திங்கள், 10 ஜனவரி, 2011

அரசு – தொழிலதிபர்களுக்காக மக்கள் உழைக்கும் ‘மார்க்கெட் பொருளாதாரம்!’



அரசு – தொழிலதிபர்களுக்காக மக்கள் உழைக்கும் மார்க்கெட் பொருளாதாரம்!

ஒரு காலத்தில் சமத்துவ நாடுகளாக அல்லது முதலாளித்துவமும் பொதுவுடைமையும் கலந்த இரண்டும்கெட்டான் பொருளாதாரமாக இயங்கி வந்த நாடுகள் இன்று மார்க்கெட் எகானமி எனப்படும் சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறிவிட்டன.

அப்படி மாறிய நாடுகளின் இன்றைய நிலைக்கு நல்ல உதாரணம் இந்தியாதான்.

இங்கே எதுவுமே மக்களுக்காக இல்லை. அரசும் ஆளுவோரும் தங்களுக்காக மட்டுமே பாடுபடுகிறார்கள். பெருந்தொழில் நிறுவனங்கள் தத்தமது வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொண்டு இயங்குகின்றன. தங்கள் பொருள்களுக்கு இவ்வளவு விலை வைக்கிறோமே… மக்களால் அவற்றை வாங்க முடியுமா என்ற யோசனையை அவர்கள் இந்திராவின் காலத்துக்குப் பிறகு அறவே துடைத்தெறிந்துவிட்டனர். வாங்க முடிந்தவர்களுக்காக மட்டுமே மார்க்கெட். வாங்க இயலாதோரின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வழிகள் எதையும் காணோம்.

மக்கள் முடிந்த வரை உழைத்து அதை மொத்தமாக இந்த மார்க்கெட்டில் கொட்டுகின்றனர்.

இந்த சுழல்தான் இன்றைய மார்க்கெட் பொருளாதாரமாகிவிட்டது.

முன்பெல்லாம் விலை உயர்வு என்பது அரசின் கட்டுப்பாட்டில் ஓரளவுக்காவது இருந்தது. பெருந்தொழில் நிறுவனங்கள் இஷ்டத்துக்கு விலைகளை உயர்த்த முடியாத நிலை இருந்தது.

ஆனால் அது ஒரு காலம். இப்போது எப்போது பொருள்களின் விலைகள் உயர்கின்றன என்பதே தெரியவில்லை. விலை உயர்வு என்பது முற்றாக ஒருவழிப்பாதையாகவும் மாறிவிட்டது.

சமீபத்திய உதாரணம் பாருங்கள்… மக்களின் அத்யாவசியத் தேவைகளான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற நுகர்வோர் பொருள்களின் விலைகள் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. ஆனால் இதுபற்றி எந்த முன்னறிவிப்பும் இல்லை!

இன்றைய வாழ்க்கை முறையில் ப்ரிட்ஜ், வாஷிஹ் மிஷின், டிவிடி – மியூசிக் சிஸ்டம், ஓவன், மிகசர் கிரைண்டர் போன்றவை அடித்தட்டு மக்கள் வீட்டிலும் தவறாமல் புழங்கப்படும் சாதனங்களாகிவிட்டன.

குடிசை வீடுகளிலும் கூட வாஷிங் மிஷின், ஓவன் தவிர்த்து பிற சாதனங்களைக் காண முடியும்.

அந்த அளவு அத்யாவசியமாகிவிட்ட பொருள்களின் விலைகளும் ஒரேயடியாக 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் சாதன தயாரிப்பில் முன்னணியில் உள்ள கோத்ரெஜ் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஒரு மாதத்துக்கு முன்பே 10 சதவீத விலையை உயர்த்திவிட்டன. இப்போது இரண்டாவது ரவுண்ட் விலை உயர்வுக்கு அடிபோடுகின்றன. பொங்கலுக்குள் மீண்டும் இவை 5 முதல் 10 சதவீதம் வரை விலைகளை உயர்த்தக் கூடும். மார்ச்சில் பட்ஜெட் என்பதால் அதற்கு முன் மீண்டும் ஒரு விலை உயர்வும் சாத்தியமே என்று இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

“எங்களைக் குறை சொல்லி பயன் ஒன்றுமில்லை. ஒரே நேரத்தில் 30 சதவீத விலை உயர்வை மக்கள் தாங்க மாட்டார்கள் என்பதால் இரண்டு மூன்று தவணைகளாக உயர்த்துகிறோம். காரணம் உலோகங்களின் அசாதரண விலை உயர்வு. குறிப்பாக ஸ்டீல் விலை கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு உயர்ந்துவிட்டது..” என்கிறார் கோத்ரெஜ் அப்ளையன்ஸஸ் சிஇஓ ஜார்ஜ் மெனெஸஸ்.

காப்பர், பாலிமர் விலைகளும் 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளனவாம்.

கோத்ரெஜ் ப்ரிஜ் விலை ரூ 14610லிருந்து ரூ 16200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (230 லிட் ஃப்ராஸ்ட் ஃப்ரீ மாடல் – சென்னையில்). இதன் 300 லிட் மாடல் விலை ரூ 24500 லிருந்து 26000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதம் மீண்டும் உயரக் கூடும் அதற்குள் வாங்கிவிடுங்கள் என்றுதான் கடைகாரர்கள் விற்று வருகிறார்கள்.

ஏஸி விலையை இந்த குளிர்காலத்தில் 10 சதவீதம் கூட்டியுள்ளது சாம்சங். மற்ற பொருள்களின் விலையையும் ஏற்கெனவே உயர்த்திவிட்ட இந்த நிறுவனம், மீண்டும் சத்தமில்லாமல் ஒரு விலை உயர்வை செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் நுகர்பொருள் சந்தையின் மதிப்பு ரூ 35000 கோடி. ஆனால் இந்த பெரிய மார்க்கெட் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் சில்லோர் போட்டிச் சந்தையாக (Oligopoly structure) உள்ளது. எனவே எந்த நிறுவனமும் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதில்லை. இருக்கும் பிராண்டுகளின் தயாரிப்பாளர்கள் அனைவரும் மறைமுகமாக பேசி வைத்துக் கொண்டே விலைகளை உயர்த்துகிறார்கள்.

இப்போது கோத்ரெஜ்-சாம்சங் விலைகள் உயர்ந்துள்ளன என்றால், மற்ற முக்கிய பிராண்டுகளான வேர்ல்பூல், பானாசோனிக், ஐபிஎம், சோனி, ஓனிடா, வீடியோகான் போன்றவற்றின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். இந்த விலை உயர்வுகளை அரசும் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

பட்ஜெட்டுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் இப்போது நுகர்பொருள் விலைகள் பறக்க ஆரம்பித்துள்ளன. ஒரு வேளை பட்ஜெட்டில் சலுகைகள், மூலப் பொருள்களின் விலைக் குறைப்புகள் அறிவிக்கப்பட்டால், அப்போது பெயருக்கு சற்றே விலைக் குறைப்பு செய்யும் இந்த நிறுவனங்கள். ஆனால் அவர்களின் நிகர லாபம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. இதற்காகவே இப்போது ஜரூராக விலை உயர்வை செய்து வருகின்றனர்.

மொத்தத்தில், அரசு, மார்க்கெட் சக்திகள், பேரளவு நிறுவனங்கள் எல்லாரும் தங்கள் தங்கள் நலனில் குறியாக இருக்கிறார்கள். மக்கள் இவர்களுக்காக உழைக்கிறார்கள் என்பதே இன்றைய இந்திய மார்க்கெட் பொருளாதாரத்தின் நிதர்சனம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக