வெள்ளி, 19 நவம்பர், 2010
சந்தையை முறைபடுத்தும் அமைப்புகள் அவசியம்: ஐரோப்பிய மேம்பாட்டு வங்கி!
அரசின் கட்டுப்பாட்டைக் குறைத்து, சுதந்திரமான சந்தையை ஏற்படுத்துவது மட்டுமே பொருளாதார வெற்றியை உறுதி செய்துவிடாது என்று மறுகட்டுமானம் மற்றும் மேம்பாட்டிற்கான ஐரோப்பிய வங்கி (European Bank for Reconstruction and Development - EBRD) கூறியுள்ளது.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, பொதுவுடைமைக் கொள்கையை கடைபிடித்துவந்த ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போன்ற கட்டுப்பாட்டற்ற திறந்த சந்தைகளுக்கு மாறுவதற்கு உதவ உருவாக்கப்பட்ட வங்கியே மறுகட்டுமானம் மற்றும் மேம்பாட்டிற்கான ஐரோப்பிய வங்கி ஆகும்.
ஐரோப்பாவின் 29 நாடுகளில் தனது நடவடிக்கையின் பலன்களின் அடிப்படையில் பெற்ற தரவுகளை ஆராய்ந்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள இந்த வங்கி, சந்தைகளை முறைப்பட்டுத்தக் கூடிய அரசு அமைப்புகள் அவசியம் என்று கூறியுள்ளது. இது, ஒரு திறந்த சந்தைப் பொருளாதாரத்தைச் சார்ந்த அதன் பழைய நிலைப்பாட்டில் இருந்து பெரும் விலகலாகும்.
“சந்தை சக்திகள் மீதும், தனியார் உடைமையின் மீதுமான அரசின் கட்டுப்பாடுகளை நீக்குவதே வெற்றிகரமான பொருளாதார வளர்ச்சியை நோக்கிய மாற்றமாக கருதப்பட்டது” என்கிற பழைய பார்வையில் இருந்து, “முறைப்படுத்தும் பொது (அரசு) அமைப்புகள் இல்லாமல் சந்தை சக்திகள் சரியாக செயல்படுவதில்லை” என்ற நிலைக்கு ஐரோப்பிய வங்கியின் அணுகுமுறை வந்துள்ளது.
“இப்படிப்பட்ட பொது முறைப்படுத்து அமைப்புகள், அரசு ஆதரவுடன் திறமையாக செயல்படவில்லையென்றால் சந்தைகள் முறையாக இயங்காது” என்று ஐரோப்பிய மேம்பாட்டு வங்கி கூறியுள்ளது.
வங்கிகளில் கடன் பெறுவோருக்கும், நுகர்வோருக்கும் பாதுகாப்பான, நியாயமான பரிமாற்றம் பெறுவதற்கு இப்படிப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் பொருளாதாரத்தின் அங்கமாகத் திகழும் ஒவ்வொரு துறைக்கும் அவசியம் என்று கூறியுள்ள ஐரோப்பிய வங்கி, “இப்படிப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் இல்லாமல், அரசுக்குச் சொந்தமான பொது நிறுவனங்களை விற்பதினாலும், தனியார் மயமாக்குவதாலும் திறன் மேம்பாடோ அல்லது நுகர்வோருக்கு உரிய பயன்களோ கிடைக்கமாட்டா” என்று கூறியுள்ளது.
அதேபோல், “அதிகமான, அடிப்படையற்ற அதிகமான கடன் வழங்கலை முறைப்படுத்தக் கூடிய பாதுகாப்பு அமைப்புகள் இல்லாமல், ஏற்படும் கடன் வளர்ச்சியோ அல்லது அதிகமான தனியார் வங்கிகள் தொடங்க அனுதிப்பதோ வளர்ச்சி போன்றதொரு மாயத் தோற்றத்தையே ஏற்படுத்தும்” என்று கூறியுள்ள ஐரோப்பிய வங்கி, “உள்நாட்டுத் தேவையை அதிகரிப்பது, ஏற்றுமதியை பெருக்குவது, சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்துவது, ஊழலை ஒழிப்பது ஆகியவற்றை கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
சந்தை சார் பொருளாதாரத்தை மிகவும் வலியுறுத்தி வந்த ஐரோப்பிய மேம்பாட்டு வங்கியின் சில பரிந்துரைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளை பொருளாதாரச் சிக்கலில் தள்ளிவிட்டது என்ற குற்றச்சாற்றையடுத்தே அது தன்னளவில் இந்த சுய ஆய்வு செய்து மாற்றுத் திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு மிகப்பெரிய அளவிற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பாதித்ததற்கும், அந்தச் சிக்கல் இன்றுவரை நீடிப்பதற்கும், ஐரோப்பிய மேம்பாட்டு வங்கி அளித்து யோசனைகள் முக்கிய காரணம் என்ற குற்றச்சாற்றும் இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில்தான், அரசுகளின் முறையாக கட்டுப்பாடின்றி இயங்கும் சந்தை பொருளாதாரம், சராசரி மக்களுக்கோ அல்லது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது என்ற நிலைக்கு ஐரோப்பிய வங்கி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக