திங்கள், 26 ஏப்ரல், 2010
யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் பாடல் திருவள்ளுவர்! - இளையராஜா
சென்னை: படிக்கும்போதே புரிந்து கொள்ளும் அளவு எளிய செய்யுள் அமைப்பு திருக்குறள். அதற்கு தனியான விளக்கமெல்லாம் தேவையில்லை என்று கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.
கவிஞர், திரைப்படாலாசிரியர் பூவை செங்குட்டுவன் எழுதி இசை அமைத்துள்ள 'குறள் தரும் பொருள்' ஆடியோ சிடியை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார் இளையராஜா. சென்னை ஆழ்வார்ப்பேட்டை நாரத கான சபாவில் இந்த விழா நடந்தது.
இளையராஜா பேசுகையில், "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறளை, அனைத்து மக்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இசை வடிவில் கொண்டு வத்தமைக்காக கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
1969-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். சங்கிலி முருகன் நாடகத்துக்கு இசையமைப்பாளராக இருந்தபோது 'நான் உங்கள் வீட்டு பிள்ளை...' என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த பாடலை எழுதிய கவிஞர் செங்குட்டுவனை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.
நான் முதன் முதலில் சினிமாவில் கவிஞர் செங்குட்டுவனின், 'ஊரும் பழனியப்பா, பெயரும் பழனியப்பா, ஆறுதலை வேண்டுகிறேன் ஆறுமுக சாமியப்பா' என்ற பாடலுக்கு தான் இசையமைத்தேன். அவர் எனது மூத்த சகோதரர் போன்றவர்.
திருக்குறள் உண்மையிலேயே மிக எளிய கட்டமைப்பு கொண்டது. படித்ததும் புரிந்து கொள்ளும் செய்யுள் வடிவம் அது" என்றார்.
கவிஞர் பூவை செங்குட்டுவன் பேசுகையில், "திருக்குறளுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலான உரைகளைப் படித்து, ஆனால் மு.வ. வின் விளக்கத்தை அடிப்படையாக வைத்து 8 மாதம் பாடல்களை எழுதினேன். இரண்டரை ஆண்டுகளாக முயன்று இசை வடிவாக மாற்றியுள்ளேன். சினிமாவில் குறைவான பாடல்களாக இருந்தாலும் நிறைவான பாடல்களை வழங்கிய மனநிறைவு உள்ளது.." என்றார்.
நடிகர் விவேக் பேசுகையில், "திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்தும் உருகார்' என்பர். அந்தத் திருவாசகத்தை இசை வடிவில் மக்களிடம் சேர்த்தவர் இளையராஜா அந்த வகையில் குறள் தரும் பொருளும் வெற்றி பெறும். 133 அதிகாரத்தில் உலகை அடக்கியவர் திருவள்ளுவர் ஆகையால் தான் சமயம், இனம், மொழி அனைத்தையும் கடந்து உலகப் பொதுமறையாக உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் பல மணி நேரம் வீடியோ கேம், கம்ப்யூட்டர், லேப்டாப் என்று மாறிவிட்டதால், ஒரு குறளையாவது டைப் செய்தால் தான் அவை இயங்கும் என்ற நிலை வந்தால் எளிதில் திருக்குறள் அவர்களை சென்றடையும்' என்றார்.
இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், எஸ் வி சேகர், நடிகர் உதயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக