வெள்ளி, 6 ஜனவரி, 2012

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி..''எப்ப பார்த்தாலும் நெகடிவா பேசி கடுப்பேத்துறான், யுவர் ஆனர்''!!

வட்டியைக் கூட கட்ட முடியாதவர்களுக்கு எல்லாம், கடன்களை அள்ளித் தந்து (subprime lending), திவால் ஆயின அமெரிக்க வங்கிகள். தாங்கள் திவால் ஆனதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் கீழே இழுத்துவிட்டன. இதையடுத்து 2008ம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் உருக்குலைந்து, உலகளவில் எதிரொலித்து, லட்சக்கணக்கானோரின் வேலைகளைப் பறித்தது. பெருமளவில் பொருளாதாரத் தேக்கம் ஏற்படப் போகிறது என்ற அச்சம் பரவினாலும், நல்ல வேளையாக, அந்த பொருளாதார சிக்கலில் இருந்து அமெரிக்கா ஓரளவுக்கு வேகமாகவே வெளியே வந்து கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்கா தட்டுத்தடுமாறி எழுந்துவிட்டாலும், அட்லாண்டிக் கடலுக்கு அந்தப் பக்கம், ஐரோப்பாவில் நிலைமை மகா மோசமாக உள்ளது. கிரீஸ், போர்ச்சுகல், இத்தாலி, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, யூரோவின் மதிப்பைச் சரித்து, அந்த கரன்சியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளையும் சிக்கலில் இழுத்துவிட்டுவிட்டது. மேலே சொன்ன நாடுகளின் வளர்ச்சி விகிதம் என்னவாக உள்ளது என்று தெரியுமா.. கிட்டத்தட்ட 0%. அதாவது, இன்னும் கொஞ்சம் சறுக்கினால், மைனஸ் வளர்ச்சி விகிதத்துக்குள் போய்விடும் நிலைமை. இந்த 'பிக்ஸ்' (Portugal, Italy, Ireland, Greece and Spain நாடுகளின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து 'PIIGS' என்று 'அன்போடு' அழைக்கின்றனர் உலக சந்தைகளில்) நாடுகள் கிட்டத்தட்ட பொருளாதாரத் தேக்க நிலைக்குள் போய் விட்டன என்றே கருதப்படுகிறது. ஒட்டுமொத்த ஐரோப்பாவின் உற்பத்தி மதிப்பில் (GDP) 25 சதவீதத்தை பூர்த்தி செய்வது இந்த 'பிக்ஸ்' தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, இங்கு ஏற்படும் பொருளாதாரத் தேக்கம் ஐரோப்பாவின் பலமிக்க பொருளாதார சக்திகளான ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்தையும் சேர்த்து பதம் பார்க்கப் போவதும் நிஜம். ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் முக்கியமான வருவாய், மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதி மூலம் தான் வருகிறது. இப்போது, பெரும் கடன் சிக்கலில் உள்ள ஐரோப்பிய நாடுகள் இறக்குமதியை குறைக்க ஆரம்பித்துவிட்டதால், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் ஏற்றுமதி மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளுக்கான அமெரிக்காவின் ஏற்றுமதியும் சரிந்துவிட்டது. ஆக, ஐரோப்பாவில் சில நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனை ஒட்டு மொத்த யூரோ நாடுகளையும் சரிய வைத்து, அமெரிக்காவையும் தாக்கிவிட்டது. அமெரிக்காவில் தங்களது உற்பத்தி மையங்களை வைத்துள்ள பல ஐரோப்பிய நிறுவனங்களும் உற்பத்தியைக் குறைத்துவிட்டன. இதனால், அமெரிக்காவில் ஐரோப்பிய நிறுவனங்கள் மூலம் உருவான வேலைவாய்ப்புகளும் குறைய ஆரம்பித்துவிட்டன. எனவே அட்லாண்டிக் கடலுக்கு அந்தப் பக்கமும் (அமெரிக்கா) இந்தப் பக்கமும் (ஐரோப்பா) பிரச்சனை. இந்தப் பிரச்சனைகள் அடுத்து ஆசியா உள்ளிட்ட நாடுகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதும் உண்மை. ஆசிய நாடுகளுக்கு ஐரோப்பாவிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. அடுத்ததாக ஆசிய நாடுகளில இருந்து இறக்கமதிகளையும் ஐரோப்பிய நாடுகள் குறைக்க ஆரம்பித்தால், இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் மீண்டும் ஒரு 2008ம் ஆண்டு பொருளாதார சிக்கலை சந்திக்க வேண்டி வரலாம். ''எப்ப பார்த்தாலும் நெகடிவாகவே பேசி கடுப்பேத்துறான், யுவர் ஆனர்'', என்று என் மீது கோபம் வரலாம். ஆனால், இந்தப் பொருளாதார சிக்கலில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு தீர்வையும் முன் வைக்கிறார்கள் மாபெரும் பொருளாதார நிபுணர்கள். அவர்கள் சொல்வது இது தான். ஐரோப்பிய மத்திய வங்கியான ECB நிறைய யூரோ கரன்சியை அச்சடிக்க வேண்டியது, அந்தப் பணத்தை வைத்து பிக்ஸ் நாடுகள் வெளியிடும் கடன் பத்திரங்களை (bonds) மொத்தமாக வாங்கிப் போட வேண்டியது, இதனால் கடன் பத்திரங்களின் மதிப்பு உடனடியாகக் கூடும், எப்போது கடன் பத்திரங்களின் மதிப்பு அதிகரிக்கிறதோ, அதில் முதலீடு செய்வோரின் ஆர்வம் அதிகமாகும், அதாவது அதிகமான பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்குவர், இதில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடும் வந்து குவியும், இதனால் வங்கிகளுக்கு அரசு தரும் கடனுக்கான வட்டியைக் குறைக்கலாம், குறைந்த வட்டிக்கு பணம் கிடைத்தால், வங்கிகளும் குறைந்த வட்டிக்கு அதை நிறுவனங்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும், இதனால் சந்தையில் பணப் புழக்கம் பெருகும், பொருளாதார நெருக்கடியும் கட்டுக்குள் வரும். இது தான் பொருளாதார நிபுணர்கள் சொல்லும் பல தீர்வுகளில் ஒன்று. அரசே காசை அச்சடித்து பிரச்சனையை தீர்ப்பதா.. இது துக்ளக் யோசனை மாதிரியல்லவா இருக்கிறது என்று நினைக்காதீர்கள். 2008ம் ஆண்டு பொருளாதார சிக்கலின் உச்சத்தில் அமெரிக்கா இருந்தபோது அந் நாட்டின் பெடரல் ரிசர்வ் வங்கி இதைத் தான் செய்தது. டாலர்களை அச்சடித்து குவித்து, தனது பொருளாதார சிக்கலை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்து காட்டியது. ஆனால், அமெரிக்கா ஒரே நாடு.. ஒரே டாலர்.. அச்சடித்து தீர்த்துவிட்டார்கள். ஆனால், யூரோ ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல. கூடுதலாக அச்சடிக்கப்படும் யூரோவால் ஜெர்மனி, பிரான்ஸ், ஹாலந்து போன்ற இப்போது பொருளாதார பிரச்சனை இல்லாத நாடுகளிலும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் வரலாம். அதாவது சந்தையில் பணம் நிறைய இருந்தால், பொருட்களின் விலை உயரும். 'பிக்ஸ்' நாடுகளைக் காப்பாற்ற நாங்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும் என இந்த நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்கலாம். இதனால் வேறு ஏதாவது தான் செய்ய வேண்டும் என்று மண்டையை குழப்பிக் கொண்டுள்ளனர் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக