புதன், 22 டிசம்பர், 2010
எந்த அறிவிப்பும் இல்லாமல் உணவு விலையை உயர்த்திய ஹோட்டல்கள்!
சென்னை: சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் உணவுப் பண்டங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 10 முதல் 15 சதவீதம் வரை விலையை உயர்த்தியுள்ளன.
வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை பெரிதும் உயர்ந்துவிட்டதாலேயே இந்த நிலை என்று ஹோட்டல்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து காய்கறிகளின் விலைகளும் பெருமளவு உயர்ந்துவிட்டன. இன்றைய நிலையில் வெங்காயம் கிலோ ரூ 88 முதல் 100 வரையிலும், தக்காளி கிலோ ரூ 44 முதல் 60 வரையிலும் விற்கப்படுகிறது.
பீன்ஸ், உருளை, முருங்கை என அனைத்து காய்கறிகளின் விலைகளும் பருவ மழை காரணமாக உயர்ந்துள்ளன.
காய்கறிகளின் இந்த விலையேற்றம் ஹோட்டல் தொழிலை பெரிதும் பாதித்துள்ளது.
உணவு பண்டங்களின் விலையை உயர்த்தாமல் இந்த விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை என்று தெரிவித்தனர் ஹோட்டல் நடத்துபவர்கள்.
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள பெரிய ஹோட்டல்களில் 10 முதல் 15 உணவு பண்டங்களின் விலையை ஏற்றியுள்ளனர். எந்த அறிவிப்பும் செய்யாமல் ஓசையில்லாமல் உயர்த்திவிட்டனர்.
வெங்காயம் விலை உயர்வை தங்களால் சமாளிக்கவே முடியவில்லை என்று புலம்புகின்றனர் ஹோட்டல் நிர்வாகத்தினர்.
நட்சத்திர உணவகங்களில் கூட வெங்காய சாலட் மட்டும் தர முடியாது என்று அறிவிக்கும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.
தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்கம் தரப்பில் இதுவரை ஹோட்டல் பண்டங்களின் விலை உயர்த்தப்ட்டது குறித்து எந்தத் தகவலுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக