செவ்வாய், 25 ஜனவரி, 2011

குழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்!


வாஷிங்டன்: வடக்கு ஆப்கானிஸ்தானில் தாய்மார்களே தங்கள் குழந்தைகளுக்கு அபினை (ஓபியம்) ஊட்டி வளர்க்கிறார்கள்.

அஜீசா தனது 4 வயது மகன் உமைதுல்லாவிற்கு தினமும் காலை உணவாக கைநிறைய சுத்த அபின் தருகிறார். இதுதான் அவனுக்கு மருந்தும் கூட என்கிறார் அஜீசா.

அஜீசா பால்க் மாகாணத்தில் கம்பளம் நெசவு செய்யும் ஏழைக் குடும்பத்தில் வந்தவர். அவர் படிக்காதவர். உடல் நலக் கேடுகள் பற்றியோ அல்லது அபின் அடிமையாக்கிவிடும் என்பதோ அவருக்கு தெரியவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், "நான் அவனுக்கு அபின் கொடுக்கவில்லை என்றால் அவன் தூங்கமாட்டான். என்னையும் எந்த வேலையும் செய்யவிட மாட்டான்" என்றார்.

குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டாலும் நாங்கள் அபின் தான் கொடுப்போம் என்கிறார் அந்தத் தாய்.

முறையான மருத்துவ வசதி இல்லாததாலும், மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதாலும் அப்பகுதி மக்கள் அபினைத் தான் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

அஜீசாவின் மாமியார் ராசிகுல் கையில் சிறிது அபினை எடுத்து உருண்டையாக்கி சிரித்தவாறே தன் வாயில் போட்டுக் கொண்டார். பிறகு தனது சகோதரிக்கும் ஒரு அபின் உருண்டையைக் கொடுத்தார்.

'நான் உழைத்துதான் என் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதனால் நான் போதைப் பொருள் பயன்படுத்தத் தொடங்கினேன். நாங்கள் ஏழைகள், அதனால்தான் அபின். எங்களுக்கு உண்ணுவதற்கு வேறொன்றும் இல்லை. எனவே நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு போதைப் பொருள் கொடுத்து தூங்க வைத்துவிட்டு வேலை பார்க்கிறோம்,' என்றார் அந்த ஏழைத் தாய்.

அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து 4 மணி நேரம் பயணம் செய்தால் அரசு போதை மறுவாழ்வு மையம் உள்ளது. அங்கு 20 படுக்கைகள் உள்ளன. ஆனால் குறைந்த அளவே பணியாட்கள் இருக்கிறார்கள்.

'அபின் பயன்படுத்துவது என்பது எங்கள் கிராமத்தினருக்கோ, மாவட்டத்தினருக்கோ புதிததன்று. இது காலம் காலமாக உள்ள பழக்கம்,' என்று அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முஹமது தாவூத் தெரிவித்தார்.

'மக்கள் அபினை மருந்தாகவும், போதைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். ஒரு குழந்தை அழுதாலும் அபின் கொடுப்பார்கள், தூங்கவில்லை என்றாலும் அபின் தான், இருமினாலும் அபின் தான் கொடுப்பார்கள்', என்கிறார் முஹமது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக