சென்னை: சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக சி.பி. சி.ஐ.டி. போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை, வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் பள்ளி, கல்லூரிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் முன் கஞ்சா சாக்லெட்டுகள் விற்பதாக தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் அக்கல்லூரிக்கு விரைந்து சென்ற போலீசார் ராணிப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் (28) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இவர் கஞ்சா சாக்லெட்டுகளை 1 ரூபாய் மினி சாக்லெட் மற்றும் 50 ரூபாய் பெரிய சாக்லெட் என 2 விதமாக தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார்.
விசாரணையில் ஆனந்தன் கொடுத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்ட வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுபாஷ் மற்றும் திருவொற்றியூரை சேர்ந்த பாண்டியன் ஆகியோரிடமிருந்து 7 கிலோ கஞ்சா சாக்லெட்கள் கைப்பற்றப்பட்டது.
வடபழனியில் கடந்த மார்ச் மாதம் கஞ்சா பொட்டலங்களை பதுக்கியது தொடர்பாக பஷல் பாண்டியனும், அவரது மனைவி சந்திராவும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கஞ்சா பொட்டலங்களை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆயில் டேங்கரில் வைத்து கடத்தியுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தன், சுபாஷ், பாண்டியன் ஆகிய 3 பேரும் சந்திராவிடம் இருந்துதான் கஞ்சா பொட்டலங்களை வாங்கியதாக போலீசாரிடம் கூறியுள்ளனர்.
கஞ்சா சாக்லெட்டுகள் தயாரிக்கும் முறை குறித்து இக்கும்பல் அளித்துள்ள வாக்குமூலம்:
கஞ்சா பொட்டலங்களை மொத்தமாக வாங்கிக் கொள்வோம். முதலில் அதை பொடியாக்கி பின்னர் சாக்லெட் பவுடர் மற்றும் சாக்லெட் எசன்ஸ் ஆகியவற்றுடன் கலந்து சிறுசிறு துண்டுகளாக்குவோம்.
கஞ்சா வாசனை வராமல் இருக்க ஏலக்காய், லவங்கம், பட்டை ஆகியவற்றை பொடி செய்து அதனுடன் சேர்த்து விடுவோம். இந்தக் கலவையுடன் தேவைக் கேற்ப சர்க்கரையை சேர்த்துவிட்டால் கஞ்சா சாக்லெட்கள் தயாராகிவிடும்.
இதனை பள்ளி, கல்லூரிகள் அருகில் இருக்கும் பெட்டிக் கடைகளில்தான் விற்பனையை தொடங்குவோம். முதலில் 1 ரூபாய் மினி சாக்லெட்டுகளைத்தான் பெட்டிக் கடைகளுக்கு சப்ளை செய்வோம். பெட்டிக் கடைகளில் இதனை மாணவர்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அதனை கேட்கும்போது மினி சாக்லெட் சப்ளையை நிறுத்திவிட்டு 50 ரூபாய் சாக்லெட்டுகளை மடடும் கொடுப்போம்.
இந்த வகை சாக்லெட்டுகளை விற்பனை செய்யும் பெட்டிக்கடைக்காரர்களை விலை கொடுத்து வாங்கி விடுவோம். அதனால் அவர்கள் கஞ்சா சாக்லெட்டுகளை மற்ற சாக்லெட்டுகளுடன் சேர்த்து விற்று விடுவார்கள் என்று தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக