வெள்ளி, 31 டிசம்பர், 2010

மன்மதன் அம்பு – விமர்சனம்!


நடிப்பு – கமல்ஹாஸன், த்ரிஷா, மாதவன், சங்கீதா

ஒளிப்பதிவு – மனுஷ் நந்தன்

இசை – தேவி ஸ்ரீ பிரசாத்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் – கமல் ஹாஸன்

இயக்கம் – கே எஸ் ரவிக்குமார்

தயாரிப்பு – உதயநிதி ஸ்டாலின்

எந்தக் கலை வடிவமாக இருந்தாலும் முதலில் அது மக்களை ஈர்க்கிற வகையில் இருக்க வேண்டும். தனக்குத் திருப்தி அளித்தால் போதும் அல்லது தனது ஈகோவை திருப்தி செய்தால் போதும் என்ற அதிமேதாவித்தன நினைப்பில் ஒருவர் உருவாக்கும் படைப்புகளை, வைக்க வேண்டிய இடத்தில் வைத்து பாடம் கற்றுத் தருகிறார்கள் மக்கள்.

மன்மதன் அம்பு என்ற வெறுமையான படமெடுத்த கமல்ஹாஸனுக்கு இப்போது அப்படியொரு பாடம் கற்றுத் தந்துள்ளனர் மக்கள் என்று முதலிலேயே சொல்லிவிடுவதில் நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

மன்-கமல், மதன் – மாதவன், அம்பு – த்ரிஷா… இந்த மூவரின் முக்கோண காதல்தான் இந்தப் படம். மன்-மதன்-அம்பு தலைப்புக்கான பெயர்க் காரணம் தெரிந்துவிட்டதா…

ஹிட்ச் (2005) மற்றும் ரொமான்ஸ் ஆன் தி ஹை ஸீஸ் (1948) ஆகிய இரண்டு ஆங்கிலப் படங்களின் பாதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள கதை மன்மதன் அம்பு.

பிரபல நடிகையான அம்புஜாக்ஷி என்கிற அம்பு (த்ரிஷா)வும், தொழிலபர் மதன கோபாலும் (மாதவன்) காதலிக்கிறார்கள். ஆனால் பல ஹீரோக்களைக் கட்டிப் பிடித்தும் நெருக்கம் காட்டியும் நடிக்கும் நடிகை என்பதால் அம்பு மீது வழக்கம் போல சந்தேகம் மதனுக்கு. அந்த சந்தேகம் ஒரு உயிரைக் கொல்லக் காரணமாகிறது, அவர்கள் அறியாமலே… கூடவே அவர்களின் காதலையும் அதே சந்தேகம் கொன்றுவிட, வெனிஸில் உள்ள தனது தோழி தீபா (சங்கீதா)விடம் போகிறாள் அம்பு.

அங்கே அவளுக்குத் தெரியாமல் மேஜர் மன்னாரை (கமல்) உளவு பார்க்க அனுப்புகிறான் மதன். தன் காதலி வேறு ஹீரோ யாருடனாவது வெளிநாட்டில் ஜாலியாக இருப்பாளோ என்ற சந்தேகம் அவனுக்கு (“கூட நடிக்கும் ஹீரோவுடன் செக்ஸ் வச்சிக்க கேரவன் தேவையில்லை… அதுக்கு வசதியா எத்தனையோ இருக்கு… அவுட்டோர், வெளிநாட்டு ஷூட்டிங்! – வசனம்: கமல்)

கேன்சரில் உயிருக்குப் போராடும் தன் நண்பனை காக்க இந்த உளவு அஸைன்மெண்டுக்கு ஒப்புக் கொள்கிறார் மேஜர். ஆனால், மதன் சந்தேகப்படும்படி அம்பு எதுவும் செய்யவில்லை, அவள் நல்லவள் என்று மேஜர் ரிப்போர்ட் தர, சப்பென்றைாகிவிடுகிறது மதனுக்கு. நல்லவளை நல்லவள் என்று சொல்ல எதற்கு பணம் தர வேண்டும்… என்று கூறி பணம் தர மறுக்கிறான். இதனால் அம்புவுக்கு ஒரு காதலன் இருப்பதாக பொய் கூற ஆரம்பிக்கிறார் மேஜர்.

இறுதியில் அந்தக் காதலன் யார் என்று பார்க்க வெனிசுக்கே புறப்பட்டு வருகிறான் மதன். அதற்குள் மேஜரும் அம்புவும் நிஜமான காதலர்களாக மாறிப் போகின்றனர். மதனை எப்படிச் சமாளிப்பது என்று திட்டம் போடுகின்றனர். விசுவின் பழைய டிராமாக்களை மிஞ்சும் அரதப் பழசான, ஆனால் யாருக்கும் விளங்காத அந்த டிராமாவின் இறுதியில் ஜோடி மாறினாலும் சுபமாக முடிகிறது படம்.

கமல்ஹாஸன் ஹீரோ என்பதற்காகவே வலிந்து திணிக்கப்பட்ட க்ளைமாக்ஸ் இது என்பது சராசரி ரசிகனுக்கும் நன்கு புரியும் அளவுக்கு திரைக்கதையில் பொத்தல்கள்.

கமலைப் பொறுத்தவரை, நடிப்பில் பெரிய சாகஸம் செய்வதற்கான வேடமில்லை இது. படம் ஆரம்பித்து 20 நிமிடம் கழித்து ஒரு உளவு பார்க்கும் முன்னாள் ராணுவ வீரராக வருகிறார். ஆனால் சொல்லிக் கொள்கிற மாதிரி ஒரு காட்சியும் அமையவில்லை அவருக்கு. அவரும் த்ரிஷாவும் சந்திக்கிற, பேசிக் கொள்கிற, கமலின் ப்ரெஞ்ச் மனைவிக்கு நடந்த சோகத்தை பரிமாறிக் கொள்கிற காட்சிகளில் வேட்டையாடு விளையாடு படத்தின் அழுத்தமான சாயல். ஆனால் அவரது அறிமுகத்தின் போது வரும் முதல் சண்டைக் காட்சி நச்சென்று உள்ளது.

கதைப்படி மனைவியை இழந்தவர் கமல்… கணவனை விவாகரத்து செய்தவர் சங்கீதா. ஆனால் திருமணமாகாத த்ரிஷாவை கமலுடன் கோர்ப்பதாக காட்சிகள்.. இதற்கு காரணம் படத்தின் ஹீரோ கமல் என்ற ஒரே விஷயம்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லையே…

லாஜிக், யதார்த்த சினிமா என உபதேசம் படிப்பவர்கள் இப்போது எங்கே போனார்களோ…

த்ரிஷா முகத்தின் வயதின் முகவரி தெரிய ஆரம்பித்துவிட்டது. சொந்தக் குரல் தமிழ் உச்சரிப்பு அதை மன்னிக்க வைக்கிறது.

படத்தின் ஹீரோ எனும் அளவுக்கு நடிப்பில் கலக்கி இருக்கிறார் மாதவன். பாரில் தண்ணியடித்துவிட்டு நாக்குழற தொழிலதிபர் என்ற வார்த்தை அவர் உச்சரிக்கும் விதம்… ஒரிஜினல் குடிகாரனின் பாடிலாங்குவேஜ் அது. ஆனால் அந்த வில்லத்தனம் கலந்த மதனை, இறுதி நெருங்க நெருங்க கோமாளியாக்கிவிடுகிறார் இயக்குநர்.

அதே போல சங்கீதாவும் அனுபவித்து நடித்திருக்கிறார். விவாகரத்து பெற்று, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, எக்க சக்க ஜீவனாம்சத்துடன் வசிக்கும் ஒரு வெளிநாட்டு இந்தியப் பெண்ணை அப்படியே சித்தரிக்கும் அளவுக்கு எக்ஸ்பிரஷனில் கலக்கியிருக்கிறார்.

எப்போதும் ஸ்கிரிப்டுடன் த்ரிஷா பின்னாலே அலையும் அந்த மலையாள தம்பதிகள் எரிச்சலூட்டுகிறார்கள்.

படத்தில் நன்றாக இருக்கிறது என சொல்ல வைப்பவை மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவும் தேவி ஸ்ரீ பிரசாதின் இசையும். ஆனால் அந்த இசையும் கூட சில இடங்களில பஞ்ச தந்திரத்தின் பாதிப்புடன் ஒலிப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கமல்ஹாஸன் அறிவுஜீவிதான் ஒப்புக் கொள்றோம். அதற்காக இப்படியா படம் முழுக்க அலுப்பு சலிப்பில்லாமல் தமிங்கிலத்தில் பேசிக் கொண்டே இருப்பார்கள்… இந்த லட்சணத்தில் ‘மெல்லத் தமிழ் சாகும், தெருப் பொறுக்கும்’ என்ற கவலை வேறு!

சரி.. இந்தக் கதை யார் மீது பயணிக்கிறது? மனைவியை இழந்த கமல் மீதா, அந்த இழப்புக்கு காரணமான த்ரிஷா மீதா அல்லது காதலை மறந்துவிட்டு சந்தேகத்தை மட்டுமே காதலிக்கும் மாதவன் மீதா…? கடைசி வரை எந்த நிலைப்பாட்டிலும் நில்லாமல் அலைபாய்கிறது திரைக்கதை.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றில் எந்த இயல்புத் தன்மையும் இல்லை. முழுக்க முழுக்க நாடகமே. அதனால்தான் படம் ஆரம்பித்ததிலிருந்து ஒத்திகை ஒத்திகை என்று சொல்லிக் கொண்டிருந்தார் போலிருக்கிறது, கமல்ஹாஸன்!

அர்த்தமற்ற, இலக்கு தவறிய அம்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக