ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

சரும நோயை உருவாக்கும் ஏ.சி.!


கடந்த ஓரிரு ஆண்டு காலமாகவே,மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கோடை காலத்தில் வெப்ப நிலை மிக அதிகமாகவே காணப்படுகிறது.

இந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க அலுவலகத்தில் மட்டுமல்லாது வீட்டிற்குள் வந்தாலும், மக்கள் ஏ.சி. அறைக்குள் பதுங்கிக் கொள்ளும் போக்கு மிக அதிகமாகவே அதிகரித்து வருகிறது.

இதனால் நாள் முழுவதும் ஏ.சி. அறைக்குள்ளேயே இருப்பதும், நடமாடுவதுமாக இயற்கையான சீதோஷ்ண நிலையில் இல்லாமலேயே மக்களது, குறிப்பாக நகர்ப்புறங்களில் அலுவலகம் செல்வோரது, நாட்கள் கழிகின்றன.

இவ்வாறு முழு நாளையும் ஏ.சி. அறையிலேயே கழிப்பதால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கூட வீட்டில் இவர்களால் ஏ.சி. இல்லாமல் இருக்க முடிவதில்லை.

கடும் வெயிலில் சுற்றி திரிந்துவிட்டு அலுவலகத்திற்குள்ளோ அல்லது வீட்டிற்குள்ளோ ஏ.சி. அறைக்குள் நுழைவது சற்று ரிலாக்ஸ் ஆன ஒன்றுதான் என்றாலும் கூட, நீண்ட நேரம் ஏ.சி. அறையில் முடங்கிக் கிடப்பதால் உடலுக்கு நன்மையை விட தீமையே அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.

குறிப்பாக ஏ.சி.யினால் உடலின் தோல் மற்றும் முடிக்கு எத்தகைய தீங்கு நேருகிறது என்பது குறித்து நம்மில் பலருக்கு தெரிவதே இல்லை.

ஒரு அறையில் ஏ.சி. ஓடும்போது அந்த அறையின் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு வறண்டு போய்விடுகிறது. இதனால் அந்த அறையில் இருப்பவர்களது உடலின் தோலின் ஈரப்பதமும் உறிஞ்சப்பட்டு தோல் வறட்சியாகவும், வெடிப்பு விழுந்தும் இருப்பதை நம்மில் பலரிடம் பார்த்திருக்க முடியும்.

அவ்வளவு ஏன்... பனிக்காலங்களில் நமது உடலின் தோல் வறண்டு, குறிப்பாக உதடுகளில் வெடிப்பும், அதிலிருந்து ரத்தக்கசிவும் ஏற்பட்டு இருப்பதை நாமே உணர்ந்திருப்போம்.

அவ்வாறு பனிக்காலத்தில் ஏற்படுவதுதான், நாள் முழுவதும் ஏ.சி. அறைக்குள் இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.

இவ்வாறு உங்களது உடலின் தோல் உரிய பாதுகாக்கப்படாமல், தொடர்ந்து வறண்டே காணப்பட்டால், தோலின் அடிப்பாகம் பாதிக்கப்படும்.தோல் அளவுக்கு அதிகமாக வறண்டு போகும்போவதால் அரிப்பு உணர்வும் ஏற்படும்.

அவ்வாறு ஏற்படும் அரிப்பை போக்க கை நகங்களால் சொறியும்போது,வறண்ட தோலிலிருந்து செதில் செதிலாக உதிர்ந்து விழுந்து அந்த இடம் வெண்மையாக மாறி, பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கும். இதைத்தான் 'வங்கு' என்றும் கூறுவர்.

எனவே தொடர்ச்சியாக ஏ.சி. அறையில் இருப்பது கடுமையான தோல் நோயை உருவாக்க வழி வகுத்துவிடும் என எச்சரிக்கின்றனர் தோல் நோய் மருத்துவ நிபுணர்கள்.

எனவே பொதுவான இடம் என்பதால் அலுவலகத்தில்தான் ஏ.சி. அறையை தவிர்க்க முடியாது என்றாலும், குறைந்தபட்சம் வீட்டிற்கு வந்த பிறகாவது சாதாரண காற்றோட்டமான அறையில் அமரும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கடுமையான கோடை காலங்களில் வேண்டுமானால் வீட்டிற்குள் ஏ.சி. அறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக