அடுத்த 10 ஆண்டுகளில் அஞ்சத்தக்க வளர்ச்சி பெறும் துறையாக நானோ டெக்னாலஜி (Nano technology) கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கடந்த 1985ஆம் ஆண்டு உருவான இந்தத் தொழில்நுட்பம், இன்று வரை அதன் துவக்க கால வளர்ச்சியை மட்டுமே அடைந்துள்ளது.
உலகம் முழுவதும் நானோ டெக்னாலஜி தொடர்பான ஆய்வுகளும், படிப்புகளும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. இந்தியாவும் பிற நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் படிப்புகள், ஆய்வகங்களை உருவாக்கி வருகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூட நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பற்றி விரிவாக விவரித்துள்ளார். மருத்துவம், அறிவியல், இயற்பியல் துறைகளில் நேனோ டெக்னாலஜி மாபெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளதாகவும், மனிதன் நோயின்றி வாழ்வதற்கும் இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என்றும் கலாம் தெரிவித்துள்ளார்.
பொதுவாக 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டும், அந்த சிறு அளவுகளால் சிறப்பாகப் பெறப்படும் பண்புகளைக் கொண்டும் உருவாக்கப்படும் கருவிகளையும், பொருட்பண்புகளையும் நானோ தொழில்நுட்பம் என்று அழைக்கிறோம்.
ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில்) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களின் அமர முடியும். சாதாரணமாக மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது.
நானோ டெக்னாலஜி என்பது உண்மையிலேயே பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்திவரும் ஒரு தொழில்நுட்பம். இது ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்தவில்லை. மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னணுவியல், மருத்துவம், பொறியியல் என்று பல துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.
பார்க்கின்சன்ஸ் (Parkinson's) எனப்படும் மூளை செயல்பாடுகளை மட்டுப்படுத்தும் அபாயகரமான நோயின் பாதிப்பைக் குறைக்கும் சிகிச்சை முறையில் கூட நானோ டெக்னாலஜி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் சளித் தொந்தரவு போன்ற அன்றாட நோய்களுக்கும் நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீரியமான மருந்துகளை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக தற்போதைய மருத்துவ முறையில் சிகிச்சை அளித்தாலும் சளித் தொந்தரவு 3 முதல் 4 நாட்களுக்கு நீடிக்கும்.
ஆனால் நானோ டெக்னாலஜி மூலம் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஒரே நாளில் நிவாரணம் பெற முடியும் என இத்துறை வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற ஆயிரம் ஆச்சரியங்களை தனக்குள் அடக்கியுள்ள நானோ டெக்னாலஜி தொடர்பான படிப்புகளை எங்கு படிக்கலாம்? அதன் மூலம் என்னென்ன வேலைவாய்ப்புகளைப் பெறலாம் என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சில கல்லூரிகளே இளநிலை, முதுநிலையில் நானோ டெக்னாலஜி படிப்பை வழங்குகின்றன.
இளநிலை படிப்புகள்: அமிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் நானோ டெக்னாலஜி, கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தஞ்சாவூரிலுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆகியவை இளநிலை அளவில் நானோ டெக்னாலஜி கல்வியை வழங்குகின்றன. இதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், நானோ டெக்னாலஜி B.Sc Physics படிப்பு உள்ளது.
முதுநிலை படிப்புகள்: நொய்டாவில் (டெல்லி அருகேயுள்ளது) உள்ள அமிதி (Amity) இன்ஸ்டிடியூட், கொச்சியில் உள்ள அமிர்தா சென்டர் ஃபார் நானோ சயின்ஸ், கோவை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பயோசிஸ் பயோடெக்ஸ்& ரிசர்ச் சென்டர், சண்டிகரில் உள்ள சென்ட்ரல் சயின்டிஃபிக் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆர்கனைஷேசன், மும்பை, கான்பூர், சென்னை, டெல்லி, குவஹாட்டியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், புதுடெல்லியில் உள்ள ஜமியா மில்லியா இஸ்லாமியா கல்லூரி, போபால் மவுலானா ஆசாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, புனேவின் நேஷனல் கெமிக்கல் லெபாரட்ரி, குருஷேத்திரா, ரூர்கேலாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, புதுடெல்லி நேஷனல் ஃபிசிக்கல் லெபாரட்ரி, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், வேலூரில் உள்ள வி.ஐ.டி. ஆகிய இடங்களில் முதுநிலை நானோ டெக்னாலஜி படிப்புகள் வழங்கப்படுகின்றன.
வேலைவாய்ப்புகள்: இந்தியாவில் வளர்ந்து வரும் நானோ டெக்னாலஜி படிப்பை வழங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும் என்பதால், பேராசிரியர், ஆய்வாளர்கள் பணிக்கு ஏராளமானோர் தேவைப்படுவர்.
இதேபோல் நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்களும் புதிதாக உருவாக்கப்படும் நிலையில், அதற்கும் ஏராளமான பணியாளர்கள் தேவைப்படுவர். இதுமட்டுமின்றி நேனோ டெக்னாலஜி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளுக்கும் சர்வதேச அளவில் விஞ்ஞானிகளின் தேவை அதிகரித்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக