வியாழன், 15 ஏப்ரல், 2010

பாங்க் ஆப் இந்தியா வைப்பு நிதிக்கு வட்டி குறைப்பு!


வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் வேளையில், பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா, வைப்பு நிதிக்கான வட்டியை முக்கால் விழுக்காடு வரை குறைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி வரும் 20 ஆம் தேதி காலாண்டு கொள்கை அறிக்கையை வெளியிட உள்ளது. இதில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று தெரிகிறது.

இந்நிலையில் பாங்க் ஆப் இந்தியா ரூ.1 கோடிக்கும் அதிகமான வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியை முக்கால் விழுக்காடு குறைத்துள்ளது. இது புதிய வைப்பு நிதிக்கும், 15 ஆம் தேதியில் இருந்து புதுப்பிக்கப்படும் பழைய வைப்பு நிதிக்கும் பொருந்தும்.

தற்போது பாங்க் ஆப் இந்தியா ரூ.1 கோடி, அதற்கும் மேலான வைப்பு நிதி 1 வருடம் அல்லது இரண்டு வருடங்களில் முதிர்ச்சி அடைந்தால் 6.75 விழுக்காடு வட்டி வழங்குகிறது. இனி வட்டி 6 விழுக்காடு வழங்கப்படும்.

இரண்டு வருடங்களுக்கு அதிகமாகவும், 3 வருடங்களுக்குமான வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி 6.75 விழுக்காட்டில் இருந்து 6.25 விழுக்காடாக குறைக்கப்படும் என்று வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக