திங்கள், 3 மே, 2010
கோடையில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்!
கோடைக் காலத்தில் அதுவும் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில், நமது உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தோல் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, கோடையில் வியர்வைக் குரு, வியர்வைக் கட்டியைத் தவிர்க்க முகத்துக்கு பவுடர் போடாமல் இருப்பது நல்லது என்று தோல் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையின் குழந்தை அறுவைச் சிகிச்சை நிபுணர் எம்.எஸ்.ராமகிருஷ்ணனின் 19-வது நினைவு தினத்தை முன்னிட்டு குழந்தை தோல் நோய்கள் தடுப்பு மற்றும் ஆண் குழந்தைகளின் பிறவிக் குறைபாடான சிறுநீர்ப் பாதை பாதிப்பைச் சரி செய்யும் அறுவைச் சிகிச்சை (ஹைபோஸ்பாடியாஸ் சர்ஜரி) குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
கருத்தரங்கில் பேசிய மருத்துவ நிபுணர்கள், வெயிலை தாக்குப் பிடிக்க முடியாமல் நாம் செய்யும் சிற்சில தவறுகள், பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை எடுத்துக் கூறினர்.
மேலும், அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் செவ்வாய்க்கிழமை (மே 4) தொடங்குகிறது. இந்த நிலையில் குழந்தைகள் உள்பட பெரியவர்களும் கோடை வெப்பம் காரணமாக தோல் நோய்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்றும் கருத்தரங்கில் பேசிய மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
WDதோல் மருத்துவ நிபுணர் ஒருவர் பேசுகையில், கோடையில் இளநீர், மோர் உள்பட திரவ உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு உடலில் நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோடையில் தோலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத மிக மிகச் சிறிய துளைகள் மூலம் வியர்வை வெளியேறி உடலின் வெப்ப நிலை இயற்கையாக பராமரிக்கப்படுகிறது. எனவே வியர்வை வெளியேறுவதை எந்தக் காரணத்திற்காகவும் தடுக்கும் நடவடிக்கையில் நாம் ஈடுபடக் கூடாது. வியர்வை துவாரங்கள் அடைபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் போதுதான் வியர்க்குரு போன்றவை ஏற்படும்.
தோலின் நுண்ணிய துளைகள் அடைபடும் வகையில் நம்மை அறியாமல் சில விஷயங்களை நாம் செய்து விடுகிறோம். அதாவது முகத்துக்குப் பவுடர் பயன்படுத்தும் நிலையில் தோலின் நுண்ணிய துளைகள் அடைபட்டு வியர்வை வெளியேறுவது தடைபடும். எனவே பவுடர் போடுவதைத் தவிர்ப்பது நல்லது.
WDஅதிகமாக வியர்க்கும் போது முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவுவது நல்லது அல்ல. ஏனெனில் குளிர்ந்த நீர் காரணமாகவும் தோலின் நுண்ணிய துளைகள் அடைபட்டு வியர்வை வெளியேறுவது பாதிக்கப்படும். மாறாக, வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தைக் கழுவும் நிலையில், தோலின் நுண்ணிய துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி வியர்வை எளிதாக வெளியேறும் என்று தெரிவித்தனர்.
குழந்தைகளை வெயிலில் அழைத்துச் செல்வதையும், நைலான் போன்ற ஆடைகளை அணிவிப்பதையும் தவிர்ப்பதும், வெயிலை சமாளிக்க மிகவும் குளிர்ந்த நீரை குடிக்கக் கொடுப்பதும் தவறு.
குழந்தைகளும், பெரியவர்களும், இந்த கோடையில் குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்த்துவிட்டு, நீராகாரம், மோர், பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை அருந்தி வந்தால் ஆரோக்கியமும் பாதிக்கப்படாது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
unmail nandraga erukirathu
பதிலளிநீக்கு