ஞாயிறு, 20 ஜூன், 2010

ராவணன் – திரை விமர்சனம்

ராவணன் – பட விமர்சனம்

நடிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்வி ராஜ். கார்த்திக், பிரபு, ப்ரியாமணி, ரஞ்சிதா

ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்

இசை: ஏ ஆர் ரஹ்மான்

பிஆர்ஓ: நிகில் முருகன்

இயக்கம்: மணிரத்னம்

தயாரிப்பு: மணிரத்னம் – ஷாரதா திரிலோக்
நல்லவன் வாழணும் கெட்டவன் அழியணும் என்பது பொது நியதி. ஆனால் கெட்டவன் வாழ்வதும் நல்லவன் அழிவதும், ராவணன் படத்தில் சொல்லப்பட்டுள்ள மணிரத்ன நியதி.

வழக்கம்போல நடப்பு செய்திகள் மற்றும் காப்பிய சம்பவங்களிலிருந்து ஒரு கதையைத் தயார் செய்துள்ளனர் மெட்ராஸ் டாக்கீஸ் கதை இலாகாவினர்!

மகாபாரதம், சத்யவான் சாவித்ரி, மும்பை வெடிகுண்டு சம்பவம், உல்பா விவகாரம், திருபாய் அம்பானி கதை… இந்த வரிசையில் இப்போது ராமாயணத்தையும் சந்தனக் காட்டு ராஜா வீரப்பன் கதையையும் கலந்தடித்து ராவணனாக்கியிருக்கிறார் மணிரத்னம்.

மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை வைத்து படங்களை உருவாக்குவது கூட ஒரு தனி பாணிதான்… ஆனால் ராவணன் விஷயத்தில், அடுத்தடுத்த காட்சிகளை பார்வையாளர்கள் போகிற போக்கில் கணித்துவிடக் கூடிய அளவுக்கு சுவாரஸ்யமற்ற திரைக்கதை கவிழ்த்துவிடுகிறது. இன்னொன்று, ஒரே திரைப்படத்தை மூன்றென்ன, முப்பது மொழிகளில் கூடத் தரலாம்… ஆனால் அந்தந்த மொழிக்குரிய நியாயத்தை செய்தே தீர வேண்டும். மணிரத்னம் படங்கள் பெரும்பாலானவற்றில் இது மிஸ்ஸிங்!



அம்பாசமுத்திரம் அருகே ஒரு மலைக்கிராம பழங்குடி மக்களுக்கு எல்லாமுமாக இருப்பவர் விக்ரம் (உருவகப்படி ராவணன் – வீரப்பன்). அண்ணன் பிரபு (அதாவது கும்பகர்ணன்- மாதையன்), தம்பி முன்னா (விபீஷணன் – வீரப்பன் தம்பி அர்ஜூனன்), தங்கை ப்ரியாமணி (சூர்ப்பனகை) என உறவுகளுடன் நானே ராஜா நானே மந்திரி ஸ்டைலில் வலம் வருகிறார்.

ஊருக்காக எல்லாம் செய்கிறான்… அவனுக்காக ஊர் எல்லாவற்றையும் இழக்கத் தயாராகிறது. ஆனால் சட்டம் அவனை வேட்டையாடத் துடிக்கிறது.

வீராவைச் சுட்டுக் கொல்ல சிறப்பு அதிரடிப்படை வருகிறது, பிருத்வி ராஜ் (அதாவது ராமன்) என்ற அதிகாரி தலைமையில். தேவின் காதல் மனைவி ஐஸ்வர்யா ராய் (சீதா). இந்த ராம சேனையில் அனுமாராக, அதே சேட்டைகளுடன் கார்த்திக் வருகிறார்.

அப்போது விக்ரமின் தங்கை திருமணம் நடக்கும்போது அதிரடிப்படை நுழைகிறது. விக்ரமுக்கு பிருத்வி குறி வைக்க, காயத்துடன் அவர் தப்பிக்கிறார்.

உடனே ப்ரியாமணியைத் தூக்கிப் போகும் அதிரடிப்படை, அவளை சிறைக்காவலில் வைத்தே கூட்டாகக் கற்பழிக்கிறது. வீடு திரும்பும் அவள் அண்ணனிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.

கடும் கோபத்துடன் கிளம்பும் விக்ரம், பிருத்வியைப் பழவாங்க, அவன் மனைவி ராகினியை கடத்தி, காட்டுக்குள் பதுக்குகிறார். அங்கே ஆரம்பிக்கிறது சேஸிங். மனைவியைத் தேடி பெரும் படையுடன் காட்டுக்குப் போகிறார் பிருத்வி.

இங்கோ… தான் கடத்தி வந்த ஐஸ்வர்யா ராயின் அழகில் தன்னை இழக்கும் விக்ரம், அடுத்தவன் மனைவி என்று தெரிந்தும் அவர் மீதுள்ள மோகத்தைச் சொல்கிறார்.

ப்ரியாமணிக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்த பின் விக்ரம் மீது அனுதாபம் பிறக்கிறது ஐஸுக்கு.

ஒரு கட்டத்தில் விக்ரமின் தம்பியையும் பிருத்வி கொல்கிறார். இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் விக்ரமும் ப்ருத்வியும் கடுமையாக மோதுகிறார்கள். கடைசியில், ஐஸுக்காக பிருத்வியைக் கொல்லாமல் விடுகிறார் விக்ரம். ஐஸை விடுவித்து கணவனுடன் அனுப்பிவிடுகிறார்.

கணவனோடு ரயிலில் ஊர்திரும்பிக் கொண்டிருக்கும் ஐஸின் கற்பைச் சந்தேகப்படுகிறார் பிருத்வி. இதனால் மீண்டும் விக்ரமிடமே திரும்புகிறார்… அதன் பிறகு.. யோசனைக்கு வேலை வைக்காத சாதாரண க்ளைமாக்ஸ்தான்!

படத்தில் நிறைய ஏன்? எதற்கு? எப்படி? கேள்விகள்… என்னதான் மணிரத்னம் படம் என்றாலும் இந்தக் கேள்விகள் புறந்தள்ள முடியாதவையும் கூட!

நேட்டிவிட்டி என்ற ஒரு விஷயத்தை எப்போதும்போல இந்தப்படத்திலும் கோட்டைவிட்டுள்ளார் மணிரத்னம்… இதை அவர் தெரியாமல் செய்கிறாரா அல்லது காட்சியை அழகாகக் காட்டினால் போதும் என்ற நினைப்பில் கண்டுகொள்ளாமல் விடுகிறாரா? இல்லையெனில் அம்பையில் நடக்கும் கல்யாணத்தின் பின்னணியில் வடநாட்டு ஸ்டைல் மாளிகைகள், கோபுரங்கள்… நெல்லைச் சீமையின் சற்றே வளர்ந்த கிராமமான அம்பையில் ஏது இதெல்லாம்..!

காட்டருவி… கட்டற்று ஓடும் வெள்ளம்… நடுவே ஒரு மெகா சிலை, இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு அவை தனியாக நிற்கும் நிலையில். பார்த்தவுடன் பளிச்சென்று தெரிகிறது இது செட்டப் சமாச்சாரமென்பது.

அந்த அடர் காட்டில் விக்ரமின் இருப்பிடமோ நீரில் மிதக்கும் கோட்டை கொத்தளம் மாதிரி. நாயகனோ போலீசால் தேடப்படும் ஒரு குற்றவாளி… சமீர் சந்தாவின் கலை இயக்கம் படத்தை ரொம்பவே அந்நியமாக்கிவிடுகிறது. கிட்டத்தட்ட படத்தின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கும் விஷயம் இது.


திருநெல்வேலித் தமிழ் இத்தனை கொடூரமானதா என் சந்தேகத்தையே எழுப்பி விட்டது சுஹாஸினி படத்தில் வைத்திருக்கும் ஸ்லாங்கைப் பார்த்து!

மேட்டுக்குடி, வீர்ர்ரைய்ய்ய்யாயா, எஸ்ஸ்ப்ப்பீபீபீ, ஆஆஆஆ, ப்பக் ப்பக் ப்பக், டன்டன்டன்டன்…. சுஹாஸினியின் அறிவுஜீவித்தனமான இந்த டயலாக்குகள் படத்தில் எத்தனை முறை வருகின்றனவென்று அவர்தான் எண்ணிச் சொல்ல வேண்டும்!

தங்கையைக் கொன்றவனைப் பழிவாங்க, அவன் மனைவியைக் கடத்தி வந்த வீரய்யா, அடுத்த இரண்டு நாட்களில் மாற்றான் மனைவியைப் பெண்டாளத் துடிப்பது, அந்த பாத்திரத்தின் மீதான மரியாதையையே சிதைக்கிறதே… அல்லது வீரய்யா போன்ற பழங்குடிகளுக்கு பாசம், சோகமெல்லாம் கிடையாது… சாவு வீட்டிலும் அழகான பெண்ணைப் பார்த்தால் ரொமான்ஸுக்கு அலைவார்கள் என நிரூபிக்க முயல்கிறார்களா…

அட, கூடப் பிறந்த தம்பியை அதே போலீஸ்காரன் போட்டுத் தள்ளியும் கூட, அவன் மனைவி மீது கொண்ட ஆசையால், அவனைத் தப்பிக்க வைக்கிறான் ஹீரோ என்பதாக வரும் காட்சியை ஏற்க முடியவில்லை.

ரஹ்மான் இசையில், எல்லோரும் ஓஹோவென்று கொண்டாடும் உசுரே போகுதே… பாடல் படத்தில் எந்த பாதிப்பையும் தரவில்லை. அடுத்தவன் மனைவியைக் கடத்தி வந்த சில நிமிடங்களுக்குள், அவள் மீது மோகம் முற்றிப் போய் உசுரே போகுதே என்று பாடுவது எந்த ஊர் நியாயம்? பெருத்த ஏமாற்றம்தான் மிச்சம். பின்னணி இசையும் எதிர்ப்பார்த்தபடி இல்லை. கெடாக்கறி பாட்டு ஓகே. அதென்ன… நாயகனிலிருந்து சொல்லி வைத்த மாதிரி இந்த ரகப் பாடல்களில் எல்லோரும் சகதி பூசிக் கொண்டு ஆடுகிறார்கள்!

எந்தக் காட்சியிலும், இது தமிழகத்தில் நடக்கிற ஒரு சம்பவம் என்ற உணர்வே வரவில்லை. அதுதான் மிகப் பெரிய மைனஸ்.

எத்தனை சிறுபிள்ளைத்தனமான க்ளைமாக்ஸ் பாருங்கள்… பெரும் இக்கட்டிலிருந்து மனைவியைக் கூட்டிக் கொண்டு ரயிலில் ஊருக்குப் போகிறான் கணவன். வழியில் மனைவியின் கற்பைச் சந்தேகிக்கிறான். 14 நாட்கள் அவனுடன் இருந்தாயே… உன்னைத் தொடாமல் விட்டுவைத்திருப்பானா? என்று கேட்க, அங்கேயே சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி இறங்குகிறாள். அங்கிருந்து நேராக விக்ரமிடம் போகிறாள்.. ‘என் கணவன் என்னைச் சந்தேகப்படுகிறான்… என்ன சொன்னாய் அவனிடம்…?’ என்று கேட்க.

இது சாத்தியமா… காட்டில் எங்கோ மறைந்து வாழும் ஒருவன் வீரா… இவளுக்கோ அந்த இடத்தின் வழிகூடத் தெரியாது.. அட போங்கய்யா நீங்களும் உங்க லாஜிக்கும்!

படத்தில் சில நிறைகளும் உண்டு…

அதில் முதலில் நிற்பது சந்தோஷ் சிவனின் அசாதாரண ஒளிப்பதிவு. தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு அருமை. மலைகள், அருவிகள், காட்டு வழிகள், அந்த எரியும் பாலம், ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் அருவியில் விழும் காட்சி என அனைத்தையுமே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பார்க்கும் நமக்கே மனசு ஜில்லிடும் அளவு அசத்தலான ஒளிப்பதிவு.

அடுத்து விக்ரமின் நடிப்பு. விக்ரமுக்கு பெரிய ஸ்கோப் இல்லாத பாத்திரம் இது. ஆனால் அதற்காக அவர் உழைத்துள்ள உழைப்பு சாதாரணமானதல்ல. விக்ரம் போன்ற நல்ல கலைஞர்களுக்கு இப்படி நேர்வதும் இயற்கைதான். உண்மையில் விக்ரம் இதைவிடச் சிறப்பான பல ரோல்களில் கலக்கியவர். அவற்றுக்கு முன் வீரா ஒன்றுமேயில்லை.

ஐஸ்வர்யாராயின் தோளில்தான் பெரும்பகுதி சுமையை இயக்குநர் இறக்கி வைத்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சி தவிர, மற்ற இடங்களில் ஐஸின் அழகு, அந்த அதிரப்பள்ளி அருவியை விட ஜில்!

பிருத்விராஜ் எதற்காக கத்திக் கொண்டே திரிகிறார்… அவருடன் கார்த்திக் ஏன் குரங்கு சேட்டை பண்ணிக்கொண்டே அலைகிறார் என்பதெல்லாம் இயக்குநருக்கே வெளிச்சம்!

பிருத்விராஜுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், ஜூவாலஜி எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை. ப்ரியாமணிக்கு தந்திருப்பது சூரப்பனகை வேடம்தான் என்பதைச் சுட்டிக்காட்ட மூக்கைப் பிடித்து ‘அறுத்துவிடட்டுமா’ என்பதெல்லாம்… மணிரத்னம் படமா இது என கேட்க வைக்கிறது.

கம்பீர எண்ட்ரிக்கு காத்திருந்த கார்த்திக்கை காமெடி பீஸாக்கிவிட்டிருக்கிறார் மணி ரத்னம். பிரபுவை மகா குண்டாகக் காட்டியுள்ளார். ஆனாலும் மனிதர் நடிப்பு இயல்பாகவே உள்ளது.

பெரிய பில்டப் தரப்பட்ட ரஞ்சிதாவை ஸ்கிரீனில் தேட வேண்டியிருக்கிறது. ஒரு மசாஜ், ஒரு குளியல் காட்சியுடன் அவர் கதையை முடித்துவிட்டார்கள் போலிருக்கிறது.

இந்தப் படத்தில் மணிரத்னத்தின் பங்களிப்பு என்று எதுவும் இல்லை. தளபதி, நாயகன், பம்பாய் என அவரது முந்தைய படைப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தப் படம் ஒன்றுமே இல்லைதான். ஆனால் படமாக்கப்பட்ட விதம், ஐஸ்வர்யா ராய், விக்ரம் என சில நியாயமான காரணங்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்!

சாதாரண படம், சில அசாதாரண காட்சியமைப்புகளுடன்!
-கண்ணாடி புத்தகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக