வெள்ளி, 12 நவம்பர், 2010

‘விரிவுரையாளர் பதவிக்கு ‘எம்பில்’ போதுமா?’


சென்னை: கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். பட்டதாரிகள் தகுதியானவர்களா? என்பது குறித்து 8-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,025 விரிவுரையாளர் பணி இடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) புதிய உத்தரவுப்படி, விரிவுரையாளர் பதவிக்கு ஸ்லெட் அல்லது நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி அல்லது பி.எச்டி. பட்டம் அவசியம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். கல்வித்தகுதியே போதுமானது என்று யு.ஜி.சி. முன்பு அறிவித்திருந்தது. பழைய விதிமுறைப்படி, 1993-ம் ஆண்டுக்கு முன்பு எம்.பில். முடித்தவர்களுக்கு ஸ்லெட், நெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. எனவே விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். தகுதியே போதுமென்ற நிலை இருந்தது.

இதனால் 1993-க்கு முன்பு எம்பில் முடிந்த பலர் ஸ்லெட்-நெட் தேர்வுகளை எழுதவில்லை.

பி.எச்டி. அல்லது ஸ்லெட், நெட் தேர்ச்சி கட்டாயமாக்கி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விரிவுரையாளர் பணி நியமன அறிவிப்பினை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த விசாரணையின்போது, யு.ஜி.சி. உத்தரவின்படிதான் விரிவுரையாளர் பதவிக்கு தகுதி நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதலாவது டிவிஷன் பெஞ்சு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது யு.ஜி.சி. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, “கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். பட்டதாரிகளையும் அனுமதிப்பது தொடர்பாக கடந்த 12.8.2010 அன்று யு.ஜி.சி. தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளதாகவும், இதுவரை அதுகுறித்து தகவல் ஏதும் வரவில்லை” என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து ஒப்புதல் தொடர்பாக தனக்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். பட்டதாரிகள் தகுதியானவர்கள்தானா?” என்பது தொடர்பாக யு.ஜி.சி. அனுப்பிய தீர்மானத்தின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வருகிற 8-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.

மேற்கண்ட தேதிக்குள் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றால் விரிவுரையாளர் பணி நியமன அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, எம்.பில். கல்வித் தகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக