ஞாயிறு, 6 ஜூன், 2010

2030 க்குள் தூத்துக்குடி, சென்னை அழியும் அபாயம் - நெல்லை பேராசிரியர்!

நெல்லை: உலக வெப்பமயமாதலால் 2030க்குள் தூத்துக்குடி மற்றும் சென்னையின் ஒரு பகுதி கடலில் முழ்கும் அபாயம் இருப்பதாக நெல்லை பேராசிரியர் தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சுற்று சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நேற்று நடந்தது. அறிவியல் மைய அலுவலர் சீதாராமன் தலைமை வகித்தார்.

பாளை ஜான்ஸ் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆல்பர்ட் ராஜேந்திரன் சுற்று சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசுகையில்,

இந்த உலகம் தோன்றி 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதில் மனித இனம் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அப்போது இயற்கையோடு ஓன்றி மனிதர்கள் வாழ்ந்ததால் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது மக்கள் தொகை பெருக்கத்தாலும், தேவை அதிகரிப்பதாலும் சுற்று சுழலை மாசுபடுத்தி வருகின்றன.

உலகில் மனித இனத்தோடு சேர்ந்து 10 மில்லியன் உயிரினங்கள் உள்ளன. இதில் பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. டைனோசர் உள்பட பல்வேறு உயிரினங்கள் இந்த பூமியில் இல்லாமல் அழிந்து விட்டன.

தற்போது உலக வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றங்கள் போன்ற பிரச்சனைகள் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. பனி பிரதேசங்களில் பனி மலைகள் உருகுவதால் கடல்நீர் மட்டம் படி படியாக உயர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் மிகப்பெரும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 2030க்குள் தூத்துக்குடியே இருக்காது எனவும், சென்னையின் ஒரு பகுதி கடலில் மூழ்கி விடும் எனவும் அதிர்ச்சி தகவல்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

எனவே சுற்று சூழலை பாதுகாக்கவும், உலக வெப்பமயமாதலை தடுக்கவும் அனைவரும் பாடுபட வேண்டும். அதிகளவில் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும். மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக