வியாழன், 23 பிப்ரவரி, 2012
மைக்ரோசாப் விண்டோஸின் லோகோவில் மாற்றம்!
நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தமது விண்டோஸ் மென்பொருளை மறுசீரமைப்பு செய்துள்ளது.
1985ஆம் ஆண்டு விண்டோஸ் லோகோ உருவாக்கப்பட்டது. 4 வண்ணக் கொடி பறப்பது போன்ற இந்த லோகோவில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்து வந்தது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய லோகோவுடன் விண்டோஸ் 8 வெளியாக உள்ளது.
புதிய லோகோ 4 வண்ண கொடி பறப்பதற்கு பதிலாக ஒரு ஜன்னலைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பெளவுல் ஸெர் என்பவர் வடிவமைத்துள்ளார்.
"விண்டோஸ் என்ற பெயருக்கேற்பவே சாப்ட்வேரின் லோகோவை வடிவமைத்திருக்கிறோம்" என்று மைக்ரோசாப்ட் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள், 20 பிப்ரவரி, 2012
வருமானவரி செலுத்த சென்னையில் சிறப்பு ஏற்பாடு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சென்னை: வருமான வரி செலுத்துவோருக்காக சென்னையில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் என்.எஸ்.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மார்ச் மாத கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரியை செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதை கருத்தில் கொண்டு கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து, குறித்த நாளுக்கு முன்னதாகவே வரியை செலுத்துமாறு வேண்டுகிறோம்.
ரிசர்வ் வங்கிதவிர, தமிழகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் சில குறிப்பிட்ட கிளைகளுக்கும் வரியை பணமாகவோ, காசோலையாகவோ பெற அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனால் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, தனியார் துறை வங்கிகளில் ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி, ஐடிபீஜ வங்கி, எச்.டி.எப்.சி.வங்கி போன்ற வங்கிகளில் இந்த சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வருமானவரி செலுத்துவோரின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு என்.எஸ்.விஸ்வநாதன் கூறி உள்ளார்.
கிங் பிஷர் விமான சேவையில் தொடரும் ரத்து- விமானிகள் விலகல்!
டெல்லி: கிங்பிஷர் நிறுவனத்தின் விமான சேவைகள் 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நிறுவனம் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விமானங்களை முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்தது தொடர்பாக விமான சேவைகள் இயக்ககத்திடம் கிங் பிஷர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றார்.
இந்நிலையில் மும்பையிலிருந்து 13, கொல்கத்தாவிலிருந்து 8, டெல்லியிலிருந்து 4 என விமான சேவைகளை திடீரென ரத்து செய்ததால் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
பிரதான சேவையான மும்பை-டெல்லி விமானங்களையும் கூட கிங் பிஷர் ரத்து செய்துள்ளது. கிங்பிஷர் விமான சேவை நிதி நெருக்கடியால் தவிப்பதால் விமானிகள் பலரும் பணியிலிருந்து விலகிவிட்டனர்.
ஏற்கெனவே கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்காத நிலையில் விமானங்களும் ரத்து செய்யப்பட்டு வருவதால் விமான சேவையை அனேகமாக கிங் பிஷர் நிறுவனம் நிறுத்திவிடக் கூடும் எனத் தெரிகிறது.
இருப்பினும் இதை கிங் பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய்மல்லையா மறுத்துள்ளார்.
நிதி நெருக்கடியை சமாளிக்க எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்யவும் தமது நிறுவனப் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நேரடியாக விற்க அனுமதிக்க வேண்டும் என்பதும் விஜய்மல்லையாவின் நீண்டநாள் கோரிக்கை.
மத்திய அரசின் உதவி எதுவும் தங்களுக்குத் தேவை இல்லை என்றும் கூறிவருகிறார் விஜய்மல்லையா.
கர்ப்பகாலத்தில் தியானம் கருகுழந்தைகளுக்கு நல்லது!
திருமணமான பெண்கள் கர்ப்பம் தரிப்பது இயல்பானது என்றாலும் முதல்முறையாக கருவை சுமக்கும் பெண்களுக்கு ஒருவித படபடப்பு ஏற்படுவது இயற்கையே. எனவே கர்ப்பிணிகள் தியானம், யோகா போன்றவை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் மன நிலை அமைதியடைவதோடு கருக்குழந்தைக்கும் நன்மை ஏற்படுவது தெரியவந்துள்ளது.
மன அமைதி
கர்ப்பிணிகளுக்கு பிறக்கப் போகும் குழந்தை குறித்து ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும். குழந்தையை பத்திரமாக பெற்றெடுத்து அறிமுகப்படுத்தவேண்டுமே என்ற எண்ணம் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவது இயல்பு. எனவே கர்ப்பிணிகள் தியானம் செய்வதன் மூலம் அவர்களுக்கு மன அமைதி ஏற்படுகிறது.
குழந்தைக்கு நன்மை தரும்
அமைதியான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து கண்களை மூடி மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். கவனம் முழுவதும் அடிவயிற்றில் உள்ள குழந்தையை பற்றியே இருக்கவேண்டும். இதனால் மனம் அமைதியடையும். இது உங்களின் கரு குழந்தைக்கு நன்மை அளிக்கும். கண்களை மூடி தியானிக்கும் பொழுது மனதிற்கு இதமான மந்திரங்களை உச்சரித்தால் கூடுதல் நன்மை தரும். இதனால் கருவில் உள்ள குழந்தை அமைதியான முறையில் சீராக வளர்ச்சியடைந்து உலகத்தை பார்க்க தயாராகும்.
மன அழுத்தம் குறைகிறது.
தியானம் மேற்கொள்வதன் மூலம் கர்ப்ப கால மன அழுத்தம் குறைகிறது. கர்ப்பிணிகளுக்கு மசக்கை காலத்திய மயக்கம், உயர்ரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்றவை ஏற்படுவது கட்டுபடுத்தப்படுகிறது.
தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆக்ஸிஜன் அதிகரிப்பதால் குழந்தைகள் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. குழந்தைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
தியானத்தோடு கர்ப்பிணிகள் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று செக்அப் செய்து கொள்ளவேண்டும். சத்தான உணவுகளை உட்கொண்டு வர எளிதான சுகப்பிரசவம் ஏற்படும்.
கார்களில் லோகோ பிளேட்டுகள் அபேஸ்: ஓர் உஷார் ரிப்போர்ட்!
கார் உரிமையாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் நூதன திருட்டு சம்பவங்கள் அம்பலமாகியுள்ளன. ஆம், கார்களில் உள்ள கார் நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட (லோகோ)பிளேட்டுகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேற துவங்கியுள்ளன.
பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பிஎம்டபிள்யூ, ஆடி, வோக்ஸ்வேகன், பென்ஸ் மற்றும் ஸ்கோடா கார்களின் சின்னங்களை திருட்டுக் கும்பல் குறி வைத்து திருடி வருகிறது.
மேற்கண்ட நிறுவனங்களின் லோகோ பிளேட்டுகள் நம் நாட்டு மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. மேலும், கார்களுக்கான குறிப்பிட்ட பாகங்களை மேற்கண்ட நிறுவனங்கள் இங்கேயே பெற்றாலும், லோகோ பிளேட்டுகளை அவை தங்களது சொந்த நாட்டிலிருந்தே இறக்குமதி செய்கின்றன.
மேலும், கார்களில் லோகோ சேதம் அடைந்து மாற்ற வேண்டும் என்றால், டீலரிடம் ஆர்டர் கொடுத்து மாதக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும். விலையும் அதிகம். இந்த நிலையில்தான், முக்கிய நகரங்களில் லோகோ திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நூதன திருட்டில், பெரிய அளவிலான நெட்வொர்க் கொண்ட திருட்டுக் கும்பல் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், போலீஸ் பிரச்னை என்று வந்தாலும் சமாளிக்கும் வகையில், சந்தேகம் வராவத வகையில் மாணவர்களை ஈடுபடுத்தி லோகோ பிளேட்டுகளை அந்த கும்பல்கள் திருடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கார் உரிமையாளர்கள் போலீசில் புகார் கொடுப்பதில்லை என்பதும், போலீசாரும் இதுகுறித்து இதுவரை விசாரணை நடத்தாததும் லோகோ திருட்டு கும்பலுக்கு சாதகமாக இருக்கிறது. திருடப்பட்ட லோகோ பிளேட்டுகள் காய்லாங்கடை வழியாக விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதில், மும்பை மற்றும் மங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவங்கள் கார் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கோடா கார்களின் லோகோ பிளேட்டுகள்தான் திருட்டு கும்பலின் முக்கிய டார்கெட்டாக இருக்கிறது என்பதால், உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
வீடு, வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் அதிகரிக்கிறது?
டெல்லி: வீடு, வாகனங்கள், சொத்துகள் உள்ளிட்ட பொது இன்சூரன்ஸ் கட்டணங்கள் ஏப்ரல் மாதம் மூலம் அதிகரிக்கப்பட உள்ளது.
தேசிய மறுகாப்பீட்டாளர்கள் மறும் பொது காப்பீட்டுக் கழகங்கள் நட்டத்தை ஏற்படுத்தும் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. நட்டத்தை ஏற்படுத்தும் வகையிலான வர்த்தகங்களுக்கு இன்சூரன்ஸ் செய்வோர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
கடந்த் 7-ந் தேதியன்று இத்தகைய கடிதம் ஒன்றை நிதி அமைச்சகம் அனுப்பியிருகிறது.
மேலும் அரசுக்குச் சொந்தமான பொதுக் காப்பீட்டுத்துறையானது ஒரு மறுகாப்பீட்டு நிறுவனமாகும். இதர பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துமே அரசு காப்பீட்டு நிறுவனம் மீது தங்களது சிக்கலான வர்த்தக நடவடிக்கைகளை திணிப்பதை முறைப்படுத்த உரிய சட்டம் தேவை என்கிறது மத்திய அரசு.
இதனால் சொத்துகள், வாகனங்கள் மற்றும் தனிநபரின் உடல்நலனுக்கான இன்சூரன்ஸ்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க பொதுக்காப்பீட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஏதாவது ஒரு பொய்க் காரணங்களைக் காட்டி இன்சூரன்ஸ் பெறுவோரின் எண்ணிக்கையைத் தடுக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை அமையும் என்று கூறப்படுகிறது.
வியாழன், 9 பிப்ரவரி, 2012
தனிநபர் வருமான வரிவிலக்கு ரூ.3 லட்சமாக உயர்கிறது?
டெல்லி: தனி நபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம் என மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
தற்போது ரூ 1.8 லட்சமாக உள்ள இந்த உச்சவரம்பு ரூ 2 லட்சமாக உயர்த்தப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது, இதனை ரூ 3 லட்சமாக உயர்த்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இன்று சமர்ப்பிக்கப்படும் நிதி மசோதாவுடன், இந்தப் பரிந்துரைகளையும் நிலைக்குழு ஏற்கும் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே ரூ 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் கணக்கு தாக்கல் செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ள சூழலில், ரூ 3 லட்சம் வரை வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுவது நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரிய நிம்மதியைத் தரும் விஷயமாகும்.
மேலும் வரி விகிதம் என்பது மார்க்கெட்டில் நிலவும் நுகர்வு விலைக் குறியீட்டெண் அடிப்படையில் அமைய வேண்டும் என்ற ஐக்கிய முன்னணி அரசின் திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாகவே இந்த வருமான வரி உச்சவரம்பு நியமனம் பார்க்கப்படுகிறது. மேலும் பல வருமான வரி சீர்த்திருத்தங்களும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
ரூ 3 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீத வரியும், ரூ 20 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதமும், அதற்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீதமும் இனி வரி விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






