புதன், 22 டிசம்பர், 2010
மக்களை வாட்டி வதைக்கும் காய்கறி விலை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொட்டி தீர்த்த மழை காரணமாக அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு ரெக்கை கட்டிப் பறக்கிறது காய்கறி விலைகள். அன்றாட பயன்பாட்டு காய்கறிகளான வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலைகள் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து கொண்டே இருக்கிறது. காய்கறி விலை உயர்ந்திருந்தாலும் வேறு வழியின்றி அவற்றை வாங்கி செல்கின்றனர் பொதுமக்கள்.
விலை உயர்வுக்கு காரணம் தென்னிந்தியா முழுவதும் பெய்து வரும் மழை என்று அனைவரும் உணர்ந்த விஷயம். இது ஒருபுறம் இருக்க இந்த திடீர் விலை உயர்வால் காய்கறி வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எதிர்பார்த்தற்கு மேலாகவே விலைகள் அதிகரித்துவிட்டன என்று கூறும் வியாபாரிகள், கத்திரிக்காய், வெண்டைக்காய் அதிகபட்ச விலையாக உயர்ந்திருக்கிறது என்கின்றனர்.
கடந்த வாரம் மொத்த விற்பனையில் 45 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ வெங்காயத்தின் விலை தற்போது 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. மழை காரணமாக வெங்காயம் உள்ளிட்ட விளை பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் தொடர்ந்து விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறும் கோயம்பேடு வியாபாரிகள், விலை உயர்வுஎன்பது வியாபார யுக்தி அல்ல, இயற்கை சீற்றம்தான் காரணம் என்றும் கூறுகின்றனர்.
குறிப்பாக தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அபரிமிதமான மழை பெய்ததால் விளை பயிர்கள் அதிக அளவில் நாசம் அடைந்துவிட்டது. இதன் காரணமாகவே விலை உயர்ந்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
பெங்களூரு கத்திரிக்காய், நூக்கோல் போன்ற காய்கறிகளின் விலை ஓரளவு குறைந்தே உள்ளன. எனினும் அவரைக்காய், பாகற்காய், வெண்டைக்காய், பீட்ரூட், முருங்கைக்காய், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் எதிர்பாராத விதமான உயர்ந்துள்ளன. மொத்த மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்து விற்போர் விலை சொல்வதை விட மக்களுக்கு காரணம் சொல்லியே ஓய்ந்து போகின்றனர்.
சில்லறை சந்தையில் காய்கறி விலைகள் அதிகரித்துள்ளதே என்று கோயம்பேடு மார்க்கெட்டு வந்த பொதுமக்களும், அங்கும் விலை உயர்ந்திருப்பதை கண்டு காய்கறி விற்பனை கடைகளை கண்காட்சி போல பார்த்து நின்றனர்.
வெங்காயம் தக்காளி விலை வில்லிவாக்கம் மார்க்கெட்டில் உயர்திருப்தபால் கோயம்பேட்டிற்கு வந்தோம் என்றும் அங்குள்ளதை போல்தான் விலை இருக்கிறது. இதனை வாங்கி சமையல் செய்வது கஷ்டம் என்றாலும் சமையல் செய்துதான் ஆக வேண்டும் என்று பொதுமக்கள் செல்கின்றனர்.
''காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் வாங்கவே முடியவில்லை. எதனால் விலை உயர்ந்தது என்றும் தெரியவில்லை. விலை உயர்கிறதே தவிர குறையவில்லை'' என்றும் பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
அன்றாட தேவைக்கான காய்கறிகள் அனைத்துமே கிலோவிற்கு 30 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்திருப்பதாக இல்லத்தரசிகள் கூறுகின்றனர்.
வெங்காய விலை உயர்வை போன்று பூண்டு விலையும் அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூண்டு தற்போது 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. பூண்டு சாகுபடி தாமதமானதும், அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதுமே பூண்டின் விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் பூண்டின் விலை ஜனவரி மாதம் மத்தியில் குறையத் தொடங்கும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறி விலை:
கோஸ் ரூ.20
கேரட் ரூ.40
பீட்ரூட் ரூ.30
சவ்சவ் ரூ.18
நூக்கோல் ரூ.20
முள்ளங்கி ரூ.24
பீன்ஸ் ரூ.40
கத்திரிக்காய் ரூ.30
அவரைக்காய் ரூ.40
புடலங்காய் ரூ.28
வெண்டைக்காய் ரூ.35
மிளகாய் ரூ.20
குடை மிளகாய் ரூ.25
முருங்கைகாய் ரூ.150
இஞ்சி ரூ.70
தேங்காய் (ஒன்று) ரூ.15
சேனைக் கிழங்கு ரூ.18
சேம்பு ரூ.22
உருளைக்கிழங்கு ரூ.24
கோவக்காய் ரூ.20
சுரக்காய் ரூ.20
நாட்டு தக்காளி ரூ.35
பெங்களூரு தக்காளி ரூ.36
பூசணி ரூ.15
பெரிய வெங்காயம் ரூ.70
சாம்பார் வெங்காயம் ரூ.50
பட்டாணி ரூ.35
பாகற்காய் ரூ.30
காலிபிளவர் (ஒன்று) ரூ.25
பரங்கிகாய் ரூ.28
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக