திங்கள், 3 மே, 2010

நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் – வெயில் சுட்டெரிக்கும்!


சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. மே 28ம் தேதி வரை வெயில் நீடிக்கும்.

தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலமாகும். அதிலும் ஏப்ரல் 15 முதல் மே இறுதிவரை வரை வெயிலின் தன்மை கடுமையாக இருக்கும். குறிப்பாக மரங்கள் அதிகமில்லாத மலை வேலூரில் இருப்பதால் அங்கு அதிகபட்ச வெயிலை உணரமுடியும்.

ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களிலும், அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெயிலின் தன்மை குறைவாக காணப்படும்.

ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த வருடம் கோடை காலம் முடிந்த பிறகும் 2-வது கோடை வந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்த ஆண்டு கோடை தொடங்கி 1 மாதம் தாண்டிவிட்டது. சென்னை , வேலூர் , திருச்சி , மதுரை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக வெயிலின் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி 101 ஆக பதிவானது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோடை மழை பெய்த போதிலும் சென்னையில் வெப்பம் குறையவில்ல். அனல் காற்று வீசுவதால் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் நாளை அக்கினி நட்சத்திரம் தொடங்குகிறது. 28-ந் தேதி வரை மொத்தம் 25 நாட்கள் இது நீடிக்கிறது.

அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் கடுமையாக இருக்கும். அனல் காற்று வீசும். உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொண்டால் அக்னிக்கு அல்வா கொடுத்து அணலிலிருந்து தப்ப முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக