திங்கள், 20 பிப்ரவரி, 2012

கார்களில் லோகோ பிளேட்டுகள் அபேஸ்: ஓர் உஷார் ரிப்போர்ட்!

கார் உரிமையாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் நூதன திருட்டு சம்பவங்கள் அம்பலமாகியுள்ளன. ஆம், கார்களில் உள்ள கார் நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட (லோகோ)பிளேட்டுகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேற துவங்கியுள்ளன. பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பிஎம்டபிள்யூ, ஆடி, வோக்ஸ்வேகன், பென்ஸ் மற்றும் ஸ்கோடா கார்களின் சின்னங்களை திருட்டுக் கும்பல் குறி வைத்து திருடி வருகிறது. மேற்கண்ட நிறுவனங்களின் லோகோ பிளேட்டுகள் நம் நாட்டு மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. மேலும், கார்களுக்கான குறிப்பிட்ட பாகங்களை மேற்கண்ட நிறுவனங்கள் இங்கேயே பெற்றாலும், லோகோ பிளேட்டுகளை அவை தங்களது சொந்த நாட்டிலிருந்தே இறக்குமதி செய்கின்றன. மேலும், கார்களில் லோகோ சேதம் அடைந்து மாற்ற வேண்டும் என்றால், டீலரிடம் ஆர்டர் கொடுத்து மாதக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும். விலையும் அதிகம். இந்த நிலையில்தான், முக்கிய நகரங்களில் லோகோ திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நூதன திருட்டில், பெரிய அளவிலான நெட்வொர்க் கொண்ட திருட்டுக் கும்பல் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், போலீஸ் பிரச்னை என்று வந்தாலும் சமாளிக்கும் வகையில், சந்தேகம் வராவத வகையில் மாணவர்களை ஈடுபடுத்தி லோகோ பிளேட்டுகளை அந்த கும்பல்கள் திருடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கார் உரிமையாளர்கள் போலீசில் புகார் கொடுப்பதில்லை என்பதும், போலீசாரும் இதுகுறித்து இதுவரை விசாரணை நடத்தாததும் லோகோ திருட்டு கும்பலுக்கு சாதகமாக இருக்கிறது. திருடப்பட்ட லோகோ பிளேட்டுகள் காய்லாங்கடை வழியாக விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில், மும்பை மற்றும் மங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவங்கள் கார் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கோடா கார்களின் லோகோ பிளேட்டுகள்தான் திருட்டு கும்பலின் முக்கிய டார்கெட்டாக இருக்கிறது என்பதால், உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக