ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012
சென்னை மண்டலத்தில் வரி வசூல் அதிகம்!
தேசிய அளவை விட சென்னை மண்டலத்தில் வருமான வரிவசூல் வளர்ச்சி விழுக்காடு அதிகம் என்று சென்னை மண்டல தலைமை வருமான வரி ஆணையர் ஜி.என். ஜெயின் கூறினார்.
சென்னை மண்டல மத்திய கலால்துறை சார்பில் நடைபெற்ற கலால் தினம் நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய கலால் மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஜெயின் விருது வழங்கினார்.
சிறந்த சேவைக்காக குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்ற அதிகாரிகளும் விருது சிறப்பிக்கப்பட்டனர்.
இரட்டை சகோதரர்கள்
இந்நிகழ்ச்சியில் வி.என்.ஜெயின் பேசியதாவது:
வருமான வரித்துறையும், மத்திய கலால் துறையும் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இரட்டை சகோதர துறைகள் ஆகும்.
இரண்டு துறைகளுமே வரிகளை வசூலித்து நாட்டிற்கு வருவாய் ஈட்டித் தருகின்றன.
வரி வருவாய் மூலம் கிடைக்கின்ற நிதி ஆதாரங்களை கொண்டுதான் மத்திய அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது.
அந்த வகையில் அரசாங்கத்திற்கு முறையாக வரிகளை செலுத்துவோர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம்.
தமிழ்நாட்டில் அதிகம்
இந்தியாவில் வருமான வரி 1816-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ரூ.36 லட்சமாக இருந்த வரி வசூல் தற்போது ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.
தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை வருமான வரி மண்டலத்தில் கடந்த நிதி ஆண்டு (2011-2012) வருமான வரி இலக்கு ரூ.35 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு வரி வசூலாகி இருக்கிறது.
வருமான வரி வசூல் வளர்ச்சி தேசிய அளவில் 8 விழுக்காடாக உள்ளது.
ஆனால், சென்னை மண்டலத்தில் இது 13 சதவீதம் அதாவது தேசிய அளவை விட சென்னை மண்டலத்தில் வரிவசூல் வளர்ச்சி விழுக்காடு அதிகம்.
இன்றைய தினம் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் நேரடி அன்னிய முதலீட்டை குவிக்கின்றன. அவர்களின் நோக்கம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். அதில் ஒன்றும் தவறு இல்லை.
ஆனால், அப்படி சம்பாதிக்கின்ற பணத்திற்கு உரிய வரிகளை அவர்கள் செலுத்திட வேண்டும். வரி செலுத்துவதை அவர்கள் கடமையாக கருத வேண்டும் என்றார் அவர்.
பத்திரிகையாளர் இந்து என்.ராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
கலால்வரி உயர்வு
முன்னதாக வரவேற்றுப் பேசிய மத்திய கலால் துறை சென்னை தலைமை ஆணையர் கே.ஸ்ரீவத்சவா கூறியதாவது:
1946-ம் ஆண்டு ரூ.46 கோடியாக இருந்த கலால் வரி வசூல், தற்போது ரூ.1 லட்சத்து 37 ஆயிரம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.
இதேபோல் சேவை வரியும் ரூ.70 ஆயிரத்து 391 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
`ஆயக்கர் சேவாக்' திட்டம்
விழா முடிவடைந்த பிறகு வருமான வரி தலைமை ஆணையர் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறும்போது,
``வருமான வரி செலுத்துவதை எளிமைப்படுத்தும் வகையில் விரைவில் `ஆயக்கர் சேவாக்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்'' என்று கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக