வெள்ளி, 26 நவம்பர், 2010

த‌மிழக‌த்‌தி‌ல் பிப்ரவரி 9ஆ‌ம் தே‌தி மக்கள்தொகை கணக்கெடுப்பு!

சென்னை: தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி பிப்ரவரி 9ஆ‌ம் தே‌தி தொடங்கி 28 ஆ‌ம் தே‌தி வரை நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுவது வழக்கம். 2001ஆ‌ம் ஆ‌ண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2011ஆ‌ம் ஆ‌ண்டு கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்கான தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி கணக்கெடுப்புப் பணிகள் தொடங்குகிறது.

முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் குறித்த விவரங்களை சேகரிக்கவும், தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிக்காகவும் கடந்த ஜூன் 1ஆ‌ம் தே‌தி தொடங்கி ஜூலை 15 ஆ‌ம் தே‌தி வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் வீடுகள், அதில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்கிற விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டன.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் எடுக்கப்படும் கணக்கெடுப்பே முழுமையான கணக்கெடுப்பு என மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகை‌யி‌ல், இந்தக் கணக்கெடுப்பில் தனிநபர்களின் விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்படும். அதாவது, குடும்பத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர்? படிப்பு, தொழில், வருமானம், திருமணம் ஆனவர்கள் எத்தனை பேர்? குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கேட்கப்படும். தமிழகம் முழுவதும் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக 3 நாள்கள் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அவர்கள் பணி செய்ததாகவே கருதப்படும் என்று பொதுத் துறை செயலாளர் கருத்தையா பாண்டியன் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மேலும், பிப்ரவரி 9 முதல் 28-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை அல்லது பிற்பகல் வேளை என ஏதாவது ஒரு வேளை மட்டுமே கணக்கெடுப்புப் பணிக்கு அனுமதிக்கப்படும். மீதியுள்ள அரை நாள் பணிக்குச் செல்ல வேண்டும். கணக்கெடுப்பு முடிந்ததும் விடுபட்ட இடங்கள் குறித்த பணிகள் மார்ச் 1ஆம் தேதி 5ஆம் தேதி வரை நடத்தப்படும். இந்த ஆறு நாட்களிலும் கணக்கெடுப்புப் பணி முழு நாளாக மேற்கொள்ளப்படும் என பொதுத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு மாவட்டந்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் ஆகிய மாநகராட்சிகளின் ஆணையாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், இதர மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதன்மை அதிகாரிகளாகவும், மாவட்ட கூடுதல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிப்ரவரியில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பில் ஜாதி குறித்த விவரங்கள் கேட்கப்பட மாட்டாது என மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக