தமிழகத்தில் உள்ள தொழிற்பேட்டைகளில் அம்பத்தூர் தொழிற்பேட்டை முக்கியமானதாகும். 1965ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொழிற்பேட்டை காமராஜர் ஆட்சி காலத்தில், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தால் ஆரம்பிக்கப்பட்டது. வளர்ச்சியை கருத்தில் கொண்டு தெற்காசியாவில் மிகப்பெரிய தொழிற்பேட்டையாக திகழ்கிறது அம்பத்தூர் தொழிற்பேட்டை. ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ள அம்பத்தூர் தொட்டி நிறுவனம் இத்தொழிற்பேட்டையில்தான் உள்ளது. டெல், டி.சி.எஸ் போன்ற நிறுவனங்களும் இத்தொழிற்பேட்டை அலுவலங்களின் உற்பத்தி திறனை கொண்டுள்ளன.
2 லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் இத்தொழிற்பேட்டையின் பல இடங்களில் ஆட்கள்தேவை போர்டுகள் தொங்கிக் கொண்டு இருப்பதை இத்தொழிற்பேட்டை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதற்கு அத்தாட்சி. இந்த வளர்ச்சிதான் இத்தொழிற்பேட்டை ஆசியாவிலேயே முதன்மையானதாக மாற்றியுள்ளது.
இரயில் நிலையங்களுக்கு அருகாமை, பரந்து விரிந்த நிலப்பரப்பு, தட்டுப்பாடு இல்லாத தண்ணீர் வசதி, போக்குவரத்து தொடர்பு, தொட்டுவிடும் தூரத்தில் துறைமுகம் ஆகியவை அம்பத்தூர் தொழிற்பேட்டை அமைக்கப்பட அடிப்படை காரணங்களாகும். தொடங்கப்பட்ட காலத்தில் 15 தொழிலதிபர்கள் இணைந்து எய்மா என்று சுருக்கமாக அழைக்கப்படும் அம்பத்தூர் தொழிற்பேட்டை, உற்பத்தியாளர்கள் சங்கத்தை தொடங்கினர்.
அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியால் அம்பத்தூர் தொழிற்பேட்டை அசுர வளர்ச்சி அடைந்தது. அரசாங்கத்துக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பாலமாக செயல்படும் இந்த அமைப்பு சலுகைகள், மானியங்களை பெற்றுத்தந்து தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கைவினைப் பொருட்கள், நகைகள், ஆயுர்வேத பொருட்கள், அழகு சாதன பொருட்கள், கிரானைட், தொல்பொருட்கள், பேப்பர் பொருட்கள், கம்ப்யூட்டர் உதிரிபாகம் தயாரிப்பு, ரப்பர் பொருட்கள் என்று பலவித பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அண்மை காலமாக வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் இங்கு அதிகரித்து வருகின்றன.
தொழிற்பேட்டை ஆரம்பித்தபோது நூறுக்கும் குறைவாக இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தற்போது 1,700க்கும் அதிகமாக பெருகி உள்ளது. பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையும் 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் பணியாற்றி வருகின்றனர்.
அம்பத்தூர் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் விதமாகவும், உலகின் நவீன தொழில்நுட்பத்தை அம்பத்தூர் நிறுவனங்கள் பெரும் நோக்கத்திலும் தொழில் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற 425 நிறுவனங்களில் 80 நிறுவனங்கள் அயல்நாடுகளை சேர்ந்தவை. அடுத்ததாக மிகப்பெரிய கண்காட்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையின் வளர்ச்சி அதிகரிக்கும் அதே நேரம் சாலைகள், தண்ணீர் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவுக்கே முன்மாதிரி தொழிற்பேட்டையாக மாறிக் கொண்டிருக்கிறது இது.
தொழிற்பேட்டையின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதிய பணியாளர்களை தேர்ந்தெடுத்து தரும் பயிற்சி அளிக்கின்றனர். ஏற்கனவே பணியாற்றும் பணியாளர்களுக்கு திறன்மேம்பாடு, கணினி பயிற்சி, மொழி மேம்பாடு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக தொழில்நுட்ப பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளே அதிகமாக உள்ளன. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்காக எந்திரங்களை இயக்க இளைஞர்களுக்கு சி.என்.சி எனப்படும் தொழிற்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 2,500 கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்தி நடைபெறும் இத்தொழிற்பேட்டையில் இருந்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனை மேலும் அதிகரிக்க அரசிடம் இருந்து உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது அம்பத்தூர் தொழிற்பேட்டை.
நாளும் பெருகி வரும் தொழிற்சாலைகள், அதிகரித்து வரும் அன்னிய செலாவணி வருவாய், பெருகி வரும் வேலைவாய்ப்புகள், பணியாளர்களுக்கான திறன்மேம்பாடு, தானும் வளர்ந்து ஏராளமானவர்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அம்பத்தூர் தொழிற்பேட்டை மாநிலத்தின் பிற தொழிற்பேட்டைகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக