வெள்ளி, 14 மே, 2010

முதல்வர் ‘ஆசியுடன்’ திமுகவில் சேரும் குஷ்பு!


சென்னை: காங்கிரஸ் கட்சி எனக்குப் பிடிக்கும், ராஜீவ் காந்தி படங்களை என் படுக்கையறையில் மாட்டியிருந்தேன் என்று கூறி, காங்கிரஸ் தலைவர்களை உசுப்பேத்திய நடிகை குஷ்பு, திடீரென்று திமுகவில் இன்று இணைவதாக அறிவித்துள்ளார்.

தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமான குஷ்பு, அதன்பிறகு பல சர்ச்சைகள், கிசுகிசுக்களில் சிக்கினார். ஆனால் தனது அரசியல், திரையுலக செல்வாக்கால் அவற்றிலிருந்து மீண்டு வந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கற்பு பற்றி புதிய இலக்கணம் கூறினார். தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்த சந்தேகத்தையும் எழுப்பினார்.

தமிழ் அமைப்புகள் என்னதான் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவற்றையெல்லாம் ஓரங்கட்டும் விதமாக குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்தது உச்ச நீதிமன்றம். குஷ்பு மீதான 22 வழக்குகளைத் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், குஷ்பு காங்கிரஸில் சேரப் போவதாக கூறப்பட்டது. இதனால் மகிழ்ந்து போன காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, சுதர்ஸனம் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் குஷ்புவை வரவேற்று மாறி மாறி அறிக்கைகள் கொடுத்தனர்.

ஆனால், திமுக அரசு குஷ்புவை எம்எல்சியாக்கத் திட்டமிட்டது.

இப்போது திமுகவில் சேரப் போவதாக அறிவித்துள்ளார் குஷ்பு. சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் இறுதிநாளான இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுக உறுப்பினராக சேருகிறார் குஷ்பு.

மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் செல்லும் அவர், முதல்வரிடம் ஆசி பெற்று திமுகவில் இணைகிறார்.

அடுத்த சில தினங்களில் அமையவிருக்கும் சட்ட மேலவையில், திமுக எம்எல்சியாக அவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது குஷ்புவுக்கு பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

திமுகவில் சேர்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது! – குஷ்பு

திமுகவில் சேர்வது குறித்து குஷ்பு கூறியதாவது:

“அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறுவதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

தமிழக் முதல்வர் டாக்டர் கலைஞர் மீது எனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு. அதனால் நான் இன்று மாலை அவர் முன்னிலையில் திமுகவில் இணைகிறேன்.

இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன். திமுகவில் இணைந்த பிறகு அதிகாரப்பூர்வமாக மேலும் இது குறித்து விரிவாகப் பேசுகிறேன். தமிழக மக்களின் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. அரசியலிலும் என்னை வரவேற்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்”, என்றார் குஷ்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக