திங்கள், 7 பிப்ரவரி, 2011

மலைகிராமங்களுக்கு இன்னும் எட்டாத கல்வி!


ஈரோடு மாவட்டத்தில் மலைகிராம மக்களுக்கு இன்னும் முழுமையான கல்வி கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால்தான் எதிர்கால குழந்தைகளின் வாழ்க்கையில் வெளிச்சம் கிடைக்கும்.

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர், தாமரக்கரை, தட்டக்கரை, சத்தியமங்கலம் மலைப்பகுதியான கடம்பூர், தாளவாடி பகுதியை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்லும் பருவத்தில் உள்ளனர்.

ஆனால் இந்த குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்கிறதா? அப்படியே செல்லும் குழந்தைகளுக்கு ஆசியர்கள் மூலம் முழுமையான கல்வி போதிக்கப்படுகிறதா? சமவெளி கிராமங்கள், நகர் பகுதிகளில் கிடைக்கும் கல்வியில் கால்பங்காவது இந்த மலைகிராம பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே பதில்சொல்ல வேண்டும்.

ஆம்! மலைகிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்க‌ள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகின்றனர். மலைப்பகுதி உள்ளடங்கிய ஒன்றியங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும் கட்டாயம் ஒரு வருடமாவது மலைகிராமங்களில் பணியாற்றியே தீரவேண்டும் என்பது கல்விதுறையின் ஆணை. இந்த ஆணை நிறைவேற்றியும் வருகின்றனர்.

ஆனால் இப்படி நியமிக்கப்படும் ஆசிரிய, ஆசிரியைகள் நாள்தோறும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.

மலைகிராமத்தில் வசிக்கும் பெற்றோர்களுக்கு போதிய பொது அறிவு மற்றும் கல்வி அறிவு இல்லாத காரணத்தால் தங்கள் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் பள்ளிக்கு அனுப்புவதில்லை என்பது உண்மை. அரசாங்கத்தின் அறிவுறுத்தலால் மட்டுமே பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் சிலர், தாங்கள் பணிக்கு சென்றுவிட்டால் பிள்ளை வீட்டில் தனியாக இருக்கும், ஆகவே பள்ளிக்கு அனுப்பிவிடலாம் என்று நினைத்து அனுப்புவர் சிலர். இப்படி இருக்கும் பெற்றோர்களை ஆசிரிய, ஆசிரியைகள் நன்றாக பயன்படுத்தி கொள்கின்றனர்.

அடர்ந்த மலைகிராமங்களுக்கு செல்லும் ஆசிரிய, ஆசிரியைகள் வாரத்திற்கு ஒருநாள் மட்டும் பள்ளிக்கு சென்று அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்தை போட்டுக்கொண்டு அவர்கள் வந்த பேரு‌ந்து திரும்பி வரும்போது மீண்டும் அதே பேரு‌ந்‌தி‌ல் ஏறி தங்கள் வீட்டுக்கு வரும் நிலைமையே தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசாங்கம் சார்பில் கொடுக்கப்படும் புத்தகங்களை வைத்துக்கொண்டு மலைகிராம குழந்தைகள் அவர்களாகவே படித்துக்கொள்ள வேண்டியதுதான்.

எல்ல ஆசிரிய, ஆசிரியைகளும் இப்படித்தான் நடந்துகொள்கிறார்களா என்றால் இல்லை. ஆனால் 95 சதவீத ஆசிரிய, ஆசிரியைகள் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள் என உறுதியாக சொல்லமுடியும்.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரிய, ஆசிரியைகளிடம் கேட்டபோது அவர்கள் கூறும் காரணம், எங்களுக்கு போக்குவரத்து வசதி கிடையாது. தனியாக இருசக்கர வாகனத்தில் வனப்பகுதியின் வழியாக வனவிலங்குகள் அச்சுறுத்தலில் வரமுடிவதில்லை என்கின்றனர்.

அப்படியெனில் மலைகிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கல்வி‌த்துறை சார்பாக ஆசிரிய, ஆசிரியைகள் குடியிருப்பு கட்டிதர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்டாயம் மலைகிராமங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஆசிரிய, ஆசிரியைகள் குடியிருப்பில்தான் தங்கி பணியாற்ற வேண்டும் என அரசு ஆணை பிற‌‌ப்பிக்கவேண்டும்.

இப்படி முடிவெடுத்தால்தான் மலைகிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு நகர்புற கல்வியில் பாதியளவாவது கிடைக்கும் என்பதே உண்மையான நிலையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக