வெள்ளி, 27 ஜனவரி, 2012
மேலை நாட்டினருக்கு வேலை இந்திய நிறுவனங்கள் உறுதி!
டவோஸ் : அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக உலக பொருளாதார மாநாட்டில் இந்திய தொழிலதிபர்கள் கூறி உள்ளனர். உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர 5 நாள் மாநாடு சுவிட்சர்லாந்தின் டவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உலக பொருளாதார வளர்ச்சி பற்றியும், அதிலிருந்து விடுபடுவது பற்றியும் இதில் ஆராயப்படும்.
இந்தியா சார்பில் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மா, மத்திய அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா, திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அசிம் பிரேம்ஜி, ஆதி கோத்ரெஜ், ராகுல் பஜாஜ் மற்றும் சுனில் மிட்டல் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் தட்டிப் பறிப்பதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அண்மையில் கூறியிருந் தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், மேற்கத்திய நாடுகளின் வேலையை இந்தியா பறிக்கவில்லை என்றும் மாறாக, அங்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதில் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக இந்திய தொழில் துறையினர் கூறியுள்ளனர்.
உலகமயமாக்கல் கொள்கை காரணமாக, வெளிநாடுகளில் தொழில் செய்யும் நிறுவனங்கள் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. அந்த வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும் என இந்தியாவின் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவன துணைத் தலைவர் வினித் நாயர் பொருளாதார மாநாட்டில் பேசிய அறிவித்துள்ளார்.
விப்ரோ டெக்னாலஜிஸ் தலைவர் அசிம் பிரேம்ஜி கூறுகையில், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வர இருப்பதால், வாக்காளர்களைக் கவருவதற்காக ஒபாமா பொருத்தமற்ற குற்றச்சாட்டை கூறி வருகிறார் என கூறியுள்ளார். இந்தியர்களின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேவரூன் பேசியுள்ளார். இந்தியா போன்ற வளரும் நாடுகளால் ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை, மாறாக அதிக பயன் கிடைக்கும். இப்போதைய நிதிநெருக்கடியிலி ருந்து விடுபடுவதற்கு, வளரும் நாடுகளுடன் பொருளா தார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக