திங்கள், 10 ஜனவரி, 2011

11000 ஹெச் -1 பி விசா… வாங்க ஆளில்லை!!


உயர்நடுத்தர வர்க்கத்து இந்தியர்களைப் பொறுத்தவரை சொர்க்கத்துக்கான டிக்கெட் எதுவென்று கேட்டால், ‘H 1 B விசா’ என்பார்கள் தயங்காமல்.

இந்திய எல்லைக்குள் அத்தனை கட்டுப்பெட்டித்தனங்களையும் பத்திரமாகக் காப்பாற்றி, அதை கீழிருப்பவன் தலையில் சுமத்திவிட்டு, அமெரிக்க முதலாளியிடம் சாசனத்தில் கையெழுத்திட்டு, மெக்டொனால்ட், கெண்டுகி, கோக், டின் பீர், வார இறுதிகளில் குஜால் என ‘சுதந்திர’ லைப்ஸ்டைலுக்குத் தாவ (இவையெல்லாம் இந்தியாவி்லேயே கிடைப்பது வேறு விஷயம்… ஆனால் இங்கே ‘பார்த்துவிடுவார்களே’!), கட்டாயத் தேவை இந்த H1B.

பல இந்தியர்களின் கனவான இந்த H1B-ஐ இன்று வாங்க ஆளில்லாத நிலை! கிட்டத்தட்ட 11000 H1B விசாக்கள், வருடம் முடியும் இந்தத் தருவாயிலும் வாங்க ஆளில்லாமல் தேங்கி நிற்பது, அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பெரும் வியப்பைத் தந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டுக்கான H1B கோட்டா 65000. கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது. 2009-ல் டிசம்பர் 21-ம் தேதி இந்த அளவை எட்டிவிட்டோம். ஆனால் இந்த ஆண்டு இன்னும் 11000 விசாக்கள் வாங்கப்படாமலேயே உள்ளது”, எனத் தெரிவித்துள்ளது.

உடனே, இந்தியா மீது அத்தனைப் பாசமா நம்மவர்களுக்கு என யாரும் சிலாகிக்க வேண்டாம்.

இந்த விசாக்கள் தேங்கிக் கிடக்கக் காரணம், அமெரிக்கப் பொருளாதாரத்தின் பரிதாப நி்லைதான்.

இன்னும் அங்கே வேலை இழப்புகள் நின்றபாடில்லை. பொருளாதார வளர்ச்சி இப்போதும் 3 சதவீதத்தைத் தாண்டவில்லை. இதுவரை உலக போலீஸ்காரனாகத் திகழ்ந்த அமெரிக்கா, விக்கிலீக்ஸ் விவகாரத்தில் உலகின் வில்லனாகப் பார்க்கப்படுகிறது. வெளியில் சொல்லாவிட்டாலும், பல நாடுகள் அமெரிக்க உறவை அளவோடு பேண முயலும் நிலை… முக்கியமாக சம்பளம் மிகவும் குறைந்துவிட்டதாம்.

இத்தனையும் சேர்த்து, H1B விசாக்களைத் தேங்க வைத்திருக்கிறது. இன்றைய தேதிக்கு, அமெரிக்காவுக்கு ஒரு ‘ஆல்டர்நேட்’ இருக்குமா என தீவிரமாகத் தேடுகிறார்கள் இந்தியாவின் ‘ஹைடெக் அப்பர் மிடில்கிளாஸ் ஆசாமிகள்’!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக