ஐடி தொழில்துறையில் ஏற்பட்டுள்ள அபரித வளர்ச்சியால், திறமைசாலி மாணவர்களை கொத்திக்கொண்டு போவதற்காக, ஐ.டி நிறுவனங்கள் நடத்தும் கேம்பஸ் இண்டர்வியூக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான என்ஜினியர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறி கனவுகளுடன் காத்திருக்கும் என்ஜினியரிங் மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளன டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள்!
இதனால் எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வேலைக்கு அமர்த்தப்படும் என்ஜினியர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
இதனால் வருகிற டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை என்ஜினியரிங் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ களைக்கட்டப்போகிறது.
சுமார் 1.77 லட்சம் பணியாளர்களை கொண்டுள்ள டிசிஎஸ், ஒவ்வொரு ஆண்டும் வேலைக்கு எடுக்கும் தனது பணியாளர்களில் 70 விழுக்காட்டினரை கேம்பஸ் இண்டவியூ மூலமாகவே தேர்வு செய்வது என்ற கொள்கையை கொண்டுள்ளது.2010 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் சுமார் 24,000 பேர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.
இது தொடர்பாக டிசிஎஸ் தலைமை நிர்வாகியும், நிர்வாக இயக்குனருமான என். சந்திரசேகரன் ," நடப்பு நிதியாண்டில் 30,000 பேரை வேலைக்கு எடுப்பதே எங்களது முதல் திட்டமாக இருந்தது.ஆனால் 50,000 பணியாளர்களுடன்தான் நாங்கள் நடப்பு ஆண்டு கணக்கை முடிப்போம் எனத் தெரிகிறது.அடுத்த நிதியாண்டில் இந்த ஆண்டைவிட அதிகமாகத்தான் எடுப்போமே தவிர குறைவாக எடுக்கமாட்டோம்" என்கிறார்.
தேசிய மென்பொருள் சேவை நிறுவனங்களின் சங்கமான "நாஸ்காம்' (NASSCOM), கேம்பஸ் இண்டர்வியூக்கான விதிமுறைகளை குறைத்துள்ளது.இதுவரை அந்த அமைப்பின் உறுப்பு நிறுவனங்கள் மட்டுமே என்ஜினியரிங் கல்லூரிகளில் எட்டாவது பருவத்தேர்வு( செமஸ்டர்) தொடங்கும்போது கேம்பஸ்க்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆனால் தற்போது அந்த கெடுபிடிகள் குறைந்து, அதிக வேலை திட்டங்களை பெற்றுள்ள நிறுவனங்களும் தங்களது தேவைக்கேற்ற பணியாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்வதற்காக கேம்பஸ்க்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டில் மிக அதிகவேலை வாய்ப்பு உருவாகி, ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும்.
நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில், 30,000 பேரை வேலைக்கு எடுகப்போவதாக இன்ஃபோசிஸ் அறிவித்திருந்தது.ஆனால் செப்டம்பர் இறுதிக்குள்ளாகவே அந்த எண்ணிக்கையை அது 40,000 பேராக அதிகரித்துவிட்டது.முந்தைய நிதியாண்டில் இந்நிறுவனம் 61,000 பேரை இண்டர்வியூ செய்து, 26,200 பேருக்கு வேலை வழங்கியுள்ளதாக அதன் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
2010 மார்ச் மாதத்தின்படி, இன்ஃபோசிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் எண்ணிக்கை 1,13, 800 ஆக உள்ளது.இதில் 1.06,900 பேர் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் ஆவர்.
இந்நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரியான சங்கர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், " கடந்த ஓராண்டில்( 2009 அக்டோபர் முதல் 2010 செப்டம்பர் வரை) 27,500 க்கும் அதிகமான கூடுதல் பணியாளர்கள் எடுக்கப்பட்டனர்.தற்போது நாங்கள் கேம்பஸிலும், அனுபவம் வாய்ந்த பணியாளர்களை எடுப்பதிலும் தொடர்ந்து தீவிரமாக உள்ளோம். அதே சமயம் 2010 செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் மட்டும், சர்வதேச அளவில் நாங்கள் சுமார் 95,600 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளோம்" என்றார்.
தொழில்துறையில் ஏற்பட்டுள்ள 20% வளர்ச்சி விகிதம் சுமார் 3,10,000 பணியாளர்கள் தேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதில் ஒரு பகுதியினர் எம்பிஏ மற்றும் அக்கவுண்ட்ஸ் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களாகவும், சில பிரிவு பணியாளர்கள் உள்ளூரிலேயே கிடைக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறுகிறார் பிரபல வேலைவாய்ப்பு ஆய்வாளரான ஆஷிஸ் சோப்ரா.
இந்த மதிப்பிட்டின்படி பார்த்தால், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்கள், ஏராளனமானோரை வேலைக்கு எடுக்கவேண்டியதிருக்கும்.இதனால் அடுத்த ஓரிரு மாதங்களுக்கு என்ஜினியரிங் கல்லூரிகள் கேம்பஸ் இண்டர்வியூக்களால் அமளிதுமளிப்பட போகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக