வெள்ளி, 12 நவம்பர், 2010

மைனா விமர்சனம்!


ரிலீசுக்கு முன்பு ஆளாளுக்கு இந்த படம் பற்றி நிறைய பேசினார்கள். அவர்கள் பேசியதில் பாதியளவுக்கு மக்கள் பேசினாலே இந்த படம் தாறு மாறாக ஹிட். ஆனால் அது நடந்ததா? தியேட்டர் வாசலில் ஆயிரம் கருத்துகள். அதில் தொள்ளாயிரம், “படம் பருத்தி வீரன் மாதிரியே இருக்குப்பா” என்பதுதான். அந்த படத்திலேயும் ஒரு பொடியன் சண்டியர். இந்த படத்திலேயும் ஒரு பொடியன் சண்டியர். அந்த படத்திலும் குழந்தைகளின் பிஞ்சிலே பழுத்த காதலை காண்பித்தார் அமீர். இங்கேயும் அப்படியே டிட்டோ. இவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால் மைனா, நிஜமான வலிதான்.

நடுத்தெருவுக்கு வந்த மைனாவின் குடும்பத்தை பார்த்து பரிதாபப்பட்டு தனது சொந்த ஊருக்கு அழைத்து வருகிறான் பொடியனான சுருளி. மைனா மட்டும் படிக்கிறாள். கொண்டு போய் விடுகிற வேலை சுருளிக்கு. சைக்கிள் சக்கரம் சுழலும்போதே மைனா ப்ளஸ் 2 வுக்கு வந்துவிடுகிறாள். சுருளி மட்டும் அந்த சைக்கிளை கூட மாற்றவில்லை. வயசுக்கு வந்த அவளுக்கு குச்சி கட்டுவது கூட சுருளியின் செலவில்தான். ஆனால் கட்டிக் கொடுப்பது மட்டும் யாருக்கோவாம். இந்த நேரத்தில் கோபம் கொள்கிற சுருளி, மைனாவின் அம்மாவை போட்டு புரட்டி எடுக்கிறார். பதினைந்து நாள் காவலில் சிறைக்கு போகிற அவர் திரும்பி வருவதற்குள் மைனாவுக்கு திருமணம் முடித்துவிட அம்மா கணக்கு போடுகிறாள். அது தெரிந்து சிறையிலிருந்து தப்பிக்கும் சுருளி, மைனாவை இழுத்துக் கொண்டு ஓடும்போதுதான் தேடி வரும் போலீஸ் பிடித்துக் கொள்கிறது.

இருவரையுமே தள்ளிக் கொண்டு போகும் போது கஞ்சா கேஸ் போட்டு ஆறு மாதம் உள்ளே தள்றேன். இவ தெருவுல பிச்சை எடுப்பா என்று போலீஸ் அதிகாரி சொல்வதால், மீண்டும் தப்பிக்கிறான் சுருளி. அப்புறம் போலீஸ் தேடிப்பிடித்து திரும்பவும் ஸ்டேஷனுக்கு வருவதற்குள் இந்த போலீசின் உயிரையே காப்பாற்றுகிறான் சுருளி. அதற்காக அவனை விடுவித்தார்களா? காதலியுடன் சேர்ந்தானா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

புதுமுகம் விதார்த்துக்கு நடிப்பு நன்றாக வருகிறது. சண்டைக்காட்சிகளில் மூர்க்கத்தனமான வேகம் காட்டுகிறார். அதற்காக சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி காதல் வரும்போதெல்லாம் தலையை தலையை ஆட்டுவதுதான் கொடுமை. ஏன் சார். காதலிக்கிறது தப்பான்னு கேட்டு அழும்போது மட்டும் மனசை என்னவோ பண்ணுகிறார்.

சிந்து சமவெளியில் நடித்த அமலாதான் இதிலும் ஹீரோயின். அவர் காதலோடு விதார்த்தை பார்க்கும்போதெல்லாம், முந்தைய படம் நினைவுக்கு வந்து மேட்டருக்கு வர்றீயா என்பது போலவே இருக்கிறது. மற்றபடி மேக்கப் இல்லாத அமலா கூட அழகாகதான் இருக்கிறார். கடைசியில் இவரது முடிவு மிகவும் வருத்தத்திற்குரியதாக அமைந்துவிடுகிறது.

காமெடிக்கு என்று தனியாக நடிகர்களை போடாவிட்டாலும், முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் தம்பி ராமைய்யா அந்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். வடிவேலுக்கு டிராக் எழுதிக் கொண்டிருந்தாராம் இவர். பாடி லாங்குவேஜில் அது நன்றாகவே தெரிகிறது நமக்கு. இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நபர் புதுமுகமாம். ஆச்சர்யமாகதான் இருக்கிறது. இவரது மனைவியாக நடித்திருக்கும் ராட்சசியை எங்குதான் பிடித்தார்களோ? அவரது கண்ணும் குரலும் கூட பேய் தனமாக இருக்கிறது.

திரையில் தோன்றும் நடிகர் நடிகைகளிடம் டைரக்டர் பிரபு சாலமன் வாங்கியிருக்கும் பர்பாமென்சில் கொஞ்சம் கூட குறையாமல் வாங்கியிருக்கிறார் டெக்னிகல் துறையிடமும். ஒளிப்பதிவாளர் சுகுமார், இசையமைப்பாளர் டி.இமான் இருவருமே அதிகம் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

படம் முடிந்த பின்பும் ஐந்து நிமிடங்களுக்கு நீள்கிறது ஷோ. நறுக்க வேண்டிய இடத்தில் நறுக்கியிருந்தால் எடிட்டருக்கும் ஒரு ஓ போட்டிருக்கலாம். மற்றபடி மைனா காதல் பட வரிசையில் ரொம்பவே முக்கியமானதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக