வெள்ளி, 12 நவம்பர், 2010
30 வயதுக்கு மேல் குறைகிறது கால்சியம்!
ஆண்களுக்கு விபத்து அல்லது ரத்த தானம் செய்யும் போது மட்டுமே ரத்த இழப்பு ஏற்படுகிறது. ஆனால் ஒரு பெண் என்று எடுத்துக் கொண்டால், மாதவிலக்கு, மகப்பேறு போன்ற சமயங்களில் நேரடியாக ரத்த இழப்பு ஏற்படுகிறது. மேலும், பாலூட்டும் தாய்மார்களுக்கு மறைமுகமாக ரத்த இழப்பு ஏற்படுகிறது.
இதுபோன்ற சமயங்களில் பெண்கள் பலவீனமானவர்களாக மாறுகின்றனர். இதனால்தான் சுமார் 30 வயதை அடையும் பெண்களின் உடலில் கால்சியம் குறையத் துவங்குகிறது. கால்சியம் குறைபாட்டினால் ஏற்படும் வியாதிகள் பல. அதில் முக்கியமானது எலும்பு தேய்மானமாகும்.
எலும்பு தேய்மானம் என்றால் பலருக்கும் என்னவென்று தெரிவதில்லை. எலும்பில் உள்ள கால்சியம் சத்து குறைந்து எலும்பு பலவீனமாகிறது. கழுத்து, மூட்டுப் பகுதிகளில் எலும்புத் தேய்மானம் ஆனபிறகு தான் அங்கு வலிக்க ஆரம்பிக்கிறது. வலி வந்ததும் பெண்கள் மருத்துவரை அணுகினால், எலும்பு தேய்ந்து விட்டது என்று கூறுகிறார்கள். எலும்பு தேய்வை நிறுத்தலாமேத் தவிர, தேய்ந்த எலும்பை மீண்டும் சீராக்குவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே.
சிலருக்கு எலும்புத் தேய்மானம் என்பது தீவிரமடைந்து, அவர்கள் கீழே விழுந்தால் கூட உடனடியாக எலும்பு உடைந்துவிடும் நிலையில் இருக்கும். இந்தியாவில் 45 வயதில் இருக்கும் பெண்களில் மூன்றில் ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் உள்ளது. இப்படியே சென்றால், வருங்காலத்தில் எலும்பு முறிவுகளில் பெரும் விழுக்காடு இந்தியாவில்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிலும், எலும்புத் தேய்மான நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெண்களே அதிகம். இதற்குக் காரணம், சத்துக்குறைபாடுதான். தாய்மார்கள் பலரும் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்களேத் தவிர, பாலூட்டும் தாய்மார்கள் போதிய உணவை சாப்பிட வேண்டும், அதற்கான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள்.
அதாவது, பாலூட்டும் தாய்மார்களுக்கு பாலுக்குத் தேவையான கால்சியம் அவர்கள் உட்கொள்ளும் உணவில் இருந்து எடுக்கப்படும். நாம் சாப்பிடும் உணவில் போதிய கால்சியம் இல்லாத நிலையில் எலும்பில் இருந்துதான் கால்சியம் செல்கிறது. நிறைய பெண்கள் பாலூட்டும் சமயத்தில் மெலிந்து போவதற்கு இதுதான் காரணம். போதிய ஊட்டச்சத்து உணவினை எடுத்துக் கொள்ளாமல் பாலூட்டும் தாய்மார்களுக்குத்தான் எலும்புத் தேய்மானம் அதிகமாக ஏற்படுகிறது.
அதற்காக தாய்ப்பால் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிகமாக முட்டை, பால், கீரைகளை உண்ண வேண்டும். அதில்லாமல் மருத்துவர்கள் சிபாரிசு செய்யும் இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்த மாத்திரைகளையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் பாலுக்குத் தேவையான கால்சியம் உடலுக்குக் கிடைக்கும்.
ஆண்டுதோறும் எலும்பு தேய்மான நோயால் சுமார் 10 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், வீட்டு வேலைகளை செய்வதால் தனியாக உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை என்று பெண்கள் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. வீட்டு வேலை செய்யும் போது பல தவறான உடல் இயக்கங்களை நம்மை அறியாமல் செய்கிறோம். குனிந்து பொருட்களை தூக்குவது, குனிந்தபடி சில வேலைகளை செய்வது போன்றவை உடற்பயிற்சியாகாது. எனவே, வீட்டிலிருக்கும் பெண்களாகட்டும், வேலைக்குச் செல்லும் பெண்களாகட்டும், உடற்பயிற்சிக்கு என்று சில நிமிடங்களை ஒதுக்கி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
பொதுவாக எப்போதும் ஏசி அறையில் இருப்பதும், கடினமான பணிகளை செய்யாமல் தளர்வாக இருப்பதும், வியர்வையை வெளியேற்ற விடாமல் செய்கிறது. எனவே உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதே சமயம் உடம்பில் இருந்து வியர்வை வெளியேறும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
இதுமட்டுமல்லாமல், வைட்டமின் டி பற்றாக்குறையாலும் இந்தியர்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது. வெப்ப நாடான இந்தியாவில் வைட்டமின் டி பற்றாக்குறை என்றால் சற்று சிந்தித்தே ஆக வேண்டும். வீட்டை விட்டு வெளியே வந்தால் நம்மை எதிர்கொள்வது சூரியன்தான். ஆனால் அந்த சூரியனிடம் இருந்து நாம் பெறும் வைட்டமின் டி நமக்கு எப்படி பற்றாக்குறையாகிறது என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.
அதிகாலையில் எழும்பும் பழக்கம் தற்போது பலருக்கும் இருப்பதில்லை. கிளம்ப வேண்டிய நேரத்திற்கு சற்று நேரம் முன்னதாக எழுந்து அவசர அவசரமாக கிளம்பி அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய பேருந்தை பிடித்து ஓடிப் போய் அலுவலகத்திற்குள் உட்கார்ந்து கொள்கிறோம். வீட்டில் இருப்போர் துணியை உலர்த்தக் கூடி சூரியனைப் பார்க்க வருவதில்லை. வாஷிங்மெஷனில் உள்ள ட்ரையரைப் பயன்படுத்தி உலர்த்திவிட்டு வீட்டிற்குள்ளேயே போட்டுக் கொள்கிறோம்.
வீட்டு வேலைக்காரரை அனுப்பி காய்கறி வாங்கிவரச் சொல்லிவிடுகிறோம். பிறகு எப்படித்தான் பார்ப்பது சூரியனை. சூரியனா உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்களுக்கு ஹாய் சொல்லிவிட்டுப் போகும். சூரியனையே அடிப்படையாக வைத்து வாழும் நம் பூமியில், சூரிய ஒளியேப் படாமல் வாழும் தந்திரத்தை இந்திய மக்கள் வெகுவாக கற்று வருகிறார்கள். இதன் காரணமாகத்தான் வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படுகிறது.
சூரிய வெளிச்சத்தில் நாம் வெறும் 20 நிமிடங்கள் நின்றால் போதும், நம் சருமம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டியை எடுத்துக் கொள்ளும். ஆனால் உச்சி வெயிலில் அல்ல, காலை 8 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்கு மேலும். ஆனால் இந்த சமயத்தில் எல்லாம் நாம் வெளியே வருவதே இல்லையே. அங்குதானே சிக்கல். எனவே, அதிகாலையில் எழுந்து பணிகளை முடித்துவிட்டு 7 மணிக்கு வெளியில் சென்று சில நிமிடங்கள் நடக்கலாம், இயற்கையை ரசிக்கலாம் அல்லது மாலை நேரத்தில் சூரியனுக்கு ஒரு ஹாய் சொல்லலாம். இதனால் எலும்புத் தேய்மானத்தில் இருந்து நாம் விடுபடலாம் என்றால் செய்ய மாட்டீர்களா என்ன?
30 வயது வரை தான் எலும்பு வலுவானதாக இருக்கும். பின்னர், கால்சியம் சத்து குறைய ஆரம்பிக்கிறது. இதனால்தான் ஆரோக்கிய உணவு, உடல் பயிற்சி முக்கியம் என்று கூறுகிறோம். உணவிலும் கீரை, பால், முட்டை போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் சிறிது நேரமாவது உங்கள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு நிற்பது இன்னும் நல்லது. எளிதான விஷயம் கூட.
என்ன உங்கள் எலும்புகளை பலமாக்க இனி முழு மூச்சுடன் செயல்படுவீர்கள் அல்லவா? பார்க்கலாம் விரைவில் சந்திப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக