திங்கள், 3 ஜனவரி, 2011

மன்மதன் அம்பு… சர்ச்சைக்குரிய பாடலுக்கு வெட்டு! – கமல்



சென்னை: மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதி சர்ச்சைக்குள்ளான ‘கண்ணோடு கண் கலாந்தாளென்றால்…’ எனும் பாடலை தாமாக முன்வந்து நீக்குவதாக கமல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

“மன்மதன் அம்பு சினிமா படத்தில் நான் எழுதிப் பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த சேதி பரவலாகக் கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இப்பாடலில் புண்படுத்தக் கூடிய வரிகள் ஏதுமில்லாததால் அதை அனுமதித்தனர்.

இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால் கண்டிப்பாய் அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளைப் புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் சென்ஸார் சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன். இது ரெட் ஜெயண்ட் மூவிஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும் எல்லோரும் எம் மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்தில் பல கோடி பேர் ஏற்கெனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்த போதிலும் இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.

என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிறிஸ்துவரும் இருக்கின்றனர். அவர்களில் பலரும் என்னைப்போல் அல்ல. அவர்கள் தெய்வ விஸ்வாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.

மன்மதன் அம்பு வியாபாரம்.அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடையூறுகள் எனக்குப் புதிதல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்தச் சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும் அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. மற்றபடி பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு…”

- இவ்வாறு கமல்ஹாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இந்த அறிக்கை?

முன்னதாக, இந்து முன்னணியின் சென்னை மாநகர பொதுச் செயலாளர் தி.இளங்கோ நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், “மன்மதன் அம்பு” படத்தில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல்களை எழுதியிருக்கும் கமலஹாசனை கண்டித்து அவர் வீட்டின் முன் மாநில கலை இலக்கிய அணி பொறுப்பாளர் நடிகர் கனல் கண்ணன் தலைமையில் திங்கள்கிழமை மாலை முற்றுகை போராட்டம் நடைபெறும். பாடலை நீக்க முடியாது என்று கமலஹாசன் கூறியுள்ளார். பாடல் நீக்கப்படாவிட்டால் மன்மதன் அம்பு படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம்…, என்று கூறியிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை கொச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதுகூட, இந்தப் பாடலை நீக்க மாட்டேன் என்று கூறிய கமல், இந்து முன்னணியின் போராட்ட அறிவிப்புக்குப் பின்னர், வீ்ண் பிரச்சினைகளைத் தவிர்க்கும் பொருட்டு பாடலை நீக்கச் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

மன்மதன் அம்பு படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

கமல் அறிக்கை:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக