ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். இது சினிமாப் பாட்டு மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவமும் கூட.
ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் நம்மை விட்டு ஒரு ஆயுள் ஆண்டு விடை பெறுகிறது. இது பலருக்கும் கவலையைக் கொடுத்தாலும், கடந்து போனதை நினைக்காமல் நாம் இனி கடக்கப் போவதை நினைத்து தொடர்ந்து நடை போடுவதே பாசிட்டிவ் மனப்பாங்கு.
அந்த வகையி்ல் 2010ம் ஆண்டு விடை பெற்று விட்டது. குடும்ப வாழ்க்கையில் இந்த ஒரு ஆண்டில் நாம் எத்தனையோ சோதனைகளைச் சந்தித்திருப்போம். சில சாதனைகளையும் செய்திருப்போம்.
2010ல் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று எத்தனையோ தீர்மானங்களைப் போட்டிருப்போம். அதில் பலவற்றை செய்ய மறந்திருப்போம், சிலவற்றை செய்ய முயன்றிருப்போம். மொத்தத்தில் பாதிக் கிணறுதான் தாண்டியிருப்போம்.
ஆணாகட்டும், பெண்ணாகட்டும், வயது கூட கூட பலருக்கும் தாம்பத்யம் குறித்த கவலையும், சோர்வும் மெதுவாக எட்டிப் பார்க்கும். இதனால் ஏற்படும் மன அழுத்தம் பல குழப்பங்களைக் கூட்டி வந்து நடு வீட்டில் உட்கார்த்தி வைத்து விடும்.
வயது போனால் என்ன, உடல் நலிந்தால் என்ன, உண்மையான இளமை இவற்றில் இல்லை, உள்ளத்தில்தான் என்பதைப் புரிந்தால் நிச்சயம் எல்லாம் இனிமையாகும்.
2010ல் நமது குடும்ப வாழ்க்கையில், தாம்பத்ய வாழ்க்கையில் பல சந்தோஷங்களையும், சில சங்கடங்களையும் பார்த்திருப்போம். இவற்றை இன்றோடு விட்டு விடலாம். பிறக்கும் 2011ல் மனம் முழுக்க இளமையோடும், இனிமையோடும் வாழும் வழிகளைத் திட்டமிடலாம்.
எந்த விஷயத்தைச் செய்தாலும் அதைத் திட்டமிட்டு செய்ய உறுதி எடுப்போம். ஒரு காரியத்தில் இறங்கும்போது அதை வெற்றிகரமாக முடிப்பது எப்படி என்ற திட்டமிடலோடு ஈடுபட்டால் நிச்சயம் வாகை சூடலாம்.
2010ல் செய்ய நினைத்ததை, செய்ய முடியாமல் போனதை இந்த ஆண்டில் சாதிக்க முற்படுவோம்.
மனைவியுடனான உறவுகளை மேம்படுத்த இந்த ஆண்டும் உறுதி பூணுங்கள். கணவருடனான உறவுகளை வலுப்படுத்த மனைவியர்களும் இந்த ஆண்டில் உறுதி எடுக்கலாம்.
சந்தோஷமான, இனிமையான ஆண்டாக, பூரண திருப்தியுடன் கூடிய குடும்ப ஆண்டாக இது மலரட்டும், குதூகலம் கூடட்டும். உடலிலிருந்து கரைந்து கொண்டிருக்கும் இளமையை கருத்தில் கொள்ளாமல், உள்ளத்து இளமையைக் கூட்டி, வாழ்வில் இனிமை சேர்க்க 2011 அனைவருக்கும் உதவட்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக