திங்கள், 9 ஏப்ரல், 2012

தமிழகத்தில் சுற்றுலா பஸ், ஆம்னி பஸ், மேக்சி கேப், ஜே.சி.பி. எந்திரங்களுக்கு வரி அதிகரிப்பு!

சென்னை: சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பஸ்கள், மேக்சி கேப், மண் அள்ளும் எந்திரங்களுக்கான வரியை தமிழக அரசு அதிகரித்துள்ளது. இது தொடர்பான மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: சுற்றுலா பஸ்களுக்கும் ஆயுட்கால வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இருக்கை எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு சுற்றுலா பஸ்களுக்கு காலாண்டு வரி விதிப்பதில் இடர்பாடு உள்ளது. எனவே 6 சதுர மீட்டருக்கு மேற்பட்ட தரை பரப்பு கொண்ட புதிய வாகனங்களுக்கு ஆயுட்கால வரி விதிப்பு செய்வது என்றும், ஏற்கனவே பதிவு செய்த வாகனங்களுக்கு தரை பரப்பின் அடிப்படையில் காலாண்டு வரி விதிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மண் அள்ளும் எந்திரங்கள், சாலையை செப்பனிடும் எந்திரங்கள், பளு தூக்கிகள், தளவாட வண்டிகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபடும் வாகனங்களும் தற்போது அதிகரித்துள்ளன. இதற்கான ஆண்டு வரி மிகவும் குறைவாக உள்ளது. எனவே இந்த வாகனங்களுக்கு ரூ.10,000 அளவில் ஆண்டு வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. உரிமையாளரின் வணிகம், தொழில் தொடர்புடைய நபர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பயன்பாடு (மேக்சி கேப்) அதிகரித்திருந்தாலும் மற்ற வாகனங்களை விட இந்த வாகனங்களுக்கு வரி குறைவாகவே உள்ளது. எனவே இந்த வாகனங்களை குளிர்சாதன வசதி, குளிர்சாதன வசதி இல்லாதவை என வகைப்படுத்தி இருக்கை அடிப்படையில் காலாண்டு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உபரி பேருந்துகள் (spare bus) ஒப்பந்த ஊர்திகளாக பயன்படுத்தப்படுவதால் அவை சிறப்பு நிகழச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் போது தனிப்பட்ட வரி ஒன்றை விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. நமது மாநில வாகனங்களை கணக்கிடும்போது மற்ற மாநில ஒப்பந்த ஊர்திகள் அதிக அளவில் சாலையை பயன்படுத்துவதால் அந்த வாகனங்களுக்கு அதிக சதவீதத்திலான வரி விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பஸ், மேக்சிகேப், ஜே.சி.பி. வாகனங்களுக்கு வரி உயருகிறது. மண் அள்ளும் ஜே.சி.பி. எந்திரத்திற்கு ஆண்டு வரி ரூ. 10 ஆயிரமாக உயரும். ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ள பழைய சுற்றுலா வாகனத்திற்கு 14.5 சதவீதம் ஆயுள் வரி விதிக்கப்படும். ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாகனத்திற்கு 10 சதவீத வரியும், ரூ. 10 லட்சத்திற்கு கீழ் உள்ள வாகனங்களுக்கு 15 சதவீத ஆயுட்கால வரியும் விதிக்கப்படுகிறது. கட்டுமான பணிகளில் ஈடுபடும் வாகனங்களின் வரியும் உயருகிறது.

வியாழன், 5 ஏப்ரல், 2012

ஒரு நிமிடத்தில் அப்படி என்னதான் நடக்கிறது இன்டர்நெட்டில்..!

இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது இன்டர்நெட்டில். உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்தி 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன. மனதில் தோன்றியவற்றை அப்பொழுதே நம்மை ட்விட் செய்ய சொல்லும் ட்விட்டரில் ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் ட்விட்கள் செய்யப்படுவதோடு, 320-திற்கும் மேற்பட்ட ட்விட்டர் அக்கவுன்டுகள் உருவாக்கப்படுகின்றன. ஃபோட்டோ ஷேரிங் மூலமாக மனதில் பட்டென்று ஒட்டி கொள்ளும் ஃப்லிக்கரில் ஒரு நிமிடத்திற்கு 3 ஆயிரம் ஃபோட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன. 2 கோடி ஃபோட்டோக்கள் பார்க்கப்படுகின்றன. ப்ரொஃபெஷனல் தோரணையில் கலக்கும் லின்க்டுஇன் சமூக வலைத்தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அக்கவுன்டுகள் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்றன. 47 ஆயிரம் அப்ளிக்கேஷன்கள் டவுன்லோட் செய்யப்படுகின்றன. இப்பொழுதெல்லாம் அதிக மக்களால் மொபைலில் நெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1 நிமிடத்திற்கு 1,300 பேர்கள் மொபைல் மூலம் இன்டர்நெட்டிற்கு வருகை தருகிறார்கள். சமூக வலைத்தளங்கள் பெருகி வரும் காலத்தில் கூட இ-மெயில் மவுசு குறையவில்லை தான். 20 கோடியே 40 லட்சம் இ-மெயில்கள் ஒரு நிமிடத்திற்கு பரிமாறி கொள்ளப்படுகிறது. எதை பற்றிய சரியான குறிப்பேடுகள் தேவைப்பட்டாலும் பட்டென்று ஞாபகம் வருவது விக்கிப்பீடியா. இதில் 1 நமிடத்திற்கு 6 பக்கங்கள் உருவாக்கப்படுகின்றன. இப்பொழுது பயன்படுத்தப்பட்டு வருவதைவிட 2015-ஆம் ஆண்டில் 2 மடங்கு அதிகமாக நெட் டிவைஸ்கள் பயன்படுத்தப்படும் என்றும் சில முக்கிய தகவல்கள் கூறுகின்றன. 6 லட்சத்தி 39 ஆயிரத்தி 800 ஜிபி அளவு ஐபி தகவல் பரிமாற்றங்களும் நிகழ்கின்றன. அது மட்டும் அல்லாமல் ஆன்லைன் மூலம் அதிகமான புத்தகங்களை விற்பனை செய்து வரும் அமேசானில் 1 நிமிடத்திற்கு 83 டாலர் அதாவது ரூ.4,230 மதிப்புக்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன. இப்படி அடுத்து அடுத்து இன்டர்நெட் பற்றிய பெரிய தகவல்களை கூறுகிறது ஒரு பரபரப்பான ரிப்போர்ட். இந்த தகவலை படித்தவர்கள் மற்றவர்கள் போல் சும்மா இன்டர்நெட் உலகம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்ற புள்ளி விவரத்தினையும் தெரிந்து கொண்டு சொல்லலாம், இது இன்டர்நெட் யுகமென்று.

வெள்ளி, 30 மார்ச், 2012

ரூ.1.34 கோடி சம்பளத்தில் இந்திய மாணவரை பணியமர்த்திய ஃபேஸ்புக்!

ஆண்டுக்கு ரூ.1.34 கோடி சம்பளத்தில் இந்திய மாணவரை பணியமர்த்தியுள்ளது சமூக வலைதளமான ஃபேஸ்புக். அலஹாபாத்திலுள்ள மோதிலால் நேரு தொழில்நுட்ப கழகத்தில்(எம்என்என்ஐடி) அந்த மாணவர் பிடெக் பயின்று வருகிறார். இந்த தகவலை எம்என்என்ஐடியின் நிர்வாக இயக்குனர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இதை ஃபேஸ்புக் அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். அந்த மாணவர் பற்றிய பெயர் உள்ளிட்ட இதர விபரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஃபேஸ்புக்கில் பணியில் சேர இருக்கும் அந்த மாணவர் தற்போது இறுதியாண்டு பயின்று வருகிறார். இன்னும் 4 மாதங்களில் படிப்பை முடித்தவுடன் பணியில் சேர உள்ளார். எடுத்தவுடன் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊதியத்தில் பணியில் சேரும் மாணவர் என்ற பெருமையை அவர் பெற இருக்கிறார்.

புதன், 28 மார்ச், 2012

தமிழில் இ-காமர்ஸ் தளம்.. மக்கள் ஆதரிப்பார்களா?

பர்ஸ் நிறைய பணம் எடுத்துக் கொண்டு, கடை கடையாக ஏறி இறங்கி, பார்த்துப் பார்த்து பொருள்களை வாங்கிக் கொண்டு வந்த காலம் இனி இல்லை எனும் நிலை உருவாகி வருகிறது. இப்படி ஷாப்பிங் போவதில் ரிஸ்க் அதிகம் என்பது ஒரு பக்கம், அலைச்சல், நேர விரயம் என பல அசௌகரியங்கள். நாமே நேரில் பார்த்து வாங்கினோம் என்ற திருப்தி மட்டும்தான். ஆனால், இப்போது இணையத்திலேயே பொருள்கள், சேவைகளைப் பெற முடியும் என்ற நிலை வந்துவிட்டது. பிராண்டட் பொருள்கள் என வரும்போது, அவற்றை நேரில் போய் பார்த்துதான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தரம் உறுதிப்படுத்த ஒன்று என்பதால் பிடித்த மாடல் அல்லது நிறத்தை மட்டும் பார்த்து ஆர்டர் கொடுத்துவிட்டால், வீடு தேடி வந்துவிடும். செல்போன், லேப்டாப், மியூசிக் சிஸ்டம்ஸ், நகைகள், துணிகள், டிவி, பிரிட்ஜ், ஏஸி உள்ளிட்ட மின்னணு பொருட்கள், இனிப்புகள் உள்ளிட்ட தின்பண்டங்கள்.... இப்படி எல்லாமே இ-காமர்ஸ் வர்த்தகத்துக்குள் அடங்கிவிட்டன. சர்வீஸ் இன்டஸ்ட்ரி எனப்படும் சேவைத்துறையும் இப்போது இ-காமர்ஸில் வந்துவிட்டது. முன்பெல்லாம் ரயில், விமான டிக்கெட் பதிவது, சுற்றுலா திட்டமிடுவது போன்றவற்றுக்காகத்தான் ஆன்லைனை பயன்படுத்தினர். இப்போது, வீட்டில் குழாய் ரிப்பேரா... பக்கத்தில் யாரும் ப்ளம்பர் இல்லையா.. உடனே ஒரு இ-காமர்ஸ் தளத்தில் விஷயத்தைச் சொன்னால், அடுத்த சில மணி நேரங்களில் வீட்டு வாசலில் ப்ளம்பர்! கம்ப்யூட்டர் சர்வீஸ், டிவி ரிப்பேர் அல்லது ஏஸி பராமரிப்பு... அட தோட்ட வேலைக்குக் கூட ஆள் தயார்! இ-காமர்ஸை பிரமாதமாகப் பயன்படுத்துவது ரியல் எஸ்டேட் துறைதான். கையில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு இருநதால் போதும், ஆன்லைனில் ஆர்டர் கொடுத்துவிடலாம். இ செக் அல்லது பொருளை டெலிவரி செய்யும்போது பணம் தருவது என இன்னும் கூட சுலபமான பரிமாற்றங்கள் இ-காமர்ஸில் வந்துவிட்டன. இந்தியாவில் ஆரம்பத்தில் பெரிதாக கவனிக்கப்படாத இந்த இ-காமர்ஸின் இன்றைய வளர்ச்சி என்ன தெரியுமா... கிட்டத்தட்ட 200 சதவீதம்! இந்திய சந்தையின் அளவைப் பார்த்த பல வெளிநாட்டு நிறுவனங்கள், இ-காமர்ஸ் மூலம் பொருட்களை விற்க தயாராக இந்தியாவில் கிளைகள் திறந்து, நல்ல சம்பளத்தில் பணியாளர்களையும் நியமித்துள்ளன. இந்த இ-காமர்ஸ் தளங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் இருக்கும். நம்பகமான, சரியான சேவை தரும் ஒரு இ-காமர்ஸ் தளத்தை தமிழில் கொண்டு வரவும் முயற்சிகள் நடக்கின்றன. அப்படி ஒரு இணையத்தளம் தமிழில் வந்தால் அதை நீங்கள் பயன்படுத்துவீர்களா..?. இல்லை ஆங்கிலத்தில் இருந்தால் தான் வசதி என்கிறீர்களா.. உங்க கருத்தை சொல்லுங்களேன்...

ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இதப்படிங்க !

ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம். பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. இன்றைக்கு பற்கள் பாதிக்கப்பட்டால் இதயம், பக்கவாதம் போன்ற நோய்களும் எட்டிப்பார்க்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே பற்களை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது அவசியம். பற்களை பாதுகாக்க வீட்டில் உள்ள பொருட்களே உதவுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள் அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும். கீரைகளை நன்றாக மென்று துப்பலாம். இதனால் பல் இடுக்குகளில் உள்ள உணவுப்பொருட்கள் வெளியேறிவிடும், பற்கள் ஆரோக்கியமடையும். பச்சை வெங்காயத்தை மூன்று நிமிடம் நன்றாக மென்று துப்ப வாய், பற்களில் உள்ள தேவையற்ற கிருமிகள் இறந்துவிடும். உணவு உண்டவுடன் வெதுவெதுப்பான நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும். சத்தான உணவுகள் சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள அமிலம் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது. தினசரி உணவில் கால்சியம், வைட்டமின் சி போன்றவைகளை அதிகம் சேர்த்துக்கொள்வது பற்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். தினசரி அரை எலுமிச்சையை சாறு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கலாம். பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும். பல்வலியை போக்க பல்வலி ஏற்பட்டால் அந்த இடத்தில் சிறிதளவு வெள்ளைப் பூண்டை எடுத்து பல் வலிக்கும் இடத்தில் வைக்க நிவாரணம் கிடைக்கும். அதேபோல் கிராம்பு பொடி செய்து பல்வலி உள்ள இடத்தில் வைக்கலாம். வெள்ளைப் பூண்டு, கல் உப்பு சேர்த்து நன்றாக பல் தேய்க்க பல்வலி குணமாகும். வாய் துர்நாற்றம் போக தினசரி நன்றாக பல்துலக்க வேண்டும். வாய், நாக்கு உள்ளிட்ட இடங்களில் அழுக்குகளை நீக்க வேண்டும். கொத்தமல்லி இலைகளை நன்றாக மென்று சாறுகளை விழுங்கலாம். வெதுப்பான நீரில் ஒரு டீ ஸ்பூன் இஞ்சி, ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும். தினசரி மூன்று முறை இவ்வாறு செய்யலாம். சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிதளவு பேகிங் சோடா, சிறிதளவு தூள் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். ஆரோக்கியம் அவசியம் இதேபோல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்க முடியும்.

தாம்பத்யத்திலும் தன்னம்பிக்கை வேண்டும்!

எந்த ஒரு விசயத்திற்கும் தன்னம்பிக்கை வேண்டும். நம்பிக்கையில்லாமல் தொடங்கும் விசயம் வெற்றியடையாது என்கின்றனர் நிபுணர்கள். அதுபோலத்தான் தாம்பத்யத்தையும் தன்னம்பிக்கையோடு அணுகவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்களேன். பயத்தை விட்டொழியுங்கள் படுக்கையறையில் பயத்துக்கு எந்த வேலையும் இருக்கக் கூடாது. ஒரு கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ படுக்கையறை என்பது பயங்களின் கூடாரமாக இருந்தால் தாம்பத்ய சுகம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.தேவையில்லாத பயத்தை விட்டொழியுங்கள். உங்கள் தன்னம்பிக்கைதான் தாம்பத்யத்தில் உங்களை வெற்றிகரமானவராக செயல்பட வைக்கும். எனவே படுக்கையறைக்கு பாம்பு, பூதம், எதுவும் இல்லை. எனவே தேவையற்ற பயத்தை விட்டுவிட்டு தன்னம்பிக்கையுடன் தொடங்குங்கள் வெற்றிகரமான வாழ்க்கை கிடைக்கும். சந்தோசமான சிரிப்பு படுக்கையறையில் நுழையும் போதே புன்னகையுடன் இருங்கள். முடிந்த அளவு மகிழ்ச்சியோடு சிரியுங்கள். தாம்பத்யம் என்பது மகிழ்ச்சிகரமானதுதானே. அங்கே எதற்கு சோகமும், கவலையும். எனவே சந்தோசமாக சிரியுங்கள். சிரிப்பே உங்கள் இருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சின்ன சின்ன விளையாட்டு படுக்கையறையில் நீங்கள் விளையாடும் சின்ன சின்ன விளையாட்டுக்கள் உங்களின் உற்சாகத்தை அதிகரிக்கும். விளையாட்டுக்களின் மூலம் உங்கள் உணர்வுகள் கிளர்ச்சியடையும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் தன்னம்பிக்கையோடு தாம்பத்ய வாழ்க்கையை தொடரலாம். அமைதி அவசியம் படுக்கையறையில் எப்போதும் பூரண அமைதி நிலவ வேண்டும். படுக்கையறை தூய்மையின் இருப்பிடமாக தாம்பத்திய உறவும், ஆரோக்கியம் ததும்புவதாகவும், மிகுந்த பாதுகாப்பு கொண்டதாகவும் அமைந்திருக்க வேண்டும். புழுக்கமும் வியர்வையும் நங்கூரம் போடும் இடமாக இருக்கக் கூடாது. காற்றுக்கு எந்த பஞ்சமும் இருக்கக் கூடாது. உற்சாகமாக தொடங்குங்கள் கணவன் மனைவி இருவரும் இன்பம் பொங்க இணைவதற்கு இரண்டு பேரும் ஒருவரையருவர் தாம்பத்திய உறவில் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கணவன் மனைவி இருவரும் ஒருவரையருவர் விரும்பி ஏற்றுக் கொள்வதில் எந்த சிக்கல்களும். இருக்கக் கூடாது. சுத்தமின்மை, வழியும் வியர்வை, உடல் துர்நாற்றம், எரிச்சலூட்டும் வியர்க்குரு, நெருங்கவே முடியாமல் செய்யும் வாய் துர்நாற்றம் ஆகியவை இல்லற சுகத்தை பாதிக்கும். பெண்கள் கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, வால்மிளகு சேர்த்து அரைத்த குளியல் பொடியை பயன்படுத்தி தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளலாம். கணவனோ மனைவியோ தங்களுக்கு தோல் நோய்கள் இருந்தால் அதற்கு அம்மான் பச்சரிசி, மஞ்சள், வேப்பிலை, துளசி இலை போன்றவற்றை மைய அரைத்து உடம்பு பூராவும் பூசி வைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம். சிகரெட் புகைப்பவர்கள். மதுப் பழக்கம் உள்ளவர்கள் மேல் எப்போதும் ஒரு வித வாசனை வீசும். இது போன்ற பழக்கம் உள்ளவர்கள் படுக்கையறைக்குள் நுழையும் போது தங்கள் மேல் நாற்றம் அடிக்காமல் இருக்க ஒரு குளியலைப் போட்டு விட்டு நுழைவது நல்லது. மணக்கும் மலர்கள் நமது படுக்கையறையை தங்கமும் வைரமும் வைத்து இழைத்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நம்மால் எளிதில் வாங்கி சூடிக் கொள்ள முடிகிற பூக்களைக் கொண்டே நமது படுக்கையறையை கமகமக்க வைக்கலாமே. பூக்களின் நறுமணமே உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். பகிர்ந்து கொள்ளுங்கள் கணவனோ மனைவியோ தாம்பத்தியத்தில் தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்கள் மீதான தேவையற்ற அச்சத்தை விலக்க உதவும். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். தாம்பத்யம் குறித்த பயம் விலகும்.

செவ்வாய், 20 மார்ச், 2012

புதுச்சேரியில் அரசு வேலை… ப்ளஸ் டூ, டிகிரி படிச்சிருந்தா போதும்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் காலியாக உள்ள கிளார்க் – காசாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: 1. Upper Division Clerks/Upper Division Clerk (UDC) – Cashier -8 2. Multi Task Staff – 15 காலியிடங்கள்: UDC – 8 (பொது -5, பிசி-2, எஸ்சி -1) இவற்றில் ஒரு இடம் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. MTS – 15 (பொது 8, பிசி 5, எஸ்ஸி-2) முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரு இடம் உள்பட. சம்பளம்: UDC: ரூ.5,200 – 20,200/- தர ஊதியம் ரூ 2400 மற்றும் இதர படிகள். MTC: ரூ 5,200 – 20,200/- தர ஊதியம் ரூ 1800 மற்றும் இதர படிகள். கல்வித்தகுதி: UDC- பணிக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிப்பொறியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும். MTS -பணிக்கு ஜஸ்ட் மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருந்தால் போதும். வயதுவரம்பு: 31.01.2012 தேதியில் 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி SC/OBC/ESM/ Women/ ESIC பணியாளர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: UDC-க்கு ரூ 225. MTS-க்கு ரூ 125. SC/OBC/ESM/ Ladies/ ESIC பணியாளர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இதனை Regional Director, ESI Corporation பெயரில் புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் SBI-ல் டி.டி.யாக எடுக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.esicpondicherry.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மின்னஞ்சல் முகவரி கட்டயாம் இருக்க வேண்டும். விண்ணப்பித்த விண்ணப்ப பதிவிறக்கம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும். (ஆன்லைனில் 31-ம் தேதிக்குள் விண்ணப்பித்து, அந்த படிவத்தை பின் தரவிறக்கம் செய்து சான்றிதழ்களுடன் தபாலில் அனுப்ப வேண்டும். அனைத்து அரசுப் பணிகளுக்கும் இப்போது இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும். எனவே மிக எச்சரிக்கையுடன் விண்ணப்பிக்கவும்). ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2012. விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 13.02.2012. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Regional Director, Regional Office. ESI Corporation, 178, Anasari Duraisamy Nagar, 100 feet Road, Opposite to RTO Office, Puducherry – 05004. மேலும் விவரங்களுக்கு www.esicpondicherry.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

செவ்வாய், 13 மார்ச், 2012

பெண்களின் மனதை கவர இதைப் படிங்க!

இந்த பொண்ணுங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்கும் என்று மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர் இன்றைய இளசுகள். இதையே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு பெண்களின் மனதை கவரவும், அவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொள்ளவும் ஆலேசானை கூறியுள்ளனர் நிபுணர்கள். பெண்களோட பேசப்போறதுக்கு முன்னாடி இளைஞர்களே இதப் படிச்சிட்டு போங்க. நேர்மையா இருங்க நேர்மையான ஆண்களை மட்டுமே பெண்களுக்குப் பிடிக்கிறதாம். எதற்கெடுத்தாலும் பொய்சொன்னால் உங்களுடன் பழகுவது ரிஸ்க் என்று உங்கள் பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டார்களாம். நகைச்சுவை உணர்வு ஆண்களுக்கு நகைச்சுவை உணர்வு அவசியம். சிரிக்க சிரிக்க பேசும் ஆண்களையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம் உங்களின் பேச்சு ஆண்களை அப்படியே அட்ராக்ட் செய்யவேண்டும். அதேசமயம் நகைச்சுவை என்ற பெயரில் போரடித்துவிடக்கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். பாதுகாக்கும் தன்மை எந்த ஆணின் அருகில் இருக்கையில் பாதுகாப்பாக உணர்கின்றனரோ அந்த ஆண்தான் பெண்ணின் மனதை கவர்ந்தவன். அதனால்தான் எம்.ஜி.ஆர் காலத்திய திரைப்படங்களில் இருந்து இன்றைய தனுஷ் திரைப்படங்கள் வரை கதாநாயகன் நான்கு பேரிடம் சண்டை போட்டாவது கதாநாயகியை காப்பாற்றுவது போல காட்சி அமைக்கின்றனர் இயக்குநர்கள். எனவே பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுங்கள். அழகும், அறிவும் ஆண்களுக்கு அழகு மட்டுமல்ல அறிவும் அவசியம் அது மாதிரியான ஆண்களையே பெண்கள் விரும்புகின்றராம். எனவே பெண்களுக்கு பிடித்தமாதிரி பேசவும் கற்றுக்கொள்வது அவசியம். அன்பும், பாசமும் அதிக அன்போடும், பாச உணர்வோடும் இருக்கும் ஆண்களைத்தான் அதிகம் பிடிக்கிறதாம். வாழ்நாள் முழுதும் உன் கூட வருவேன் என்ற உறுதி மொழி தருவதோடு அதை கடைபிடிக்கும் ஆண்களை ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். எந்த காரணத்திற்காகவும் மனதை காயப்படுத்தாத ஆண்களைத்தான் அவர்கள் விரும்புகின்றனராம். ஆரோக்கியம் அவசியம் உணவு, உடை, ஸ்டைல் என அனைத்திலுமே ஒரு தனித்தன்மை இருக்கட்டும். ஒரு ஹைஜீனிக் பெர்சனைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம். ஏதாவது சிறிய தவறு நேர்ந்தாலும் உடனடியாக மன்னிப்பு கேட்கும் ஆண்களை அவர்கள் நேசிக்கின்றனராம். இடைவெளி அவசியம் எப்பவுமே கொஞ்சம் இடைவெளி விட்டுப்பேசும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனராம். அதேபோல் மரியாதையோடு பேசும் ஆண்களைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனராம். நட்பான ஆண்கள் முதல்ல நட்பா பேசுங்க அதைத்தான் பெண்களும் எதிர்பார்க்கின்றனர். உங்களின் நட்பான அணுகுமுறை பெண்களின் மனதை கவரும். ஓவரா சீன் போடாதீங்க பெண்களை கவர் பண்ண ஓவரா சீன் போடும் ஆண்களைக் கண்டாலே பெண்களுக்கு அலர்ஜியாம். எனவே எதையுமே அளவோடு செய்யுங்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள்.

டீன் ஏஜ் உறவு மூளை நரம்புகளை பாதிக்கும் – எச்சரிக்கை ரிப்போர்ட்!

சமீப காலங்களில் பள்ளி மாணவர்கள் பலர் பாலியல் பிரச்சினைகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு குழந்தை பிறப்பது, அதேபோல் மாணவர்கள் சிலர் மாணவிகளுடன் உறவில் ஈடுபட்டு அதை வீடியோ எடுப்பது என கலாச்சார சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற டீன் ஏஜ் வயதில் உறவில் ஈடுபடுவது எதிர்காலத்தில் அவர்களின் மூளை நரம்புகளை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இளம் வயதில் உறவில் ஈடுபடும் கலாசாரம் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் மட்டுமே அதிகம் இருந்தது. தற்போது இந்தியாவிலும் இது அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். எலிகளில் பரிசோதனை பிறந்து 40 நாட்கள் ஆன பெருச்சாளிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நன்கு வளர்ந்தவை, நடுத்தர வயதில் இருப்பவை, இளம் எலிகள் என மூன்றாக பிரிக்கப்பட்டன. அவைகளுக்கு உணர்வை தூண்டும் ஊசி போட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர், எலிகளிடம் மருத்துவ ரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆராயப்பட்டன. மூளை செயல்கள் பாதிப்பு மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது இளம் வயது எலிகளின் செயல்பாடுகள் உறவுக்கு பிறகு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், சோர்வு ஏற்பட்டது. அன்றாட உணவைக்கூட உண்ணாமல் ஒரே இடத்தில் முடங்கி கிடந்தது. சரியான பருவத்தில் இருந்த எலிகள் வழக்கம்போல இருந்தன.நரம்பு மற்றும் மூளை செயல்களும் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இளம் பருவத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது மூளை, நரம்புமண்டல வளர்ச்சியை பாதிக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாக தெரிகிறது. மனிதர்களுக்கும் இது பொருந்தும். இதன் பாதிப்பு உடனடியாக இருக்காது என்றாலும் எதிர்காலத்தில் அதிகரிக்கும். பாலியல் விழிப்புணர்வு கல்வி இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இளம் வயதில் பாலியல் ரீதியான உறவுகளில் ஈடுபடுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களின் மூளையும், செயல்பாடுகளும் பாதிக்கப்பவடுவதாலேயே கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை தடுக்க பாலியல் விழிப்புணர்வு குறித்த கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும் என்பது உளவியல் நிபுணர்களின் அறிவுரையாகும்.

வெள்ளி, 9 மார்ச், 2012

முதல்நாள் இரவில் பேசி புரிஞ்சுக்கங்க !

திருமண நாளன்று புதுமணத் தம்பதிகள் இருவருக்குமே ஒருவித படபடப்பும், எதிர் பார்ப்பும் இருக்கும். அன்றைய இரவில் எப்படி நடந்து கொள்வது என்ற கேள்வி இருவருக்குமே இருக்கும். ஆணை விட பெண்ணுக்குத்தான் பயம் அதிகம் இருக்கும். உளவியல் ரீதியான சிக்கல்களும் எழும். எனவே திருமண நாளன்று இரவில் மணப்பெண் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். இடத்தை தீர்மானியுங்கள் திருமண நாளன்று முதலிரவு நடக்கப்போகும் இடம் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். திருமண சத்திரமா? ஹோட்டலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் படபடப்பை ஏற்படுத்தும் என்றால் உங்களுக்கு சவுகரியமான இடத்தை தேர்ந்தெடுங்கள். மருத்துவரிடம் ஆலோசனை அன்றைய தினத்தில் மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரை ஆலோசனை கேளுங்கள். நீங்களாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டாம். மனித உடலைப் பற்றியும், தாம்பத்ய உறவு பற்றியும் சந்தேகங்கள் இருந்தால் அதற்கேற்ப நல்ல புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால், பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம். அதிகம் சாப்பிடவேண்டாம் இரவு நேரத்தில் அதிகம் சாப்பிட வேண்டாம். முடிந்தவரை அதிக மணமும், மசாலாவும் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து விடவும். அறைக்கு செல்லும் முன் நன்றாக குளித்து விட்டு மிதமான மேக் அப் போட்டு கொள்ளவும். மெல்லிய நகைகள் குறைவான நகைகளை அணியவும், கூரிய முனைகள் கொண்டதும், கனமான கற்கள் கொண்ட நகைகளை அணிய வேண்டாம். உடலை உறுத்தாத ஆடைகளை அணியுங்கள். கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும். வாசனை திரவியம் உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள். காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான வாசனை திரவியம் தடவிக் கொள்ளுங்கள். பேசி புரிந்து கொள்ளுங்கள் முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம் தெரிவியுங்கள். முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி ஏற்படலாம். அதைப்பற்றி அச்சம் கொள்ளாமல் வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம். முதல் நாளே உறவில் ஈடுபட வேண்டும் என்று அவசியமில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் . மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிகரமான இரவுகளை எதிர்கொள்ளலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

வெள்ளி, 2 மார்ச், 2012

சிவப்பு நிற பழங்கள் சருமத்தைக் காக்கும்!

பண்டைய காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்தில் சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. வளர்சிதை மாற்றம் வேகமாக நடக்க உதவுகிறது. சருமத்தை பொலிவாக்குவதில் இந்த சிவப்பு நிற பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சிவப்பு நிறமுள்ள தக்காளி, பீட்ரூட், சிவப்பு மிளகாய், சிவப்பு ஆப்பிள், சிவப்பு திராட்சை, வெங்காயம், தர்பூசனி ஆகியவை உடல் நலத்திற்கும், சரும அழகிற்கும் மிகவும் துணை செய்கின்றன. தக்காளி மற்றும் தக்காளியில் செய்யப்பட்ட சாஸ் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. தங்கம் போல் ஜொலிக்கும் எப்படிப்பட்ட பெண்ணின் முகத்தையும் தங்கம் போல ஜொலிக்க வைக்க வேண்டும் என்றால் பல்வேறு பொருட்களுடன் தக்காளியை பயன்படுத்தினால் போதும். கோடை காலத்தில் வெளியில் சென்று வந்தாலே முகம் பொலிவிழந்து விடும். நீண்ட நாட்களாக கவனிக்காமல் விடுவதாலும் இறந்த செல்கள் அதிகம் தேங்கி முகம் கருமையாகிவிடும். இதனை போக்க ஒரு தக்காளி கூழ் போல ஆக்கி அதில் கால் டீ ஸ்பூன் ரவையை கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். இதனால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்து நீரில் நன்றாக தேய்த்து கழுவினால் முகம் பிரகாசமடையும். மென்மையான முகம் ஒரு சிலரது முகம் மென்மையாக இல்லாது முரட்டுத்தனமாக காணப்படும். இவர்கள் ஒரு தக்காளியை அரைத்து கூழாக்கி அதனுடன் அரை டீ ஸ்பூன் தயிரை கலந்து அதனை முகத்தில் பேக் போடவேண்டும். 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பொலிவடைவதோடு மிருதுவாகும். தினசரி வெறும் தக்காளி சாறு மட்டும் தடவி வந்தால் சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும். வெள்ளரித் துண்டு, தக்காளி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து கண்களைச் சுற்றி பூசி சிறிது நேரம் ஊறவைத்து கழுவ கருவளையம் போகும். சரும பளபளப்புக்கு கோடை காலத்தில் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகம் இருப்பதால் சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சிவப்பு நிற காய்கறிகள், பழங்கள் போன்றவைகளில் உள்ள அமிலங்கள் சூரிய ஒளியின் தாக்குதலில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றன. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்ற சிவப்பு நிறப் பழங்களில் வைட்டமின் ஏ சத்து அதிகம் காணப்படுகின்றன. இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ஸ் சருமத்தை பாதுகாக்கிறது சருமம் பளபளப்படைய செய்கிறது. ப்ளு பெரீஸ், ஸ்ட்ரா பெரீஸ், மாதுளை போன்ற பழங்கள் சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றன.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

சென்னை மண்டலத்தில் வரி வசூல் அதிகம்!

தேசிய அளவை விட சென்னை மண்டலத்தில் வருமான வரிவசூல் வளர்ச்சி விழுக்காடு அதிகம் என்று சென்னை மண்டல தலைமை வருமான வரி ஆணையர் ஜி.என். ஜெயின் கூறினார். சென்னை மண்டல மத்திய கலால்துறை சார்பில் நடைபெற்ற கலால் தினம் நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய கலால் மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஜெயின் விருது வழங்கினார். சிறந்த சேவைக்காக குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்ற அதிகாரிகளும் விருது சிறப்பிக்கப்பட்டனர். இரட்டை சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் வி.என்.ஜெயின் பேசியதாவது: வருமான வரித்துறையும், மத்திய கலால் துறையும் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இரட்டை சகோதர துறைகள் ஆகும். இரண்டு துறைகளுமே வரிகளை வசூலித்து நாட்டிற்கு வருவாய் ஈட்டித் தருகின்றன. வரி வருவாய் மூலம் கிடைக்கின்ற நிதி ஆதாரங்களை கொண்டுதான் மத்திய அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது. அந்த வகையில் அரசாங்கத்திற்கு முறையாக வரிகளை செலுத்துவோர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் அதிகம் இந்தியாவில் வருமான வரி 1816-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ரூ.36 லட்சமாக இருந்த வரி வசூல் தற்போது ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை வருமான வரி மண்டலத்தில் கடந்த நிதி ஆண்டு (2011-2012) வருமான வரி இலக்கு ரூ.35 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு வரி வசூலாகி இருக்கிறது. வருமான வரி வசூல் வளர்ச்சி தேசிய அளவில் 8 விழுக்காடாக உள்ளது. ஆனால், சென்னை மண்டலத்தில் இது 13 சதவீதம் அதாவது தேசிய அளவை விட சென்னை மண்டலத்தில் வரிவசூல் வளர்ச்சி விழுக்காடு அதிகம். இன்றைய தினம் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் நேரடி அன்னிய முதலீட்டை குவிக்கின்றன. அவர்களின் நோக்கம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால், அப்படி சம்பாதிக்கின்ற பணத்திற்கு உரிய வரிகளை அவர்கள் செலுத்திட வேண்டும். வரி செலுத்துவதை அவர்கள் கடமையாக கருத வேண்டும் என்றார் அவர். பத்திரிகையாளர் இந்து என்.ராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கலால்வரி உயர்வு முன்னதாக வரவேற்றுப் பேசிய மத்திய கலால் துறை சென்னை தலைமை ஆணையர் கே.ஸ்ரீவத்சவா கூறியதாவது: 1946-ம் ஆண்டு ரூ.46 கோடியாக இருந்த கலால் வரி வசூல், தற்போது ரூ.1 லட்சத்து 37 ஆயிரம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதேபோல் சேவை வரியும் ரூ.70 ஆயிரத்து 391 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார். `ஆயக்கர் சேவாக்' திட்டம் விழா முடிவடைந்த பிறகு வருமான வரி தலைமை ஆணையர் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``வருமான வரி செலுத்துவதை எளிமைப்படுத்தும் வகையில் விரைவில் `ஆயக்கர் சேவாக்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்'' என்று கூறினார்.

பிஎஸ்என்எல்லின் கையடக்க கணிணி... விலை ஜஸ்ட் ரூ 3250!

டெல்லி; பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் இப்போது கையடக்க கணிகளை உருவாக்கி உள்ளது. 3 மாடல்களில் இந்த கையடக்க கணிணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பான்டெல் என்ற நிறுவனத்துடன் இணைந்து இவை உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ரூ3,250, ரூ10,999 மற்றும் ரூ 13,500 ஆகிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த மாடலான "T-PAD IS701R"-ல், 2ஜிபி மெமரியும் 256எம்பி ராமும் கொண்டது. இந்த 2ஜிபியை 32ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உண்டு. அடுத்த மாடல் "T-Pad WS704C". இது 512MB DDRIII ராம் கொண்டது. இதை தொலைக்காட்சியுடன் இணைத்துக் கொள்ளலாம். விலை உயர்ந்த மாடல் "T-PAD WS802C". 1.2ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர் கொண்டது. இவை 7 முதல் 8 இஞ்ச் வரையிலான திரையுடன் ஆண்ட்ராய்ட் 2.3 ஐ ஆபரேடிங் சிஸ்டமாகவும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே மத்திய அரசு ஆகாஷ் கையடக்க கணிணிகளை இதைவிட குறைவான விலைக்கு உருவாக்கி இருந்தாலும் பயன்பாடு ரீதியான பி.எஸ்.என்.எல். தயாரிப்பு முக்கியத்துவம் பெறும் என்பது சந்தை வல்லுநர்களின் கருத்து.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

அரவணைப்பு….. சில முத்தங்கள்… கணவரின் மனம் கவரும்!

தம்பதியரிடையே சின்ன சின்ன ஊடல்கள் ஏற்படுவது வாடிக்கை. அதனையே ஊதிப்பெரிதாக்கி விரிசல் ஏற்படுத்தாமல் அன்பால் அதை சரியாக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், கணவரின் மனம் கவரவும் சில வழிமுறைகளை தெரிவிக்கின்றனர் குடும்ப நல ஆலோசகர்கள். அன்பால் அரவணைப்பு குடும்பத்தில் முதல் பிரச்சினையே பெற்றோர்களை கவனிப்பதில்தான் ஏற்படுகிறது. நம்முடைய பெற்றோர்களை எப்படி கவனிக்கிறோமோ அதேபோல கணவரின் பெற்றோர்களையும், கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். அன்பால் அரவணைத்து அவர்களுக்கு மரியாதை அளித்தால் கணவரின் குட் புக்கில் டாப் தான் நீங்கள். கணவருக்காக சமையுங்கள் கணவரின் மனம் கவர முதலில் அவரது வயிற்றுக்கு சரியான விருந்தளிக்க வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவிப்பர். எனவே சுவையாக சமைத்து சூடாக பரிமாருங்கள். வார இறுதி நாட்களில் ஸ்பெசல் சமையலாக இருக்கட்டும். அப்புறம் நீங்களும் அவருக்கு ஸ்பெசல்தான். மனதிற்குள் மத்தாப்பு கணவரின் துணிகளை துவைத்துப் போடுவது ஒரு கலை. திருமணத்திற்கு முன் யார் வேண்டுமானாலும் துணிகளை துவைத்திருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய துணிகளை மனைவி துவைத்துப் போடுவது கணவரின் மனதிற்குள் மத்தாப்பு பூக்கும். இனிமையான இரவு விருந்து இரவு நேரத்தில் கணவரின் வருகைக்காக காத்திருந்து உண்பது உங்கள் மீதான அபிப்ராயத்தை அதிகரிக்கும். தனக்காக தன் மனைவி பசியுடன் காத்திருப்பாள் என்ற எண்ணமே கணவரின் மனதில் காதல் உணர்வுகளை அதிகரிக்கும். அப்புறம் சண்டையாவது ஒன்றாவது. அழகாய் அசத்தலாம் கணவருக்கு பிடித்தமான உடை அணிவது அவரது கண்ணை மட்டுமல்ல காதலையும் அதிகரிக்கச் செய்யும். அதுதான் திருமணமாகிவிட்டதே, இனி என்ன என்று உடலை கண்டுகொள்ளாமல் விடுவது குடும்ப வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தும். எனவே உடலை கச்சிதமாய் வைத்திருங்கள். அதற்கேற்ப உடையணிந்தால் கணவர் உங்கள் கைகளில் என்பதை நீங்களே உணர்வீர்கள். கொஞ்சமாய் பேசுங்கள் நிறைய கேளுங்கள் எப்பவுமே லொட லொட என நீங்கள் பேசிக்கொண்டிருப்பதை விட கணவரை பேசவிட்டு நீங்கள் கேளுங்கள். இது உங்கள் மீதான பாசத்தை அதிகரிக்கும். நம் பேச்சை கேட்க ஆள் வந்துவிட்டார் என்று அவரை அதீத உற்சாகத்தில் ஆழ்த்தும். கை கோர்க்கும் காதல் இறுதியான, முக்கியமானது படுக்கையறையில் வெற்றிகளை விட தோல்விகள் தான் அதிகம் விரும்பத்தக்கதாக உள்ளது. எனவே விட்டுக்கொடுங்கள். அவர் தடுமாறினாலும் நம்பிக்கையூட்டுங்கள். நீங்கள் தோற்பது அவரது மனதில் இடம் பெறுவதற்கான வெற்றிக்கு வழி வகுக்கும்.

இளமையை தக்கவைத்து உடலை பொலிவாக்கும் உறவு!

தம்பதியரிடையே உணர்வு பூர்வமான தொடர்பை ஏற்படுத்த உதவும் தாம்பத்ய உறவானது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. பிரகாசமான முகம் உறவானது தம்பதியர்களின் உடலிற்கு பொலிவூட்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உடலுறவினால் மனஉளைச்சல் நீங்குவதால் உங்கள் முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்குமாம். உடலுறவின்போது சுவாசம் அதிகரிப்பதனால் இதயம் மற்றும் மூளைக்கு ஆக்சிஜன் அளவு சீராக கிடைக்கிறதாம். இதனால் உடல் பொலிவாகுமாம். உதட்டில் அடிக்கடி முத்தமிடுவதால் எனாமலுக்கு சக்தி கிடைக்கிறதாம். இதனால் பற்கள் பளபளப்பாகுமாம். அழகாய் பூக்குதே உறவின் போதும் வெளியேறும் வியர்வையினால் மேனி பளபளப்பாக இருக்குமாம். பெண்களுக்கு தலைமுடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்குமாம். கட்டான உடல் அதிகமாக காதலுணர்வு ஏற்படுவதனால் அதிகமாக உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்படுகிறதாம். இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள சதைகள் கரைந்து கட்டான உடலமைப்பு ஏற்படுகிறதாம். நீச்சல் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கிடைக்கின்ற உடல் கட்டமைப்பினை விட தாம்பத்ய உறவின் போது கிடைக்கும் உடல் அழகு 20 சதவிகிதம் அதிகமாக இருக்குமாம். ரத்த அணுக்கள் எண்ணிக்கை தினமும் உறவு கொள்ளும் தம்பதியருக்கு ஹீமோகுளோபினின் செயற்பாடு 30 சதவிகிதமாக அதிகரிக்கும் என பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உடலுறவினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறதாம். வயதான தம்பதியர் உறவு கொள்வதன் மூலம் மூட்டு வலி, மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்றவை நீங்குமாம். மூச்சடைப்பு ஏற்படாது அடிக்கடி உறவில் ஈடுபடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதில்லையாம். உறவின் போது அதிகமாக மூச்சு வாங்குவதால் நாசித்துவாரம் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் மூச்சடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதில்லையாம். ஆண்களுக்கு ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்குவதில்லையாம். சிறந்த எக்ஸர்சைஸ் தாம்பத்ய உறவினால் உடல் சமநிலை பெறுகிறதாம் இதனால் ஹார்மோன் சுரப்பு சீராக இருக்கிறதாம். இதனால்தான் செக்ஸ் ஒரு சுகமான உடற்பயிற்சி என்று கூறுகின்றனர். இதயநோய் தீரும் வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உறவு கொள்ளும் தம்பதியருக்கு இதயக் கோளாறுகள் 50 வீதமாகக் குறைக்கப்படுகிறதாம். உறவின் போது இதயமானது 80 முதல் 150 தடவைவரை துடிக்கிறதாம். இதனால் இதயத்தை சுற்றி உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைகிறதாம். முக்கியமான விசயம் குறித்த முடிவு எடுக்கும் முன்பு உறவு வைத்துக்கொள்வது நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் திடமும், மன உறுதியும் ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கை கோர்த்துச் சொல்லுங்கள் காதலை...!

இல்லற வாழ்க்கையில் ஆரோக்கியமான தாம்பத்திய உறவு அவசியமானது. அது மகிழ்ச்சியோடு தம்பதியரிடையே உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும். எனவே இல்லற வாழ்க்கையில் இடைவெளி ஏற்படாமல் இருக்க பெண்களுக்கு ஆலோசனைகளை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். வேண்டியதை கேளுங்கள் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேட்பது தவறில்லை. ஒருவேளை தவறாக நினைத்து விடுவாரோ என்ற அச்ச உணர்வும் அவசியமில்லை. உங்களின் தேவையை தவறாமல் தெரிவிக்கலாம், அதனால் உங்களவர் கூடுதல் உற்சாகமடைவார் என்கின்றனர் உளவியாலாளர்கள். ஆரோக்கியம் அவசியம் உடலை கவனமாக பராமரிக்கவேண்டும். அது ஆரோக்கியம் கூட. எனவே உடலை சுத்தமாக பராமரிப்பதோடு சுகாதாரமாகவும் இருக்கவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். தினசரி குளித்து அதற்கேற்ப பெர்ப்யூம் போட்டாலே அந்த வாசனையே தெரிவித்துவிடும் உங்களின் தேவையை. கை கோர்த்து தெரிவியுங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு பரிபாஷை உண்டு. தனியான தருணங்களில் சந்திக்கும் போது உங்களின் தேவையை கைகோர்த்து தெரிவிக்கலாம். அந்த நெகிழ்ச்சியுடனே, ஒரு வித எதிர்பார்ப்புடனே அன்றைய தினம் கழியும். மனதிலும், உடலிலும் உற்சாக பேட்டரி உற்பத்தியாகும். உற்சாக விளையாட்டு உறவின் போது எப்பொழுதுமே அவர்தான் தொடங்கவேண்டும் என்று காத்திருக்க வேண்டாம். முன் விளையாட்டுக்களை நீங்கள் தொடங்கினால் உங்களவர் உற்சாகமடைவார். அவரின் ஆர்வத்தை அதிகரிக்கும். அழகாய் உணருங்கள் இது மிகவும் முக்கியமானது. நீங்கள் எப்பொழுதுமே உங்களை அழகானவராய் உணருங்கள். ஏனெனில் உங்களவருக்கு நீங்கள்தான் உலக அழகி. அந்த எண்ணமே உங்களை உற்சாகமுடன் செயல்பட வைக்கும். யோகசனம் தினசரி யோகா செய்வது உடல் ஆரோக்கியத்தோடு மனம் ஆரோக்கியமடையும் உறவிற்கு உற்சாகம் தரும் எனவே தினசரி யோகா செய்வது நலம் என்கின்றனர் நிபுணர்கள். பாதுகாப்பான உறவு நமது உடல் நலத்திற்கு ஏற்ப பாதுகாப்பான உறவினை மேற்கொள்ளவேண்டும் என்பது உளவியல் நிபுணர்களின் மேலான அறிவுரையாகும். இவற்றை பின்பற்றினால் உங்களவர் உங்களின் தலையணை மந்திரத்திற்கு கட்டுப்படுவது உறுதி என்கின்றனர் நிபுணர்கள்.

கிங்பிஷருக்கு ரூ 1650 கோடி பெயில் அவுட் தரும் ஸ்டேட் வங்கி!

மும்பை: நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகச் சொல்லப்படும் கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு ரூ 1650 கோடி கடன் தர அரசுக்கு சொந்தமான பாரத ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியும் தன் பங்குக்கு சில நூறு கோடிகள் தர முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. முதல் கட்டமாக குறுகிய கால இயக்க முதலீட்டுத் தொகையாக ரூ 700 கோடியையும், வங்கி உத்தரவாதத் தொகையாக ரூ 500 கோடியையும் கிங்பிஷருக்குத் தருவதன் மூலம், அந்நிறுவனத்தின் அன்றாடப் பணிகள் பாதிப்பின்றி நடக்க உதவ முன்வந்துள்ளது எஸ்பிஐ. மேலும் அடுத்த ஆண்டு இந்த வங்கிக்கு கிங்பிஷர் செலுத்த வேண்டிய ரூ 550 கோடியைத் திருப்பித் தரும் கெடுவை நீட்டிக்கவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. மேலும் கிங்பிஷர் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையான ரூ 360 கோடிக்கு எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகள் உத்தரவாதம் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த அரசு வங்கிகளின் முடிவு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப் விண்டோஸின் லோகோவில் மாற்றம்!

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தமது விண்டோஸ் மென்பொருளை மறுசீரமைப்பு செய்துள்ளது. 1985ஆம் ஆண்டு விண்டோஸ் லோகோ உருவாக்கப்பட்டது. 4 வண்ணக் கொடி பறப்பது போன்ற இந்த லோகோவில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்து வந்தது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய லோகோவுடன் விண்டோஸ் 8 வெளியாக உள்ளது. புதிய லோகோ 4 வண்ண கொடி பறப்பதற்கு பதிலாக ஒரு ஜன்னலைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பெளவுல் ஸெர் என்பவர் வடிவமைத்துள்ளார். "விண்டோஸ் என்ற பெயருக்கேற்பவே சாப்ட்வேரின் லோகோவை வடிவமைத்திருக்கிறோம்" என்று மைக்ரோசாப்ட் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 20 பிப்ரவரி, 2012

வருமானவரி செலுத்த சென்னையில் சிறப்பு ஏற்பாடு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சென்னை: வருமான வரி செலுத்துவோருக்காக சென்னையில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது ரிசர்வ் வங்கி. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் என்.எஸ்.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மார்ச் மாத கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரியை செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதை கருத்தில் கொண்டு கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து, குறித்த நாளுக்கு முன்னதாகவே வரியை செலுத்துமாறு வேண்டுகிறோம். ரிசர்வ் வங்கிதவிர, தமிழகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் சில குறிப்பிட்ட கிளைகளுக்கும் வரியை பணமாகவோ, காசோலையாகவோ பெற அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனால் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, தனியார் துறை வங்கிகளில் ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி, ஐடிபீஜ வங்கி, எச்.டி.எப்.சி.வங்கி போன்ற வங்கிகளில் இந்த சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வருமானவரி செலுத்துவோரின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு என்.எஸ்.விஸ்வநாதன் கூறி உள்ளார்.

கிங் பிஷர் விமான சேவையில் தொடரும் ரத்து- விமானிகள் விலகல்!

டெல்லி: கிங்பிஷர் நிறுவனத்தின் விமான சேவைகள் 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நிறுவனம் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விமானங்களை முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்தது தொடர்பாக விமான சேவைகள் இயக்ககத்திடம் கிங் பிஷர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றார். இந்நிலையில் மும்பையிலிருந்து 13, கொல்கத்தாவிலிருந்து 8, டெல்லியிலிருந்து 4 என விமான சேவைகளை திடீரென ரத்து செய்ததால் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர். பிரதான சேவையான மும்பை-டெல்லி விமானங்களையும் கூட கிங் பிஷர் ரத்து செய்துள்ளது. கிங்பிஷர் விமான சேவை நிதி நெருக்கடியால் தவிப்பதால் விமானிகள் பலரும் பணியிலிருந்து விலகிவிட்டனர். ஏற்கெனவே கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்காத நிலையில் விமானங்களும் ரத்து செய்யப்பட்டு வருவதால் விமான சேவையை அனேகமாக கிங் பிஷர் நிறுவனம் நிறுத்திவிடக் கூடும் எனத் தெரிகிறது. இருப்பினும் இதை கிங் பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய்மல்லையா மறுத்துள்ளார். நிதி நெருக்கடியை சமாளிக்க எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்யவும் தமது நிறுவனப் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நேரடியாக விற்க அனுமதிக்க வேண்டும் என்பதும் விஜய்மல்லையாவின் நீண்டநாள் கோரிக்கை. மத்திய அரசின் உதவி எதுவும் தங்களுக்குத் தேவை இல்லை என்றும் கூறிவருகிறார் விஜய்மல்லையா.