பெருகுகிறது. ஒருகட்டத்தில் அஜ்மலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை குண்டு வைத்து தகர்க்கிறார்கள். இதனால் மக்கள் அனுதாபம் அமோகமாகக் கிடைக்க, ஆட்சியைப் பிடிக்கிறார்கள் இளைஞர்கள்.

அஜ்மல் முதல்வராகிறார். இந்த ஆட்சிமாற்றத்துக்கு வெளியில் தெரியாத முக்கிய காரணமாக ஜீவாவும் தின அஞ்சல் பத்திரிகையும் செயல்படுகின்றன.

இந்த நேரத்தில்தான் அஜ்மல் பற்றிய அதிரடி உண்மை தெரியவருகிறது. அந்த உண்மையை எப்படி எதிர்கொள்கிறார் ஜீவா, தங்களால் வந்த ஆட்சி மாற்றத்தை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது ஒரு விறு விறு க்ளைமாக்ஸுக்கு வழி வகுக்கிறது.

ஒரு பத்திரிகை போட்டோகிராபர் வேடத்துக்கு ஜீவா பக்காவாகப் பொருந்தினாலும், ஆரம்ப காட்சிகளில் அவர் புகைப்படமெடுக்கும் விதம் ஆனாலும் ஓவர்!

மற்றபடி, அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்றாலும் பஞ்ச் வசனம் இல்லாமல், ஸ்டன்ட் என்ற பெயரில் சர்க்கஸ் வேலை காட்டாமல் இருந்ததற்காக (இயக்குநர் பேச்சைக் கேட்டு நடித்த) ஜீவாவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

ஹீரோயின் கார்த்திகாவை விட, சினிமா நிருபராக வரும் பியா ஓகே. அவரது உடை, பார்ட்டியில் போடும் ஆட்டம், பேசும் ஏ கிரேடு வசனங்களெல்லாம் இன்றைய பெண் நிருபர்கள் சிலர் செய்வதில் பாதிதான் என்பதால் ஆனந்தைப் பாராட்டத்தான் வேண்டும்!

நடிகையாக கார்த்திகா ஜஸ்ட் பாஸ் மார்க் பெறுகிறார் இந்தப் படத்தில். முகத்தில கொஞ்சம் கூட உணர்ச்சியே காட்டாமல் வந்துபோகிறார். வெண்பனியே பாடல் காட்சியில் மேக்கப் ரொம்பவே உறுத்தல்.

ஒரே காட்சி என்றாலும் கோட்டா சீனிவாசராவ் அதகளம் பண்ணுகிறார். அதிலும், 'தமிழ் பேப்பர் ஆபீஸ்தானே இது... அப்புறமென்ன இங்கிலீசு, தமிழ்ல பேசு' என அவர் எகிறும் இடம் டாப்.

பிரகாஷ்ராஜ் முதல்வராக வருகிறார். ஒரு யானையை கட்டி இழுத்து வந்து சரியாக தீனிபோடாமல் விட்டமாதிரி தெரிகிறது.

அஜ்மலுக்கு இது மறு பிரவேசம். சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். நக்சலைட்டாக வரும் போஸ் நன்றாக செய்துள்ளார்.

குறைகள் என்று பார்த்தால், அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒரே கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் இணைந்து சிறகுகள் என்ற அமைப்பை ஆரம்பிப்பதாக காட்சி. வெவ்வேறு கோர்ஸ் படிப்பவர்கள் இணைந்து தொடங்குவதாகக் காட்டியிருந்தால் கூட பரவாயில்லை. ஒரே கல்லூரியில் டாக்டருக்குப் படிப்பவர், வக்கீல், எஞ்ஜினீயர் எல்லாம் சேர்ந்து ஆரம்பிப்பதாகக் காட்டுவது உறுத்தல். எந்தக் கல்லூரியில் எம்பிபிஎஸ், பிஈ, பிஎல், பிஏ, பிஎஸ்ஸி எல்லாம் இருக்கிறது?

அதென்ன, எல்லா அதிரடிக் கட்டுரைகளையும் ஒரே நிருபர்தான் எழுதுகிறார்... எந்த அலுவலகத்தில் இந்த சுதந்திரம் இருக்கிறது. இந்த உண்மை ஆனந்துக்கு தெரியாதா என்ன!

அதேபோல முணுக்கென்றால் வந்து நிற்கும் பாடல்களுக்கு கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

ஆனாலும் இரண்டரை மணி நேரப் படத்தில் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லும் நோக்கில் மீறப்பட்ட லாஜிக்குகள் இவை என்பது புரிகிறது.

பத்திரிகையுலகம் என்பது எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பதை, அந்த அலுவலகச் சூழலை வைத்தே காட்ட முயற்சித்திருக்கிறார் ஆனந்த். உண்மைதான். ஆங்கிலப் பத்திரிகை அலுவலகம்தான் அல்ட்ரா மாடர்னாக இருக்க வேண்டுமா என்ன?

படத்தின் இரண்டு சிறப்பம்சங்கள் ஹாரிஸ் ஜெயராஜின் இசை மற்றும் ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு. நார்வே மற்றும் சீனாவில் எடுக்கப்பட்ட காட்சிகள் மனதை அள்ளுகின்றன. இந்த மாதிரி லொகேஷன்களை தமிழ் சினிமாவில் இதற்கு முன் பார்த்ததே இல்லை!

அதிகபட்ச கமர்ஷியல், கொஞ்சம் மக்களுக்கு பரிச்சயமான யதார்த்தம், கூடவே கொஞ்சம் சமூக செய்தி என்பது ஷங்கரின் சக்ஸஸ் பார்முலா. அது கே வி ஆனந்துக்கும் நன்றாகவே கைவந்திருக்கிறது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக