ஊதிய உயர்வுக் கோரி ஒப்பந்த லாரி ஓட்டுநர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் சென்னையில் ஆவின் பால் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பால் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சென்னை, புறநகர் பகுதிகளுக்கு தினமும் 10 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் வழங்கப்பட்டு வருகிறது. பால் வினியோகத்தில் 100 லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தனியார் பால் வாகனங்களின் ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று முதல் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஊதிய உயர்வு கோரி பால் லாரி ஓட்டுநர்கள், கிளினீர்கள் நேற்றிரவு திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பண்ணையில் இருந்து பால் வெளியே கொண்டு செல்லப்படவில்லை. இதனால் சென்னை, புறநகர் பகுதிகளில் அட்டைதாரர்களுக்கு ஆவின் பால் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
தினமும் அதிகாலை 4 மணிக்கு லாரிகள் மூலமாக பால் வினியோகம் செய்யப்பட்டு விடும். ஆனால் ஓட்டுநர்களின் வேலை நிறுத்தத்தால் காலை 9 மணி வரை அட்டைதாரர்களுக்கு பால் கிடைக்கவில்லை.
இதனிடையே ஊழியர்களிடமும், லாரி உரிமையாளர்களிடமும் பால் வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் ஒத்துக் கொண்டனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
ஊழியர்களின் போராட்டத்தால் 5 மணி நேரம் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் இன்னல்களுக்கு ஆளானதோடு சில்லறை கடைகளில் அதிக பணம் கொடுத்து பால் வாங்கி சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக