புதன், 1 டிசம்பர், 2010

34 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடக்கும் பாலம்!

சென்னை எலியட்ஸ் கடற்கரை அருகே 1976ஆம் ஆண்டு இடிந்து விழுந்த அடையாறு பாலத்தை மீண்டும் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திரைப்படங்களில் மட்டுமே தென்படும் அடையாறு முகத்துவார பாலம் சென்னையில் ஆண்டு கணக்கில் வசிப்பவர்கள் பலரும் அறிந்திடாத ஒன்று.

பட்டிணப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரம், டும்மிங்குப்பம் பகுதிகளையும், பெசன்ட் நகரை ஒட்டியுள்ள எலியட்ஸ் கடற்கரையில் உள்ள ஊரூர் குப்பம், மொழிக்குப்பம் ஆகிய மீனவ பகுதிகளை இணைப்பதற்காக 1963ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

மீனவர்களின் போக்குவரத்திற்கு பெரிதும் உதவிய இந்த குறுகிய பாலம் 1976ஆம் ஆண்டு வீசிய புயலின்போது கடல் அலைகள் தாக்கி உடைந்து விழுந்தது. குத்துயிராக காட்சி தரும் அடையாறு முகத்துவார பாலம், இன்றைக்கும் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு அமைதியான இடமாகும்.

எலியிட்ஸ் கடற்கரையை ஒட்டியுள்ள தியோசாஃபிகல் சொசைட்டியில் வாழ்ந்துவந்த தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி, அதன் வாழ்ந்த காலத்தில் அமைதியான இந்தக் கடற்கரையில் நடக்கத் தொடங்கி, உடைந்து நிற்கும் இந்த பாலத்தின் முனை வரை நடந்து சென்று திரும்புவார்.

அவ்வளவு அமைதியாக இந்தப் பாலம், இப்போது சமூக விரோத செயல்களின் கூடாரமாக விளங்குகிறது. இதனால் ரம்மியம் கலந்திருக்கும் இப்பாலம் அமைந்துள்ள சூழலை ரசிக்க முடியவில்லை பலரும் வருந்துகின்றனர்.

பாலத்தை சரி செய்து அதற்கு செல்லும் சாலையையும் சீராக்கினால் பட்டிணப்பாக்கம்- பெசன்ட்நகர் மார்க்கம் செல்லும் பள்ளி சிறுவர்களுக்கும், போக்குவரத்து வசதிக்கும் பேருதவியாக இருக்கும் என்பது இப்பகுதிவாசிகளின் எதிர்பார்ப்பாகும்.

பட்டிணப்பாக்கத்தையும், பெசன்ட்நகரையும் இணைக்கும் அடையாறு பாலம் புதுப்பிக்கப்பட்டால் பல்வேறு வகையில் தங்களுக்கு பயன் அளிக்கும் என்று இப்பகுதிகளில் வாழும் மீனவர்கள் கூறுகின்றனர்.

அடையாறு பகுதியையும், கிரீன்வேஸ் சாலை சந்திப்பையும் இணைக்க திரு.வி.க பாலம் இருந்தாலும் வாகன வசதி இல்லாத மீனவ மக்களுக்கு அடையாறு முகத்துவார பாலம் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

250 பாலங்களை கொண்ட சிங்கார சென்னையில் இந்த அடையாறு முகத்துவார பாலம் மட்டும் 34 ஆண்டுகளாக உடைபட்ட நிலையிலேயே உள்ளது. தடைப்பட்டிருக்கும் போக்குவரத்திற்கு விடிவு காலம் பிறக்குமா? என்பதே மீனவர்களின் கேள்வி.

அடையாறு முகத்துவார பாலம் மட்டும் கிடையாது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பாலங்களுக்கும் இந்நிலைதான்.

நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பாலம் ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த பாலத்தை கடந்துதான் ஒருநாளைக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒருவழிபாதையாக அமைக்கப்பட்டுள்ள அந்த பாலத்தில் பேருந்து ஒன்று வரும் போது மறுமுனையில் வரும் பேருந்து நின்று கொண்டிருக்கதான் வேண்டும். பாலத்தை கடந்து பேருந்து சென்ற பிறகுதான் மற்ற வாகனங்கள் செல்ல முடியும். அப்படிப்பட பாலத்தின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. வெடிப்புகள் நிறைந்ததாகவும், மேடு பள்ளங்களுடன் காணப்படுகிறது. தூண்களில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு பாலம் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த பாலம் தற்போது பராமரிப்பின்றி இருக்கிறது. எப்போது இடிந்து விழும் நிலையில் அந்த பாலம் உள்ளது.

மக்கள் பயன்பாட்டிற்கு அவசியமான இப்படிப்பட்ட பாலங்களை உடனே பழுதுபார்த்து பயன்பாட்டிற்கு கொண்டுவருமா அரசு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக