கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த சிறுமுளையில் சில பெட்டி கடைகளில் மதுபானங்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக்கில் இருந்து மதுவை வாங்கி, அதில் பாதி மதுவில் எத்தில், மெத்தில் ஆல்கஹாலை சேர்ப்பதாக கூறப்படுகிறது. இங்கு விற்பனை செய்யும் மதுபானங்களில், போதை அதிகமாக உள்ளதால், பலர் இவற்றை வாங்கி குடிக்கின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்களும் இந்த கடைகளில் சர்வ சாதாரணமாக மதுவை வாங்கி குடிக்கின்றனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, மகளிர் சுய உதவி குழுவினர், அப்துல் கலாம் சேவை நல மன்றத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இப்படிப்பட்ட மதுபானங்களில் போதை அதிகமாவதுடன் கண்கள், உயிர் பாதிக்கும் நிலையும் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
''‘சிறுமுளை கிராமத்தில் உள்ள பெட்டி கடைகளில், அரசு மதுபானங்களில் எத்தனால் மற்றும் மெத்தனால் கலந்து விற்பனை செய்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அப்துல் கலாம் சேவை மன்றமும், மகளிர் சுய உதவி குழுவினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சமீபத்தில் சிங்கம்புணரி அருகே ஓய்வு பெற்ற கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அய்யாச்சாமி தனது நிலத்தில் கஞ்சா பயிரிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் போதைக்கு மாணவர்கள் அடிமையாக இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் தமிழகத்தில் சில விஷமிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களை வலைத்து போட்டு பண ஆசை காட்டி கஞ்சா, அபீன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் விற்பனை செய்ய வைக்கின்றனர். பண ஆசையில் மேலும் தகாத வழியில் செல்லும் மாணவர்கள் முடிவில் விபசாரத்தை நோக்கி செல்லும் நிலையும் ஏற்படுகிறது.
நகர்ப்புறங்களில் கொடிகட்டி பறக்கும் இந்த தொழிலை காவல்துறையும் கண்டு கொள்ளவதே கிடையாது. காரணம் அவர்களுக்கு லட்சக்கணக்காக பணம் கிடைப்பதுதான்.
தற்போது சென்னை மெரினா கடற்கரையில் பள்ளி மாணவர்கள் பலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. 14 முதல் 19 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் தங்களது பள்ளி வகுப்புகளை 'கட்' அடித்துவிட்டு, சீருடையிலேயே மெரினாவுக்கு வருகின்றனர்.
அவர்கள் தண்ணீர் பாக்கெட்டுகளில் சிறு துளையிட்டு ஒரு பிரத்தியேக திரவத்தை தேவையான அளவு ஊசி மூலம் செலுத்தி தண்ணீர் பாக்கெட்டை நன்றாக குலுக்கி, நுரை வந்த பின் குடித்து போதையில் திளைப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்கள் சிலர் தனியாக கடற்கரையில் சுற்றுவதும், அவர்களை சமூக விரோதிகள் கண்காணித்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும் அவ்வப்போது புகார்கள் வருகின்றன.
மெரினா கடற்கரைக்கு மக்கள் கூட்டம் மாலையில் வரும் முன்பாக இவர்கள் வெளியேறுகின்றனர். இந்த விநோத போதை பழக்கத்தால், கட்டுப்பாடற்ற மாணவர்களின் எதிர்காலம் பாழாவதாக பொது நல விரும்பிகள் கவலை தெரிவிக்கின்றனர். காவல்துறை அதிகாரிகள் இதுபற்றி உண்மை நிலவரத்தை கண்டறிந்து தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது. போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகளை பற்றி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே மாணவ சமுதாயத்தை தடுக்க முடியும். இல்லையென்றால் இப்பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறிதான். விழித்திடுங்கள் மாணவச் செல்வங்களே, விழித்திடுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக