டெல்லி: செல்போன் எண்ணை மாற்றாமல், சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டத்தை இன்று நாடு தழுவிய அளவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்தியாவில் கிட்டத்தட்ட 70 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சர்வீஸைத் தேர்ந்தெடுத்து விட்டால் அதிலேயேதான் தொடர வேண்டியுள்ளது-அது பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும். சேவை எந்த லட்சணத்திலிருந்தாலும் வாடிக்கையாளர் அதை தாங்கிக் கொண்டே தீர வேண்டும் என்ற மிதப்பில் இஷ்டத்துக்கும் விளையாடி வந்தன செல்போன் நிறுவனங்கள்.
இப்போது இதற்கு ஒரு முடிவு கட்டியுள்ளது இந்திய தொலைத் தொடர்புத்துறை. எந்த மொபைல் போன் சர்வீஸ் பிடிக்காவிட்டாலும், நமது எண்ணை அப்படியே வைத்துக் கொண்டு சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் ‘மொபைல் போர்ட்டபிலிட்டி’ வசதி இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துவிட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் இன்று இந்த வசதியை நாடு தழுவிய அளவில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் லட்சக்கணக்கான ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கெனவே சேவை பெறும் நிறுவனத்தில் நிலுவை ஏதும் இல்லாத வாடிக்கையாளர் தனது ப்ரீ-பெய்டு அல்லது போஸ்ட்-பெய்டு இணைப்பை வேறு நிறுவனத்துக்கு இதன் மூலம் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் எண் வாங்கி 90 நாள்கள் ஆகியிருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும்.
கடந்த ஆண்டே தொடங்கப்பட இருந்த இந்தத் திட்டம், நான்கு முறை தள்ளி வைக்கப்பட்டது. இதற்கு சில தனியார் நிறுவனங்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது. ஒருவழியாக இந்தத் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹரியானாவில் தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஏர்டெல், வோடோபோன், ஐடியா, ஏர்செல், எம்டிஎஸ், வீடியோகான், யூனினார் ஆகிய செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த வசதியை அளிக்கவுள்ளன.
அதேபோல சென்னை (பெருநகரம்) மாநகரில் எம்டிஎஸ் தவிர மேற்கண்ட மற்ற நிறுவனங்கள் இந்த சேவையில் இணைந்துள்ளன. எனவே இவற்றில் எந்த நிறுவனத்தின் சேவை பிடிக்காவிட்டாலும் மற்றவற்றின் சேவைக்கு எண்ணை மாற்றாமலேயே மாறிக் கொள்ளலாம்.
கர்நாடகத்தில் மேற்கண்ட நிறுவனங்களுடன் ஸ்பைஸ் நிறுவனத்தின் சேவையும் இடம் பெறும்.
இவ்வாறு நிறுவனத்தை மாற்றிக் கொள்வதற்குக் கட்டணம் உண்டு. ஆனால் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறிட விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது. இதுதவிர புதிய சிம் கார்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 7 நாள்களில் புதிய நிறுவனத்தின் சேவை கிடைக்கும். அப்போது புதிய சிம் கார்டைப் பயன்படுத்த வேண்டும்.
புதிய சேவைக்கு மாறுவது எப்படி?
* செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு முதலில் UPC (Unique Porting Code) என்கிற எண்ணைப் பெறவேண்டும்.
* அதைப் பெறுவதற்கு செல்போனில் இருந்து PORT
* சில நொடிகளில் எட்டு இலக்க யுபிசி எண் கிடைக்கும். அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.
* இந்த எண்ணை எடுத்துக் கொண்டு தாங்கள் விரும்பும் புதிய சேவை நிறுவன மையத்துக்குச் சென்று அங்கு தரப்படும் விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பித் தர வேண்டும்.
* இதன் பிறகு புதிய சேவை நிறுவனம் புதிய சிம் கார்டு வழங்கும். இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்கப்படலாம். இந்தக் கட்டணம் அதிகபட்சமாக ரூ 19 வரை இருக்கலாம். ஆனால் வாடிக்கையாளர்களை இழுப்பதில் நிலவும் போட்டி காரணமாக இந்தக் கட்டணம் நீக்கப்படவும் வாய்ப்புள்ளது.
* அந்த சிம்கார்டு செயல்படத் துவங்கும் நேரத்தில் இருந்து புதிய நிறுவனத்தின் சேவை உங்கள் பழைய எண்ணிலேயே கிடைக்கும்.
சில முக்கிய குறிப்புகள்
சிடிஎம்ஏ, ஜிஎஸ்எம் ஆகிய இரு தொழில்நுட்பங்களில் எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வந்தாலும் மற்ற தொழில்நுட்பத்துக்கு மாறிக் கொள்ள முடியும்
அதேபோல் ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் திட்டங்களுக்கு இடையேயும் மாறிக்கொள்ளும் வசதி உண்டுஞ
ஒரே தொலைத் தொடர்பு வட்டத்துக்குள் மட்டுமே செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்ற முடியும். அதாவது சென்னையில் உள்ள எண்ணை டெல்லியில் உள்ள நிறுவனத்துக்கு மாற்ற முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக