ஞாயிறு, 5 டிசம்பர், 2010

நந்தலாலா – விமர்சனம்!


நடிப்பு: மிஷ்கின், ஸ்னிக்தா, அஸ்வத் ராம்

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி

தயாரிப்பு: அய்ங்கரன்

இயக்கம்: மிஷ்கின்

எது நல்ல படம்…? இதோ அறிவு ஜீவிகளின் இலக்கணம்:

அந்தப் படம் சில மனநிலை பாதித்தவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட வேண்டும். பார்த்த மாத்திரத்தில் பளிச்சென்று வெகுஜனப் பார்வையாளனுக்கு புரியக் கூடாது. முக்கியமாக மெதுவாக நகர வேண்டும். ஒரு காட்சி, முடிந்தளவு… அதன் இறுதிப் பகுதி வரை நீ…ளமாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும்..!

கட்டாயம் செக்ஸ் தொழிலாளி ஒருவர் இடம்பெற்றிருக்க வேண்டும்!

-இந்த இலக்கணத்தை மீறாமல் வந்திருக்கிறது மிஷ்கின் இயக்கியுள்ள ‘மாற்று சினிமா’வான நந்தலாலா. ஆனால் நந்தலாலாவை இவை மட்டுமே ஆக்கிரமிக்கவில்லை… இவற்றையும் தாண்டிய ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைப்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஒரு விடுமுறை நாளில் கைவசமிருக்கும் பழைய புகைப்படத்தையும் முகவரியையும் (உடன் மேப்பையும்) வைத்துக் கொண்டு தன் தாயைத் தேடி கிளம்புகிறான் சிறுவன் அகி. வழியில் பாஸ்கரமணியைச் சந்திக்கிறான் (மிஷ்கின்). பாஸ்கரமணி மனநிலை பாதிக்கப்பட்டவன். ‘சின்னத்தம்பி’யை விட கொஞ்சம் முற்றிய நிலை… ஆனால் நல்ல மனசு…!

இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக உணர்கிறார்கள். பயணம் தொடர்கிறது. வழியில் பல சுவாரஸ்யமான மனிதர்களைச் சந்திக்கிறார்கள். ஒரு செக்ஸ் தொழிலாளி (ஸ்னிக்தா) உடன் சேர்ந்து கொள்கிறாள்.

ஒருவழியாக சிறுவனின் தாய் இருக்கும் கிராமத்துக்குப் போய் ஆளுக்கொரு பக்கம் வீட்டைத் தேடுகிறார்கள். ஒரு வீட்டில் அந்தப் பெண்ணைப் பார்த்து விடுகிறான் பாஸ்கரமணி. அவளோ ஒரு புதிய குழந்தை, புதிய கணவன் என புதிய வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டிருக்கிறாள். பாஸ்கரமணி தான் வந்த விஷயத்தை சொன்னதும், அவன் காலில் விழுந்து கதறும் அந்தப் பெண், எக்காரணத்தைக் கொண்டும் தான் இருக்கும் இடத்தை சிறுவனுக்கு சொல்ல வேண்டாம் என்றும், அதற்காக எவ்வளவு பணம் நகையும் தரத் தயாராக இருப்பதாகவும் கெஞ்சுகிறாள்.

அங்கிருந்து அமைதியாக வெளியேறும் பாஸ்கரமணி, சிறுவனின் தாய் அங்கே இல்லை என்று கூறிவிட்டு, தனது சொந்த ஊருக்கு சிறுவனை கூட்டிப் போகிறான். அங்கே மனநிலை பாதிக்கப்பட்ட தனது தாயைப் பார்க்கிறான். அவளை ஒரு ஹோமில் சேர்க்கிறான்.

பின்னர் சிறுவனும், பாஸ்கரமணியும், அந்த முன்னாள் செக்ஸ் தொழிலாளியும் பயணத்தைத் தொடர்கிறார்கள். அப்போது வழியில் தன் தாய் இன்னொரு குழந்தை, கணவனுடன் காரில் பயணிப்பதைப் பார்த்துவிடுகிறான் சிறுவன். தன் தாய் இனி வரமாட்டாள் என்ற உண்மை புரிகிறது.

அடுத்து சிறுவனும் பாஸ்கரமணியும் தன் பயணத்தை தொடர்கிறார்களா… முடித்துக் கொண்டார்களா என்பது க்ளைமாக்ஸ்.

இந்தக் கதை ‘இன்ன படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டது’ என்று தைரியமாக சொல்லிவிட்டே, செய்திருக்கலாம் மிஷ்கின். யாரும் இதற்காக அவரிடம் சண்டைக்கு நின்றிருக்கப் போவதில்லை.

தழுவல் கதையாக இருந்தாலும் அதை அபாரமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அநியாயத்துக்கு ஆமை வேகம். ஒரு காட்சியின் அழகை முழுதாக உணரும் முன்னே அடுத்த காட்சிக்கு வேகம் பிடிப்பதுதான் ரசிகனின் ஆவலை படம் முழுக்கக் காப்பாற்றும் உத்தி. அது இந்தப் படத்தில் இல்லை. இளையராஜா மட்டும் இல்லாமல் போயிருந்தால்… கஷ்டம்தான்!

அந்த இளநீர்க்காரர், விவசாயி, லாரி டிரைவர், ஜப்பானிய ஸ்டைல் பைக் ஓட்டிகள், ஐஸ் வண்டிக்காரர்… குறிப்பாக சைக்கிளிலிருந்து விழுந்து, அடிபட்டு மிஷ்கினால் உதவப்படும் மாணவி, வீட்டுக்குப் போய் ட்ராக்டருடன் வரும் கவிதைக் காட்சி…

-ஒரு நெடிய களைப்பான பயணத்தில் சின்னச் சின்னதாய் எட்டிப் பார்க்கும் சுவாரஸ்ய கவிதைகள்!

மைனஸ் என்று பார்த்தால்… நிறைய்ய்ய்ய!

மனநிலை பிறழ்ந்த பாஸ்கரமணிக்கு எல்லாம் நன்றாகத்தான் தெரிகிறது… வேறு புருஷனுடன் வசிக்கும் சிறுவனின் தாயைக் காப்பாற்றும் அளவுக்கு புத்திசாலி. மனநிலை பாதித்த அம்மாவை ஹோமில் சேர்க்கும் அளவு பாசமானவர். ஆனால் இயல்பாகப் பேச மட்டும் தெரியாதா? அட இடுப்பில் நிற்காமல் அடம்பிடிக்கும் பேண்டைக் கூடவா கட்டிக் கொள்ளத் தெரியாது! ஒருவேளை அவர் முன்பே ‘தெளிந்துவிட்டார்’ என்று சொல்ல வந்தால்… படம் முழுக்க மெண்டலாக ‘நடிக்கிறாரா’ ‘தெளிந்த’ பாஸ்கரமணி?

இதை வித்தியாசம் என்றோ… அறிவு ஜீவித்தனம் என்றோ ஏற்க முடியாது. மிகை!

சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பது உண்மைதான்… அதற்காக பேச வேண்டிய இடங்களில் கூட ஊமையாகத்தான் இருப்பேன் என்று அடம் பிடிக்கின்றன மிஷ்கினின் பாத்திரங்கள்.. ஆனால் அந்த இடம் ராஜாவின் நெகிழ்வான இசைக்கு வழிவிடுவதால் தாராளமாய் மன்னிக்கலாம்!

நடிப்பில் அஞ்சாதேயில் வரும் ‘குருவி’யை நினைவுபடுத்துகிறது மிஷ்கினின் வசன உச்சரிப்புகள். வெளியுலகுக்கு மனநிலை பிறழ்ந்தவராகவும், உள்ளுக்குள் மகா நல்லவராகவும் இருக்கும் பாத்திரம்… அதை உணர்ந்து செய்திருக்கிறார். என்ன இருந்தாலும் ஒரு இயக்குநர்தான் படத்தின் நிஜமான நடிகன் என்பதை உணர வைத்திருக்கிறார். ஏற்ற களம் அமையும்போது நடிப்பைத் தொடரலாம் தைரியமாக.

சிறுவன் அஸ்வத் ராம், இளநீர் வியாபாரம் செய்யும் தாத்தா, ஜப்பானிய ஸ்டைல் பைக்கர்ஸ், செக்ஸ் தொழிலாளியாக வரும் ஸ்னிக்தா… எல்லாருமே கோட்டைத் தாண்டாமல் அடக்கி வாசித்திருப்பது பெரிய ப்ளஸ்.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு கண்களுக்கு தனி அனுபவத்தைத் தருகிறது. ஆற்றின் போக்குடன் நாணல் நெளியும் அழகை காட்டும் ஒரு ப்ரேம்… அட்சர லட்சம் பெறும். எடிட்டருக்கு எந்த வேலையும் இல்லை போலிருக்கிறது படத்தில்!

அப்புறம்… படத்தின் நிஜ ஹீரோவான இளையராஜா!

பிரமாதப்படுத்தியிருக்கிறார் மனிதர். விருதுகளுக்கு அப்பாற்பட்ட இசை. மிஷ்கின் தனது இயக்கத்தில் விட்டுவைத்துப் போன ஓட்டைகளைக் கூட தன் இசையைக் கொண்டு நிரப்பிவிட்டார் இளையராஜா. மனிதன் தன் முகத்தால் வெளிக்காட்ட முடியாத உணர்வுகளை அற்புதமாய் பேசியிருக்கிறது அவரது இசை.

ராஜாவின் குரலில் ஒலிக்கும், ‘மெல்ல மெல்ல ஊர்ந்து வரும்…’ நெஞ்சைக் கிளர்த்துகிறது. ‘தாலாட்டுக் கேட்க நானும்…’ மனதைப் பிசைகிறது.

ஆனால் ஜேசுதாஸ் பாடியிருக்கும் ‘ஒண்ணுக்கொன்னு துணையிருக்கு உலகத்திலே…’ பாடல், ராஜா ராஜாதான் என நம்மையும் அறியாமல் முணுமுணுக்கச் செய்கிறது.

படத்தின் விளம்பரங்களில் இளையராஜாவின் பெயரை முன்னிலைப்படுத்தி, சரியாகவே மரியாதை செய்துள்ளார் மிஷ்கின்!

நல்ல படம் கெட்ட படம் என்ற வட்டத்தைத் தாண்டி, ‘ஒரு புதிய அனுபவம்’ என்று சொல்ல வைத்திருக்கிறது நந்தலாலா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக