புதன், 5 மே, 2010

ஹெச்பி நிறுவனம் ரூ 1450 கோடி வரி ஏய்ப்பு!


பெங்களூர்: பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான ஹெவ்லெட் பாகார்ட் இந்தியா சேல்ஸ் (ஹெச்பி) நிறுவனம் ரூ 1450 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை பெங்களூரிலுள்ள வருவாய் புலனாய்வு இயக்ககம் (டிஆர்ஐ) அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஹெச்பி நிறுவனத்துக்கு விளக்கம் கேட்பு கடிதம் ஒன்றை வருமானவரித் துறை அனுப்பியுள்ளது.

இந்த நிறுவனம் இறக்குமதி செய்த கம்ப்யூட்டர்கள்,லேப்டாப், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவற்றின் மதிப்பைக் குறைத்துக் காட்டி இந்த வரி ஏய்ப்பை நடத்தியுள்ளது என டிஆர்ஐயின் இயக்குநர் ஆர் வெங்கட்ராமன் கூறினார். தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்த ஏய்ப்பு நடந்துள்ளது.

ஆனால் வருமான வரித் துறையின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது ஹெச்பி நிறுவனம். தங்களது கணக்குகளில் எந்த முறைகேடும் இல்லை என்றும் அனைத்து சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கும் ஹெச் பி தயாராக உள்ளதாகவும் அந் நிறுவனம் கூறியுள்ளது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் கிரீன் சேனல் மூலம் விரைவில் அனைத்து அனுமதிகளும் பெற்றுக் கொள்ளும் சலுகையை மத்திய அரசு ஹெச்பி நிறுவனத்துக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக