திங்கள், 10 ஜனவரி, 2011

நகராட்சி கமிஷனர் உள்பட 3000 அரசுப் பதவிகளுக்கு தேர்வுகள் அறிவிப்பு!


வணிக வரித்துறை உதவி அலுவலர், சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

இதுகுறித்த டிஎன்பிஎஸ்ஸி அறிவிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, தேர்வு முறை, தேர்வுத் தேதி என அநைத்து விவரங்களும் இந்த அறிவிக்கையில் உள்ளன.

TNPSC-CSSE-I -Notification

கிளிக் செய்து படிக்கவும்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் பிப்ரவரி 11, 2011.

இந்த தேர்வுக்கான பாடத் திட்டத்தை அறிய இந்த இணைப்பை க்ளிக் செய்யவும். http://www.tnpsc.gov.in/syllabus.htm

அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தபால் நிலையங்கள் மற்றும் சென்னை டிஎன்பிஎஸ்ஸி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் கிடைக்கின்றன.

மொத்தம் 3000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் என்பதால் இந்த முறை பல லட்சம் விண்ணப்பங்கள் குவியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது - த‌ந்தை பெ‌ரியா‌ர்!


"புத்துலுக தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" இது பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரைப் பற்றி யுனெஸ்கோ குறிப்பிட்ட வார்த்தைகள்.

1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் தனது 94வது வயதில் மறைந்த தந்தைப் பெரியாரை, 1.4.1959 ‌அ‌ன்று 'குடி அரசு' இதழில், இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது என்று எழுதிய தலையங்கம் மூலம் நினைவு கூர்வோம்.

பார்ப்பனரிடமிருந்து தமிழர்களைப் பற்றிக் கொண்டுள்ள நோய்கள் பல. கேழ்வரகு, சோளம், கம்பு முதலிய உணவுத் தானியங்களைவிட அரிசியை உணவாக்கி உண்பது, அதுவும் தவிடு போக்கிய வெண்மையான அரிசிச் சோற்றைக் கஞ்சி வடித்து உண்பதுதான் கீழ்ச்சாதியிலிருந்து உயர்ந்து செல்வதற்குரிய முறை என்று கருதிச் சத்தான உணவு வகைகளைக் கைவிட்டனர், தமிழர்கள்.

ஆனால், பார்ப்பனரிடமுள்ள இரண்டொரு நற்பண்புகளை மட்டும் தமிழர்கள் அறிந்து நடக்கத் தவறிவிட்டனர். அதிகாலையில் எழுதல், இனப்பற்றுக்காக எதையும் தியாகம் செய்தல், எல்லாவற்றையும் விட கல்வியைப் பெருஞ்செல்வமாகக் கருதுதல் ஆகிய சில பண்புகளை ஆரியர்களிடமிருந்து கற்றுணர்ந்து நடக்க வேண்டும். தமிழர்களிடம் இன்று அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற பெரு நோய் ஒன்றைப் பற்றி இன்று எழுதுகிறோம்.

நாமக்கல் வட்டம் கடகப்பாடி என்ற சிற்றூரைச் சேர்ந்த ஒரு தமிழ் மாணவன் வயது 16தான். கோவைக்குச் சென்று கல்வி பயில்வதற்காகத் தன் மாமனாரிடம் 150ரூபாய் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததாகவும், இந்த ஆத்திரத்தினால் தன் மனைவியின் தந்தையை நள்ளிரவில் பேனாக்கத்தியினால் கொலை செய்துவிட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்ட ஒரு வழக்கில் இந்தக் குற்றவாளிக்கு அய்ந்தாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர்கள்தான் இதில் முன்னணிக் குற்றவாளிகளாயிருக்கின்றனர். தாங்கள் தம்மகனின் கல்விக்காகச் செலவழித்த பணம், தம் கடமையைச் சேர்ந்தது என்று கருதாதபடி, ஏதோ ஒரு வியாபாரத்தில் போட்ட முதலீடாகக் கருதிக் கொண்டு அந்த முதலீட்டையும், வட்டியையும் சேர்த்து, அவனுக்கு வரப்போகின்ற மனைவி மூலமாக வசூல் செய்துவிட வேண்டுமென்றே கருதுகின்றனர்.

இந்த நோய் ஆந்திரர்களிடையிலும், தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களிடையிலும் முற்றியிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய் சொத்துடைய ஒருவருக்கு மூன்று பெண்களிருந்தால் போதும், அவர்களின் திருமணம் முடிந்தவுடன், அவர் ஓட்டாண்டியாக வேண்டியதுதான். வரதட்சணை மூலம் அவர் சொத்தைக் கசக்கிப் பிழிந்து குடித்து விடுகிறார்கள் மாப்பிள்ளை வீட்டார்.

இந்த வரதட்சணை நோயைச் சட்டத்தின் மூலம் தடுத்து விடலாமென்று ஆட்சியாளர் முயன்று கொண்டிருக்கின்றனர். பொய்யையும் விபச்சாரத்தையும் சட்ட மூலமாக ஒழிப்பது எப்படியோ, அதுபோலத்தான் இம்முயற்சியும்.

சமுதாயத்தில் நல்ல முறையான ஒழுக்கமும், அன்பும், தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால்தான் இம்மாதிரித் தீமைகளை ஒழிக்க முடியும். தானே பாடுபட்டு உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், தமிழ் நாட்டு இளைஞர்களிடையே வளர வேண்டும். பிறர் சொத்துக்கோ சூது மூலம் கிடைக்கும் திடீர் வருமானத்துக்கோ, யாரும் ஆசைப்படக்கூடாது. பெற்றோரின் சொத்தைக்கூட அவர்களுக்குப் பிறகுதான் அடைய வேண்டுமே தவிர, சம்பாதிக்கக்கூடிய வயதிலும்கூட பெற்றோர் சொத்தை அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடாது. பெற்றோர் சொத்தையே இப்படிக் கருத வேண்டுமென்றால், மாமனார் வீட்டுச் சொத்தைப் பற்றிக் கனவிலும் ஆசைப்படக்கூடாது.

பொருள் வசதியுள்ள மாமனார் எவரும் எத்தகைய கருமியும், தன் மகள் வறுமையினால் தொல்லைப்படுவதைக் கண்டு சகித்துக் கொண்டிருக்க மாட்டார். ஆதலால், திருமணத்தின்போது இத்தனை ஆயிரம் ரூபாய்க்கு நகையோடு இத்தனை ஆயிரம் ரூபாய் வரதட்சணை கொடு; மாப்பிள்ளைக்குக் கார் வாங்கித்தா! வீடு வாங்கித்தா! என்றெல்லாம் பையனின் பெற்றோர் கேட்பது, மகா மானக்கேடான செய்கையாகும். தன் மகளுக்கு மற்றவன் கேட்கிறானே என்று சமாதானம் கூறக்கூடாது. இரண்டும் தவறு என்பதைத் துணிந்து கூற வேண்டும்.

இந்தத் தீய சுரண்டல் முறையினாலேயே திறமையும், அழகும், ஒழுக்கமும் நிறைந்த பதினாயிரக்கணக்கான பெண்கள் திருமணம் ஆக முடியாமலேயே இருக்கின்றனர். இளைஞர்கள் மதவெறியையும், சாதி உணர்ச்சியையும் மறந்து கலப்புத் திருமணம் செய்ய முன்வராவிட்டாலும், அவரவர் சாதிக்குள்ளும் மதப் பிரிவுக்குள்ளுமாவது வரதட்சணை கேட்காதபடி மணம் புரிந்து கொள்ள முன்வரக்கூடாதா? நல்ல காரியம் செய்யத்தான் இளைஞர்களுக்குத் துணிவு வேண்டும். வழக்கம் என்ற செக்கைச் சுற்றிச் சுற்றி வருவதற்குச் செக்கு மாடுகளே போதும். தமிழ் நாட்டு மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாக இருத்தல் வேண்டாம். பந்தயக் குதிரைகளாக இருக்க வேண்டும்.

ந‌‌ன்‌றி : ‘குடி அரசு' 1.4.1959

2010 – விக்கிலீக்ஸ்-ன் தகவல் புரட்சி!


2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் புயலாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட்டின் வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் முதல் பங்குச் சந்தை வரை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியபோது கூட, அதனை தாங்கள் கடைபிடித்துவரும் சந்தை பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத அதிர்ச்சியாக எடுத்துக் கொண்ட அமெரிக்க அரசுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் உண்மைகள் அடி வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம், உலகத்திற்கு அது காட்டிக்கொண்டிருக்கும் தூய்மை முகம், எந்தனை கொடூரமானது என்பதை விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் ஆவணங்கள் வெட்ட வெளிச்சமாக்குவதேயாகும்.

உலகின் மாபெரும் ஆட்சி பீடத்தின் மையமாகக் கருதப்படும் வெள்ளை மாளிகைக்கு அமெரிக்காவின் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அந்தந்த நாடுகளில் இருந்து ‘திரட்டி’ அனுப்பிய இரகசிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டதன் விளைவாக அந்நாட்டின் உண்மையான நட்பு முகத்தின் யோக்கிதை மட்டுமின்றி, தான் பெற்ற இரகசிய விவரங்களின் மீது நேரிடையாக வினையாற்றாமல், அதனை மறைத்து, அந்தந்த நாடுகளின் அரசுகளை மிரட்ட அந்தத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை விக்கிலீக்ஸ் வெளியீடுகள் மூலம் அரசியல் உலகம் புரிந்துகொள்ள வைத்துவிட்டது. அதுதான் அமெரிக்காவிற்கு சங்கடம்.

அமெரிக்காவிற்கு எதிரான இரகசிய பரிமாற்ற அறிக்கைகளை மட்டுமே விக்கிலீக்ஸ் வெளியிட்டவில்லை. மாறாக, அது பல நாடுகள் தொடர்புடைய ஆவணங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும் அது பெரும் அளவில் பாதித்தது அமெரிக்காவையே.

இப்போது கூட, உலகமே நாளை பிறக்கப்போகும் 2011 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க முற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அரசும், பேங்க் ஆஃப் அமெரிக்காவும் விக்கிலீக்ஸ் புத்தாண்டில் வெளியிடப்போகும் ஆவணம் என்னவென்பதை நினைத்து அச்சத்தில் உழன்றுக்கொண்டிருக்கின்றன.

இதற்குக் காரணம், கடந்த திங்கட்கிழமை, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிணைய விடுதலையளித்த பிறகு, டைம்ஸ் ஆஃப் லண்டன் நாளிதழிற்கு பேட்டியளித்த விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ், ஒரு மிகப் பெரிய வங்கியின் நிர்வாகிகள் அனைவரும் விலக வேண்டிய அளவிற்கு முக்கிய தகவல்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை தான வெளியிடப்போவதாக கூறியதுதான்.

பேங்க் ஆஃப் அமெரிக்கா என்று பெயரை ஜூலியன் அசான்ஞ் கூறவில்லை. ஆனால், அந்த வங்கியின் நிர்வாகிகள் ஜூரத்தில் உறைந்துள்ளார்கள். எது தொடர்பான ஆவணம் அது? என்கிற யோசனையில் வாஷிங்டனில் ஆளுக்கு ஆள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் நிலை. அவர்கள் இந்த அளவிற்கு அச்சமுற மற்றொரு காரணமும் உள்ளது. அது, 2009ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரை ஒன்றில், பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமை நிர்வாகி ஒருவரின் கணினி அமைப்பின் ஹார்ட் டிரைவ் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அசான்ஞ் கூறியிருந்ததுதான்.

மெர்ரி லின்ஞ் நிதி நிறுவனத்தை கையகப்படுத்தியதில் உள்ள வில்லங்கத்தை விக்கிலீக்ஸ் வெளியிடுமோ என்று மற்றொரு கவலை. இது எல்லாவற்றி்ற்கும் மேலாக அப்படி ஏதேனும் வெளியிடப்பட்டால் அதனால் அமெரிக்காவின் பொருளாதார நிலை என்ன ஆகும் என்ற கவலையும் அமெரிக்க அரசிற்கு ஏற்பட்டுள்ளது.

இப்படி அமெரிக்காவும், அதன் நிறுவனங்களும் திரை மறைவில் நிகழ்த்திய திருவிளையாடல்களின் ஆதாரங்களை வெளியிட்டு, அந்நாட்டு அரசியலில் ஒரு குழப்பமான நிலையை ஏற்படுத்துவதற்கு என்ன அவசியம் உள்ளது? விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்-ன் நோக்கமென்ன? என்கிற வினாக்களும் எழுகிறதல்லவா?

அமெரிக்காவின் அழுத்தத்தால் சர்வதேச காவல் துறை தனக்கு எதிராக சிகப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில் மறைந்து வாழ்ந்துவந்த ஜூலியன் அசான்ஞ்ஞை, நியூ யார்க்கர் எனும் இதழின் செய்தியாளர் ராஃப்பி காட்சாடெளரியன் என்பவர் சந்தித்துப் பேசியுள்ளார். ஜூலியன் அசான்ஞ் உடன், அவர் பதுங்கியிருந்த சிறு அறையில் (பங்கர்) ராஃப்பியுன் இருந்துள்ளார். அப்போது அசான்ஞ் நோக்கம் குறித்து வினா எழுப்பியுள்ளார்.

அநீதிகளை வெளிப்படுத்தவதே தனது இணையத் தளத்தின் நோக்கம் என்று அசான்ஞ் அழுத்தமாக கூறியதாக தெரிவிக்கும் ராஃப்பி, “இன்றுள்ள நிலையில் மனிதனின் போராட்டங்கள் அனைத்தும் வலதுக்கு எதிரான இடது போராட்டமோ அல்லது நம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவின் போராட்டோ அன்று, அது தனி மனிதனுக்கும் அவன் வாழ்வைப் பாதிக்கம் (அரசு) அமைப்புகளுக்கும் எதிரானதே” என்று அசான்ஞ் கூறியதாக தெரிவிக்கிறார்.

“ஆட்சியமைப்புகளின் போக்கை தற்போதுள்ள போக்கிற்கு மாறாக மாற்றியமைக்க வேண்டுமென்று நாம் நினைப்போமானால், அவைகள் மாற்றத்திற்கு தங்களை சற்றும் உட்படுத்திக்கொள்ள தாயாரக இல்லை என்பதை தெளிவாக புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் துணிவாக செயலாற்ற வேண்டும்” என்றும் அசான்ஞ் கூறியதாக ராஃப்பி தெரிவிக்கிறார்.


இப்போது புரிகிறதா, விக்கிலீக்ஸ் வெளியீடுகளின் நோக்கம் என்னவென்பதை? அமெரிக்காவின் செனட்டரும், அவரை வழிமொழிந்த அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவரும், ஜூலியன் அசான்ஞ் ஒரு உயர்தொழில்நுட்ப பயங்கரவாதி என்று கூறியது சற்றும் பொருந்தாக விமரிசனம் என்பது?

அசான்ஞ் மொழியில் தெளிவாக கூறுதெனின், அமெரிக்காவோ அல்லது இன்றைய உலக நாடுகளின் அரசுகளோ இப்போது எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவோ அந்த போக்கில் இருந்து சற்றும் மாறப்போவதில்லை. இவைகளின் செயல்பாட்டை தலைகீழாக மாற்ற வேண்டுமெனில், அவைகளின் தன்மையைப் புரிந்துகொண்டு துணிச்சலுடன் போராட வேண்டும் என்கிறார். அதற்கு தற்போதுள்ள அதன் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்ய வேண்டும். அதற்குத்தான் இப்படிப்பட்ட வெளியீடுகள். அவைகள் அதன் பிடிமானத்தை பலமிழக்கச் செய்கின்றன.

இந்த முடிவிற்கு ஜூலியன் அசான்ஞ் வரக் காரணமேதுமுண்டோ? தான் மாற்ற நினைக்கும் இன்றுள்ள அரசியலை ஆங்கல மொழிக் கவிஞர் ஜார்ஜ் ஆர்வெல்லின் பாடலை மேற்கோள் காட்டி புரிய வைக்கிறார் அசான்ஞ்.
“பொய்யை உண்மையைப் போல் ஒலிக்கவும், கொலையை மரியாதைக்குரியதாகக் காட்டவும், தூய காற்றிற்குக் கூட நிலைத்தன்மை உண்டு என்று நிரூபிக்கவுமே அரசியல் மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது” என்கிற ஜார்ஜ் ஆர்வெல்லின் மொழியை இன்றைய அரசியலின் போக்கை சித்தரிப்பதாக அப்பாச்சி வீடியோவிற்கு அளித்த பேட்டியில் அசான்ஞ் கூறியுள்ளார்.

எவ்வளவு ஆழமான உண்மை! விடுதலைப் போராளிகை ‘பயங்கரவாதிகள்’ என்பது, பழங்குடிகளுக்காக போராடுவோரை, அந்த மக்களின் போராட்டங்களை ஆதரிப்போரை, அவர்களின் நியாயத்திற்காக குரல் கொடுப்போரை ‘உள்நாட்டு அச்சுறுத்தல்’ என்பது, தங்களின் அன்றாட வாழ்விற்காக கடலுக்குச் சென்று மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அண்டை நாட்டு கடற்படையினரால் அத்துமீறி வந்து தாக்கப்படும் போது, அவர்கள் ‘சில பேராசை பிடித்த மீனவர்களால் பிரச்சனை ஏற்படுகிறது’ என்று பேசுவது என்று இவை யாவும் ஜார்ஜ் ஆர்வெல் சொல்லும் அந்த அரசியல் மொழிகள்தானே?

இதனை புரிந்துகொண்ட காரணத்தினால்தான் விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்களை உலகின் தலைசிறந்த நாளிதழ்களான தி கார்டியன், நியூ யார்க் டைம்ஸ், லீ மாண்ட், எல் பாரிஸ், டெர் ஸ்பீகல் ஆகியன முன்னுரிமை கொடுத்து வெளியிடுகின்றன! இந்த ஏடுகளின் வரிசையில் ஒரு இந்திய நாளிதழ் கூட இடம்பெறவில்லையே என்பது வருத்தம்தான். ஆனால் இங்குதான், அரசின் குரல்களாக இருந்து பத்ம ஸ்ரீ முதல் சிறிலங்க ரத்னா வரை பட்டங்கள் பெற்ற முதன்மை இதழாளர்களை ஆசிரியர்களாக கொண்ட ஊடகங்களும் நாளிதழ்களும் அல்லவா கோலேச்சுகின்றன? அதனால் அந்தப் பட்டியலில் இந்தியா நாளிதழ் ஒன்று இடம்பெறாததில் ஆச்சரியமேது்மில்லை.

ஒரு தனி மனிதராய், உறுதியுடன் நிற்கும் சில தொழில் திறமை கொண்ட இளைஞர்களுடன் இணைந்து இன்றுள்ள அரசுகளுக்கு பாடம் கற்பிக்க புறப்பட்ட ஜூலியன் அசான்ஞ், உண்மையான ஜனநாயகத்திற்கு வழிகோலுகிறார். எனவே, எவ்வித ஐயமுமின்றி, அவரே இந்த ஆண்டின் மிகச் சிறந்த மனிதரே.

விக்கிலீக்ஸ் இணையத் தளம் செய்துவரும் தகவல் புரட்சி தொடரட்டும்... 2011இலும்.

புதன், 5 ஜனவரி, 2011

காவலன்!


விஜய்யின் 51வது படம் காவலன். வீரா கி‌ரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளது. மலையாளத்தில் இயக்குனர் சித்திக் ஏழு வருடங்களுக்குப் மு‌ன்பு இயக்கிய படம் பாடிகாட். திலீப், நயன்தாரா நடித்த இந்தப் படத்தின் தமிழ் ‌ரீமேக்கே காவலன். சித்திக்கே காவலனையும் இயக்கியுள்ளார்.

தாதா ரா‌ஜ்கிரணிடம் வந்து சேரும் விஜய் அவரது மகள் அசினுக்கு பாடிகாடாக செல்வதும், இது காதலில் முடிவதும், காதல் என்னானது என்பதுமே கதை. ரா‌ஜ்கிரணுடன் ரோஜாவும் நடித்துள்ளார். வித்யாசாகர் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் சில காட்சிகளை பாங்கா‌க், ஐரோப்பாவில் எடுத்துள்ளனர். காரைக்குடியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

படத்தில் விஜய்க்கு இணையாக வடிவேலுவும் வருகிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

பாசிஸ ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழல் அசின் நடித்திருப்பதால் காவலனை புறக்கணிக்கும்படி ஈழத்தமிழர்கள் கோ‌ரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோ‌ரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

சச்சின் ஏன் வித்தியாசமான பேட்ஸ்மேன்?



கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் மிக முக்கியமான சதம் எடுத்து இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ள சச்சின் டெண்டுல்கர் இப்போது உள்ள அல்லது முந்தைய நட்சத்திர வீரர்களைக் காட்டிலும் ஏன் வித்தியாசமானவர் என்பது இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

பொதுவாக ஒரு பேட்ஸ்மென் 20 அல்லது 22 வயதில் தனது சர்வதேச கிரிக்கெட்டை துவக்குகிறார் என்றால் 8 அல்லது 10 ஆண்டுகள்தான் அவரது உச்சக்கட்ட காலமாக இருக்கும் அதன் பிறகு வீழ்ச்சி தொடங்கி விடும். ஆனால் சச்சினைப் பொறுத்தவரை வீழ்ச்சி என்பது 20 ஆண்டுகள் ஆகியும் இல்லாமல் இருக்கக் காரணம் அவர் சிந்தனாபூர்வமான கிரிக்கெட் வீரர் என்பதே.

நேற்று டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் ஆகியோரின் ஆக்ரோஷமான பந்து வீச்சையும் அவர் எந்த வித அழுத்தமும் இல்லாமல் எதிர்கொண்ட விதம் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தது.

ஒவ்வொரு முறை அவர் சரியாக ரன் எடுக்காத போதும் அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கு அவர் தன் மட்டையின் மூலமே பதிலளித்து வந்துள்ளார்.

சச்சினின் பழைய அதிரடி போய்விட்டது என்று வருத்தப்பட்ட அவரது முந்தைய ரசிகர்களுக்கு பதில் கொடுத்த ஒரு நாள் போட்டி இரட்டை சதம் சச்சினின் இந்த பிந்தைய காலக்கட்டத்தில்தான் நடந்தேறியது என்பதும் அவர் இன்னமும் தனது ஆதிக்கவாத கிரிக்கெட் ஆட்டத்த்தை முற்றிலும் விட்டுவிடவில்லை என்பதற்கும் அத்தாட்சியாக விளங்கியுள்ளது.

துவக்கத்தில் சச்சின், டேல் ஸ்ட்யென் வீசிய 5 ஓவர்களையும் தானே எதிர்கொள்ள நேரிட்டது. மற்ற நாட்களை விட நேற்று அதிகம் பந்துகள் அவரது மட்டையைக் கடந்து சென்றன என்பதில் ஐயமில்லை. ஆனால் அவரது பொறுமை, பந்துக்கு பந்து மாறும் பேட்டிங் உத்தி அவர் விக்கெட்டை வீழ்த்துவது எளிதானதல்ல என்பதை நிரூபித்தது.

டெண்டுல்கரை ஒரு 20 பந்துகளாவது பீட்டன் செய்த ஸ்டெய்ன் கடைசியில் "சச்சின் விக்கெட்டை வீழ்த்துவதில் ஆற்றலைச் செலவழிப்பதில் பயனில்லை. ஏனெனில் அது அவருடைய தினமாக இருந்தால் அது அவருடைய தினம் மட்டுமே." என்று கூறியிருப்பதும் டெண்டுல்கரின் கிரிக்கெட் ஆட்டத்தின் மீதான சிந்தனாபூர்வமான அபிமானத்தை அறிவுறுத்துகிறது.

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக ஆஸ்ட்ரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை விரட்டி ஆட முயன்று ஆட்டமிழந்து வந்தார். இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றபோது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை தொடுவதில்லை என்று சபதம் எடுத்து இரட்டைச் சதம் அடித்தார் சச்சின். இது அவருடைய மனோபலத்தைக் காண்பித்த பல தருணங்களில் ஒரு தருணம்.

சச்சினின் ஆரம்பக் காலங்களில் விளையாடிய புல், ஹுக் ஆகிய ஷாட்களை அவர் டென்னிஸ் எல்போ என்ற முழங்கை அறுவை சிகிச்சைக்குப் பிறகு விட்டு விட்டார். அதற்குப் பதிலாக அவர் பவுன்சரை பாயிண்ட், தேர்ட்மேன் திசையில் தூக்கி அடிக்கும் முறையில் வெற்றி கண்டார்.

நேற்று படு பயங்கரமான ஸ்விங் பந்து வீச்சு, ரன் எடுக்க வேண்டிய இடங்களிலெல்லாம் ஃபீல்டர்கள். மோர்னி மோர்கெல்லின் தென்னை மர உயரப் பந்து வீச்சு. ரன்களே எடுக்க முடியாத ஒரு சூழல்தான்.

ஆனாலும் பவுன்சர்களை விட்டு விட்டு, அவர்கள் பந்தை சற்றே ஓவர் பிட்ச் போன்று வீசும் போது அதுவரை பின்னங்காலில் சென்று ஆடிய சச்சின் சட்டென ஓவர் பிட்ச் பந்துகளுக்கு முன்னால் வந்து கவர் டிரைவ், ஸ்ட்ரெய்ட் டிரைவ் ஆடியது இன்னமும் அவரிடம் பொக்கிஷமாக இருப்பது 'ஃபுட் வொர்க்' என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

சுழற்பந்து வீச்சாளர்களை சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக பயன்படுத்துவது இப்போதெல்லாம் ஏறக்குறைய விரயம் என்பது சமீப காலங்களில் தெரிய வந்துள்ள உண்மை. ஆனால் எதிரணியினர் என்ன செய்ய முடியும், ஏதாவது கவனப்பிசகு ஏற்பட்டு டெண்டுல்கர் ஸ்பின்னர்களிடம் ஆட்டமிழந்து விட மாட்டாரா என்ற ஆதங்கம் இருப்பது நியாயமானதுதான். ஆனால் சுழற்பந்தில் அவரே ஆட்டமிழந்தால்தான் உண்டு.

முன்பெல்லாம் கூட அணியின் மீதான நெருக்கடி இவரது பேட்டிங்கிலும் ஓரளவுக்கு பிரதிபலித்து அழுத்தம் காரணமாக தடுமாறியதுண்டு. ஆனால் சமீப காலங்களில் குறிப்பாக நேற்று அணியின் நெருக்கடி என்பது உள்ளார்ந்து இருந்தாலும் அது தன் பேட்டிங்கை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருந்ததை எடுத்துக் காட்டியது.

ஏற்கனவே லஷ்மண் ரன் அவுட் ஆனது இவர் மனதை பாதித்திருக்கலாம். அதனால் அவர் நேற்று கடைசி வரை நின்று லஷ்மண் ரன்களையும் சேர்த்து எடுக்க வேண்டிய கடமையைச் செய்தார்.

இரண்டாவது புதிய பந்து எடுத்தால் இந்தியாவை அவர்கள் சுருட்டி விடுவார்கள் என்று டெண்டுல்கர் கணித்து அதற்கு முன்பே ரன்களைக் குவிப்பதில் வேகம் காட்டினார்.

அப்படிப்பட்ட தருணத்தில்தான் பால் ஹேரிஸ் பந்தை அவர் மேலேறி வந்து அடித்தபோது அது அவர் கையில் பட்டு ரன்னர் முனையில் உள்ள ஸ்டம்பைத் தாக்க லஷ்மண் ஆட்டமிழந்தார்.

ஆனால் புதிய பந்து எடுத்த பிறகு மோர்கெலின் இரண்டு பந்துகள் பெரிய அளவில் ஆஃப் கட்டர் ஆகி டெண்டுல்கரின் தொங்கும் மட்டைக்கும் உடம்புக்கும் இடையில் புகுந்து சென்றது.

இனிமேல் தடுத்தாட முயன்றால் அது அவுட்டில்தான் போய் முடியும் என்று புரிந்து கொண்ட சச்சின் மோர்கெலின் அடுத்த ஷாட் பிட்ச் பந்தை ஆக்ரோஷமாக ஹுக் செய்து சிக்சர் அடித்து சதத்தை நிறைவு செய்தார்.

இந்த திடீர் தாக்குதல் மோர்கெலை சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பிறகு அடுத்த பந்தே தேர்ட் மேன் திசையில் திருப்பி விட்டதும் டெண்டுல்கரின் ஆதிக்கத்திற்கு உதாரணங்கள். சதத்திற்குப் பிறகு சச்சின் ஏறக்குறைய ஆட்டமிழக்கச் செய்ய முடியாத வீரர் என்ற அளவுக்கு விளையாடத் துவங்கி விட்டார்.

ஹர்பஜன் சிங் துவக்கத்தில் இருபது ஓவர் கிரிக்கெட் போன்று சுழற்றினார். ஏனெனில் பொதுவாக பந்து வீச்சாளர்கள் களமிறங்கும் போது இதுபோன்ற ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சிற்கு முன் தாங்கள் காயம் அடைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பர். ஆனால் டெண்டுல்கர் ஹர்பஜனிடம் பேசி அவரை சகஜமான கிரிக்கெட் ஆட்டத்தை விளையாட வலியுறுத்தினார். அதில் வெற்றியும் கண்டார்.

இவ்வாறு தான் விளையாடும்போது எவ்வளவு ரன்களை எடுக்க முடியுமோ அது வரை போராட்ட குணத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதை எதிர்முனை வீரர்களுக்கும் அவர் அறிவுறுத்துவதில் தயங்கியதில்லை. அதில் பலமுறை வெற்றியும் கண்டுள்ளார். ஒரு முறை ஜாகீர் கான் 75 ரன்கள் எடுக்கக் காரணமாயிருந்ததும் சச்சின் டெண்டுல்கர்தான்.

ஸ்டீவ் வாஹும் ஏறத்தாழ 18 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தார். ஆனால் அவர் 1997க்குப் பிறகுதான் பெரிய பேட்ஸ்மென் ஆனார். ரிக்கி பாண்டிங்கும் தற்போது கிரிக்கெட் உலகிற்கு வந்து 14, 15 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அவரது வீழ்ச்சியின் அறிகுறிகள் தெரியத் துவங்கிவிட்டது.

பிரையன் லாரா தென் ஆப்பிரிக்காவில் ஒரு தொடரில் தொடர்ந்து ஆலன் டொனால்டிடம் விக்கெட்டைப் பறிகொடுத்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 78 ரன்கள்தான் அவரது அதிகபட்ச ரன் எண்ணிக்கையாக அமைந்தது.

கேரி சோபர்ஸ் ஆலன் போர்டர், சுனில் கவாஸ்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், ஆல்வின் காளிச்சரண் என்று நமக்கு நினைவு தெரிந்த பேட்டிங் மேதைகள் இருந்தும் அவர்கள் விளையாடிய காலக்கட்டம், ஆட்டக்களம், பவுன்சர் விதிகள் என்ற வேறுபாடுகள் இருந்தாலும் சச்சின் அவர்களிலிருந்து வேறுபட்ட ஒரு மேதை என்பது நேற்றைய இன்னிங்ஸ் மூலம் தெரிந்தது.

இந்த மேதைமை இல்லாமல் 51 டெஸ்ட் சதங்கள் 46 ஒரு நாள் சதங்கள் ஒரு போதும் சாத்தியமாகாது. இனிமேலும் ஒருவர் இந்த கிரிக்கெட் சிந்தனையுடனும் உத்தியுடனும், இவ்வளவு நீண்ட காலம் கிரிக்கெட் ஆடும் திறமையுடன் வருவதும் கடினமே.

சச்சினின் இந்த இன்னிங்ஸ் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தால் அவர் நிச்சயம் தனது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் இதுதான் என்று இதனை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடைசியாக தனது 2010ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு சிறப்பான இடம் வழங்கிய இயன் சாப்பல் "சச்சின் தனது பழைய ஆதிக்கத்தை தற்போது மீண்டும் ஒரு கலையாகக் கண்டு பிடித்துக் கொண்டுள்ளார்." என்று கூறியுள்ளது சச்சினின் பெருமைக்குச் சான்று. ஏனெனில் இதே இயன் சாப்பல்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு கண்ணாடியிடம் தான் தொடர்ந்து விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்று கேட்கவேண்டும் என்று கடுமையாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?


புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.

ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.

ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.

ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.

இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.

சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

திங்கள், 3 ஜனவரி, 2011

மன்மதன் அம்பு… சர்ச்சைக்குரிய பாடலுக்கு வெட்டு! – கமல்



சென்னை: மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதி சர்ச்சைக்குள்ளான ‘கண்ணோடு கண் கலாந்தாளென்றால்…’ எனும் பாடலை தாமாக முன்வந்து நீக்குவதாக கமல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

“மன்மதன் அம்பு சினிமா படத்தில் நான் எழுதிப் பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த சேதி பரவலாகக் கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இப்பாடலில் புண்படுத்தக் கூடிய வரிகள் ஏதுமில்லாததால் அதை அனுமதித்தனர்.

இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால் கண்டிப்பாய் அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளைப் புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் சென்ஸார் சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன். இது ரெட் ஜெயண்ட் மூவிஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும் எல்லோரும் எம் மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்தில் பல கோடி பேர் ஏற்கெனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்த போதிலும் இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.

என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிறிஸ்துவரும் இருக்கின்றனர். அவர்களில் பலரும் என்னைப்போல் அல்ல. அவர்கள் தெய்வ விஸ்வாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.

மன்மதன் அம்பு வியாபாரம்.அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடையூறுகள் எனக்குப் புதிதல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்தச் சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும் அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. மற்றபடி பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு…”

- இவ்வாறு கமல்ஹாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இந்த அறிக்கை?

முன்னதாக, இந்து முன்னணியின் சென்னை மாநகர பொதுச் செயலாளர் தி.இளங்கோ நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், “மன்மதன் அம்பு” படத்தில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல்களை எழுதியிருக்கும் கமலஹாசனை கண்டித்து அவர் வீட்டின் முன் மாநில கலை இலக்கிய அணி பொறுப்பாளர் நடிகர் கனல் கண்ணன் தலைமையில் திங்கள்கிழமை மாலை முற்றுகை போராட்டம் நடைபெறும். பாடலை நீக்க முடியாது என்று கமலஹாசன் கூறியுள்ளார். பாடல் நீக்கப்படாவிட்டால் மன்மதன் அம்பு படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம்…, என்று கூறியிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை கொச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதுகூட, இந்தப் பாடலை நீக்க மாட்டேன் என்று கூறிய கமல், இந்து முன்னணியின் போராட்ட அறிவிப்புக்குப் பின்னர், வீ்ண் பிரச்சினைகளைத் தவிர்க்கும் பொருட்டு பாடலை நீக்கச் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

மன்மதன் அம்பு படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

கமல் அறிக்கை: