சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் கோடைக் காலத்தை குதூகலமாகக் கழிக்கும் வகையில் தமிழக சுற்றுலாத் துறை நடத்தி வந்த கோடைக்கால திருவிழா ஜூன் 13ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை, கோடைகால விடுமுறையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக சென்னை தீவுத்திடலில் கடந்த ஏப்ரல் 31-ந் தேதி முதல் கோடைகால திருவிழா என்ற பெயரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தீவுத்திடலில் அய்யன் அருவி எனப்படும் செயற்கை நீர்வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பொதுமக்களையும், குழந்தைகளையும் அதிக அளவில் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலக அதிசயங்களில் ஒன்றான புகழ் பெற்ற தாஜ்மகாலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்க்க முடியாதவர்கள் இங்கே பார்த்து ரசிக்கலாம்.
இது தவிர தீவுத்திடலுக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக அறுசுவை உணவு வகைகளும் சுடச்சுட குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. பொதுமக்களை ஈர்ப்பதற்காக வெப்ப காற்றழுத்த பிரமாண்ட பலூனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பலூனில் பயணம் மேற்கொள்பவர்கள் 100 அடி உயரத்தில் இருந்து அழகு சென்னையை கண்டு ரசிக்கலாம்.
இது மட்டும் அல்லாமல், இசை நிகழ்ச்சிகளும், பல்வேறு விதமான போட்டிகளும் இடம்பெற்றிருந்தன.
கடந்த 35 நாட்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தீவுத்திடலுக்கு வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திருவிழா வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை கோடைத் திருவிழாவிற்கு செல்லாதவர்கள் இன்னும் ஒரு வார காலமே நடைபெற உள்ள திருவிழாவிற்கு சென்று களித்து வாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக