வெள்ளி, 12 நவம்பர், 2010
முழு நேர வேலையை வெறுக்கும் பெண்கள்!
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களில் ஏராளமானோர் பகுதி நேர வேலையையே விரும்புவதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை இணையமைப்பான "அசோசெம்" - (Assocham) டெல்லி, மும்பை, சண்டிகர், புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
சுமார் 4,700 வேலைக்கு செல்லும் தாய்மார்கள் இந்த ஆய்வில் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.குழந்தைகளை உடைய வேலைக்கு செல்லும் பெண்கள், எத்தகைய வேலையை விரும்புகிறார்கள் என்பது குறித்தே இதில் கேட்கப்பட்டது.
அவ்வாறு கருத்து தெரிவித்தவர்களில் 10 ல் 6 பேர் வீட்டைவிட்டு வெளியே வேலை செய்யாமல் இருப்பதையே விரும்புவதாகவும், அவ்வாறு வெளியில் சென்று வேலை செய்யாமல் இருந்தால் அது தங்களது குழந்தைகளுக்கு நல்லதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் 10 ல் ஒருவர் மட்டுமே முழு நேரம் வேலை செய்வது குழந்தைகளுக்கு நல்லதாக இருக்கும் என்றும் கூறியதாக தெரிவிக்கிறார் "அசோசெம்" பொதுச் செயலாளர் டி.எஸ். ரவத்.
குழந்தைகளை கொண்ட பெண்களில் 26 விழுக்காட்டினர் முழு நேரம் வேலை செய்வது குறித்து எதுவும் பொருட்படுத்தவில்லை.அதே சமயம் ஏறக்குறைய 56 விழுக்காட்டினர் எப்போதுமே வேலை செய்யாமல் இருப்பது தங்களுக்கு நல்லதாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
மேலும் 0 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளை உடைய பெண்களிலும், மிகக்குறைந்த விகித்தினரே முழு நேர வேலைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் படித்தவர்கள் முதல் படிக்காதவர் வரை, அனைவரிடமுமே ஒரே மாதிரியான கருத்தே வெளிப்பட்டுள்ளது.
அதேபோன்று 72 விழுக்காடு தந்தைமார்கள், தனது மனைவி பகுதி நேர வேலை செய்வதையே விரும்புவதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் வீட்டிலேயே இருந்தபடி அல்லது பகுதி நேரம் வேலை செய்யும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை கவனிப்பதை விட, தாங்கள் குழந்தைகளை கவனிப்பது சற்று குறைச்சலானதுதான் என்று முழு நேரம் வேலை செய்யும் பெண்கள் தங்களைத் தாங்களே குறைத்து மதிப்பிட்டு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வறிக்கை!
ஒன்றை பெற ஒன்றை இழக்கத்தான் செய்ய வேண்டும்.இதில் குழந்தை நலனா அல்லது வருவாயா என்று பார்க்கும்போது குழந்தை நலனைத்தான் அனைத்து பெண்களும் விரும்புவார்கள் என்றாலும், அதை தீர்மானிப்பது குடும்ப சூழ்நிலையாகத்தான் உள்ளது!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக