வியாழன், 16 டிசம்பர், 2010
அவல நிலையில் சென்னை பறக்கும் இரயில் நிலையங்கள்!
மோசமான பராமரிப்புகளுக்கு முன்னுதாரமாய் திகழ்கின்றன சென்னை பறக்கும் இரயில் நிலையங்கள். பெரும்பாலான இரயில் நிலையங்களுக்குள் மாலை 6 மணிக்கு மேல் செல்ல பயணிகள் அஞ்சும் நிலை உள்ளது. சில இரயில் நிலையங்கள் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களின் கூடாரமாக உள்ளதாகவும் ஏராளமான புகார்கள்.
இருள் படர்ந்த குகைப்போல இருக்கிறது சென்னை சேப்பாக்கம் இரயில் நிலையம். இலேசான மழை வந்தாலும் இரயில் நிலையத்திற்குள் நிற்க முடியாது. இங்கு நகரும் படிக்கட்டும், மின் தூக்கிகளும் இருக்கின்றன. ஆனால் அவைகள் இயங்குவதில்லை. அங்கிருக்கும் கழிவறைக்குள் யாரும் நுழையவே முடியாது. ஆனால் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு இரயில் நிலையத்தில் பயணிகள் எப்படி வருவார்கள்?
சேப்பாக்கம் இரயில் நிலையம் மட்டுமல்ல, கிரின்வேஸ் இரயில் நிலையம் அதைவிட மோசம். குடிநீர் குழாய்கள் உள்ளன. ஆனால் குடிநீர் கிடையாது. எங்கு பார்த்தாலும் குப்பைக் கூளங்களுக்கும், கொசுக்கடிக்கும் குறைவில்லை. பெண்கள் கிரின்வேஸ் இரயில் நிலையத்திற்குள் தனியாக வருவதே சிரமம்.
கிரின்வேஸ் இரயில் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டார். அங்கு நிலவும் இருட்டு கொலைக்கு சாதகமாக இருந்துள்ளது. இதன் பின்னரும் பறக்கும் இரயில் நிலையங்கள் முறையான பராமரிப்பின்றி பரிதாப நிலையிலேயே உள்ளன.
சேப்பாக்கம், கிரின்வேஸ் இரயில் நிலையங்கள் மட்டுமல்ல, சென்னை பூங்கா நகரில் இருந்து வேளச்சேரி வரையிலான பறக்கும் இரயில் பாதையில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களிலும் நிலைமை இப்படித்தான்.
ஆனால் அதிகாரிகளோ, இரயில் நிலையங்களை பராமரிக்க தனியாரிடம் ஒப்பந்தங்கள் தரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பராமரிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
16 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டே இரயில் நிலையங்களுடன் தொடங்கப்பட்ட அதிவிரைவு இரயில் போக்குவரத்து திட்டத்தின் கீழ் தற்போது 17 இரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் தகுந்த பராமரிப்பு பணியை மேற்கொண்டால் சிறந்த வசதிகளை பயணிகள் பயன்படுத்தி இத்துறைக்கு வருவாய் பெருகிட வாய்ப்பு ஏற்படும்.
அதற்கு இரயில்வே நிர்வாகம், ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் ஆகிய மூன்று தரப்பும் சேர்ந்து செயல்பட்டால் உருப்படியாகும் இரயில் நிலையம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக